(இராஜதுரை ஹஷான்)

நாடுதழுவிய ரீதியில் உள்ள அரச மற்றும் தனியார் பாடசாலைகளின் 6,7,8 மற்றும் 9 ஆகிய தரங்களின் கல்வி செயற்பாடுகள் எதிர்வரும் 22ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார்.

2021ஆம் ஆண்டுக்கான தேசிய பரீட்சைகளுக்கான வினாத்தாள்களைத் தயாரிக்கும் போது, பாடத்திட்டங்களின் எண்ணிக்கை ஒருபோதும் குறைக்கபடமாட்டாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கல்வி அமைச்சின் செயலாளருக்கும், கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கும் நேற்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையின்போது அத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கு அமைய பாடசாலைகளை கட்டம் கட்டமாக திறக்கும் நடவடிக்கை கடந்த மாதம் 21ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டது. 

200 மாணவர்களுக்கும் குறைவான மாணவர்களை உள்ளடக்கிய ஆரம்ப பிரிவு மாணவர்கள் உள்ள பாடசாலைகள் கடந்த 21ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டன.

200இற்கும் அதிகமான மாணவர்கள் உள்ள ஆரம்ப பிரிவு பாடசாலைகளின் கற்றல் நடவடிக்கைகள் கடந்த 25ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டன.

அதனைத்தொடர்ந்து உயர்தரம் மற்றும் சாதாரணதர மாணவர்களுக்கான கல்வி செயற்பாடுகள் கடந்த 8 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டன.

சுகாதார அமைச்சின் பரிந்துரைக்கமைய 6,7,8 மற்றும் 9ஆம் தர மாணவர்களுக்கான கல்வி செயற்பாடுகளை எதிர்வரும் 22ஆம் திகதி முதல் சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்கள்களுக்கு அமைய ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டுக்கான தேசிய பரீட்சைகளுக்கான வினாத்தாள்களைத் தயாரிக்கும் போது பாடத்திட்டங்களின் எண்ணிக்கை ஒருபோதும் குறைக்கப்படமாட்டாது.

இவ்வாண்டுக்கான தேசிய பரீட்சை வினாத்தாள் தயாரிப்பில் பாடத்திட்டங்களின் எண்ணிக்கை குறைக்கப்படும் என வெளியாகியுள்ள செய்தி அடிப்படையற்றது.

2021 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுதராதர உயர்தரம் மற்றும் சாதாரன பரீட்சைகளுக்கு தயாராகுவதற்கு பரீட்சாத்திகளுக்கு போதுமான காலவகாசம் வழங்கப்பட்டுள்ளன. ஆகவே பாடத்திட்டங்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டிய தேவை கிடையாது.

பாடசாலை மாணவர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி செலுத்தும் பணிகள் சிறந்த முறையில் முன்னெடுக்கப்படுகின்றன. இதுவரையில் சுமார் 10 இலட்சம் மாணவர்களுக்கு பைஸர் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன என்றார்.