(என்.வீ.ஏ.)

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் நடத்தப்படும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கிண்ண சர்வதேச அழைப்பு கால்பந்தாட்டத்தின் இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கு முதலாவது அணியாக சிஷெல்ஸ் தகுதிபெற்றுக்கொண்டது.

கொழும்பு, குதிரைப் பந்தயத் திடலில் இன்று பிற்பகல் நடைபெற்ற மாலைதீவுகளுடனான தீர்மானம் மிக்க போட்டியை வெற்றிதோல்வியின்றி முடித்துக்கொண்டதன் மூலம் சிஷெல்ஸ், இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றது.

அப் போட்டியில் அவ்வப்போது பரபரப்பு ஏற்பட்டபோதிலும், மைதானம் ஈரழிப்புத் தன்மையைக் கொண்டிருந்ததால் இரண்டு அணியினராலும் தொடர்ச்சியாக திறமையை வெளிபபடுத்த முடியாமல் போனது.

இரண்டு அணிகளும் வெற்றி கோலை போட எடுத்த முயற்சிகளும் பலனற்றுப் போயின.

போட்டியின் 77ஆவது நிமிடத்தில் சிசெல்ஸ் வீரர் மார்க் ஜெனாரோ மெத்தியோட் முரணாக விளையாடியதன் காரணமாக மத்தியஸ்தர் நிவொன் ரொபேஷின் இரண்டாவது மஞ்சள் அட்டைக்கு இலக்காகி அரங்கை விட்டு வெளியேற்றப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து 10 வீரர்களுடன் விளையாடிய சிஷெல்ஸ் அணியினர், போட்டியை வெற்றிதோல்வியின்றி முடித்துக்கொண்டால் போதும் என்பதை நினைவில் நிறுத்தி தடுத்தாடும் உத்தியைக் கையாண்டு அதனை நிறைவேற்றிக்கொண்டனர்.

இறுதியில் எந்த அணியினாலும் கோல் போட முடியாமல் போக ஆட்டம் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தது.

ஏற்கனவே ஒரு வெற்றி, ஒரு வெற்றிதோல்வியற்ற முடிவு என்ற பெறுபேறுகளைக் கொண்டிருந்த சிஷெல்ஸ் 7 புள்ளிகளுடன் இறுதிப் போட்டியில் விளையாடத் தகுதிபெற்றது.

ஆட்டநாயகனாக சிஷெல்ஸ் அணித் தலைவர் ஸ்டீவ் பெனொய்ட் மாரி தெரிவானார்.