(லியோ நிரோஷ தர்ஷன்)
ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்கு பின்னர் ஏற்பட்டுள்ள தலிபான்களின் ஆட்சியை தொடர்ந்து பிராந்திய அமைதி குறித்து நாடுகளுக்கிடையில் சஞ்சலமான நிலைமைகள் தோற்றுவித்துள்ளன.
தலிபான்களின் ஆட்சி குறித்து கூர்மையாக அவதானித்து வந்த இந்தியா கடந்த வாரத்தில் தலிபான்கள் ஆட்சிக்கு பின்னரான பிராந்திய பாதுகாப்பு நிலைமை குறித்து ஆராயும் டெல்லி மாநாட்டை நடத்தியது.
இந்த மாநாடானது இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவால் தலைமையில் இடம்பெற்றது.
பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மை இரண்டும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது. பாதுகாப்பு இருந்தால், ஸ்திரத்தன்மை இருக்கும்.

உறுதியற்ற தன்மையுடன், எந்த ஒரு நாடும் பாதுகாப்பாக இருக்க முடியாது. மற்றவர்களையும் பாதுகாப்பாக வைத்திருக்க முடியாது என்று டெல்லி மாநாட்டில் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டி ஆப்கானுக்கான இந்திய முன்னாள் தூதுவர் ராகேஷ் சூட் குறிப்பிட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆட்சி காரணமாக ஏற்பட்ட சவால்கள், நாட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் தீவிரவாதம், போதைப்பொருள் உற்பத்தி, கடத்தல், அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளால் விட்டுச்செல்லப்பட்ட ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டால் ஏற்படும் சவால்களை சமாளிப்பதற்கான பிராந்திய பாதுகாப்பு ஆகியவை குறித்தும் டெல்லி மாநாட்டில் கவனம் செலுத்தப்பட்டிருந்தது.
ரஷ்யா, ஈரான், உஸ்பெகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான் பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டிருந்தனர்.
மாநாட்டின் முடிவில் 'ஆப்கானிஸ்தான் மீதான டெல்லி பிரகடனம்' என்ற 12 அம்ச அறிக்கை வெளியிடப்பட்டது. ஆப்கானிஸ்தானின் நிலம் பயங்கரவாதத்திற்கு ஆதரவளிக்கும் எந்த ஒரு நடவடிக்கையோ, பயிற்சியோ, திட்டமிடலோ அல்லது நிதி உதவிகளோ முன்னெடுக்கப்படக்கூடாது என்பதை வலியுறுத்தியிருந்த 12 அம்ச அறிக்கைக்கு மாநாட்டில் கலந்து கொண்ட அனைத்து நாடுகளும் ஏகமனதாக ஒப்புதல் வழங்கின.
ஆனால் சீனாவும், பாகிஸ்தானும் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளவில்லை. மறுபுறம், ஆப்கானிஸ்தான் தொடர்பான கூட்டமொன்றை பாகிஸ்தான் நவம்பர் 11ஆம் திகதி நடத்தியது. இதில் ரஷ்யா, அமெரிக்கா மற்றும் சீனாவின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
இந்தியாவில் நடந்த சந்திப்பில் கலந்து கொள்ளாத சீனா, பாகிஸ்தானின் கூட்டத்திற்கு தனது பிரதிநிதியை அனுப்பியது. அதேநேரம், இரண்டு கூட்டங்களிலும் பங்கேற்ற ஒரே நாடு ரஷ்யா மாத்திரம் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் மெஹ்மூத் குரேஷ் கடந்த மாதம் ஆப்கானிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். இதன்போது பாகிஸ்தானில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்குமாறு தலிபான் வெளியுறவு அமைச்சருக்கு அழைப்பு விடுத்தார்.

ஆனால் தலிபான்களுக்கு டெல்லி மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. மற்றுமொரு முக்கியமான விடயம் என்னவென்றால், தலிபான் அரசை இதுவரை பாகிஸ்தான் அங்கீகரிக்கவில்லை.
ஆனால் தலிபான் அதிகாரிகள் இஸ்லாமாபாத்தில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரகத்தில் பணிபுரிகின்றனர். இதனடிப்படையில் தலிபான் விடயத்தில் இந்தியா – பாக்கிஸ்தான் அணுகு முறைகளின் தன்மை வெளிப்படுகின்றது.
அதேபோன்று இந்தியா - பாகிஸ்தான் உறவுகள் எப்படி இருக்கிறது என்பதற்கு இந்த இரு கூட்டங்களும் சாட்சி பகிர்கின்றன.
இந்தியாவில் நடந்த மாநாட்டில் பங்கேற்க மறுத்த பாகிஸ்தான், சீனா, ரஷ்யா, அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகளுக்கும் மற்றும் தலிபானுக்கு அழைப்பை அனுப்பியது.
நிதி மற்றும் வர்த்தக விவகாரங்களுடன், தலிபான் அரசுடனான உறவுகள், அகதிகள், பொது மக்களின் பயணம் தொடர்பான விடயங்கள், பாகிஸ்தானில் நடைபெறும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக அந்நாடுகள் வெளியிட்ட கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுபோன்ற பலதரப்பு கூட்டம் ஆப்கானிஸ்தானின் வளர்ச்சியின் சவால்களை புரிந்து கொள்ளவும், அதை எவ்வாறு கையாள்வது என்பது பற்றி விவாதிக்கவும் உதவுகிறது.
இது நீண்ட காலத்திற்கு அங்கு அமைதியை மீட்டெடுப்பதற்கு உதவும் என ரஷ்ய பிரதிநிதி நிகோலாய் பெட்ருஷேவ் டெல்லி மாநாட்டில் குறிப்பிட்டார்.
அதேநேரத்தில், தலிபான் அரசு அனைத்து தரப்பையும் 'உள்ளடக்கியதாக' இல்லை என ஈரான் பிரதிநிதி குற்றம்சாட்டினார். அகதிகள் பிரச்சனையாக இருந்தாலும் சரி, புலம்பெயர்ந்தோர் பிரச்சனையாக இருந்தாலும் சரி, எல்லா தரப்பினரும் அரசில் பிரதிநிதித்துவம் பெற்றால்தான் அனைத்திற்கும் தீர்வு காண முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மட்டத்தில் இதுபோன்ற பேச்சு வார்த்தை நடத்தப்படுவது இது மூன்றாவது முறையாகும்.
இதற்கு முன்பு 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் ஈரான் இது போன்ற ஒரு மாநாட்டை நடத்தியது. அந்த இரண்டு கூட்டங்களிலும் இந்தியா இடம்பெறுவதற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்ததோடு, தானும் பங்கேற்கவில்லை.
இதேபோன்று டெல்லி மாநாட்டிலும் கலந்துகொள்ள பாகிஸ்தானுக்கும் இந்தியா அழைப்பு விடுத்திருந்தது.
ஆனால், 'சூழ்நிலையை சீர்குலைப்பவர் அமைதியை நிலைநாட்ட முடியாது' என்று கூறி, பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மொயீத் யூசுப் இந்த கூட்டத்தில் பங்கேற்க மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.