(எம்.மனோசித்ரா)

மாகாணசபை முறைமையை நீக்குவது தொடர்பில் எந்தவொரு கலந்துரையாடலும் முன்னெடுக்கப்படவில்லை. அவ்வாறானதொரு நிலைப்பாட்டில் அரசாங்கம் இல்லை. இதுபோன்ற யூகங்கள் நியாயமற்றவையாகும் என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,  

மாகாணசபை முறைமையை நீக்குவது தொடர்பில் எந்தவொரு கலந்துரையாடலும் முன்னெடுக்கப்படவில்லை. எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் செயற்பாடுகள் பூரணமடையாமையின் காரணமாக கடந்த அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள 2017 (17) மாகாணசபை திருத்த சட்டமூலம் செயற்திறனற்றதாகவுள்ளது.

எனவே மீண்டும் அந்த சட்ட மூலத்தை பலப்படுத்த வேண்டும். அவ்வாறில்லை எனில் புதிய சட்டமூலத்தை தயாரிக்க வேண்டும். அத்தோடு எல்லை நிர்ணய செயற்பாடுகள் பூரணமடைய வேண்டும். அதனை விடுத்து பங்காளி கட்சிகள் என்ற ரீதியிலோ அல்லது வேறு தரப்பினரோ மாகாணசபை முறைமையை நீக்குமாறு எந்தவொரு கோரிக்கையையும் முன்வைக்கவில்லை.

இது யாருடையதேனும் யூகமாக இருக்கலாம். மாகாணசபை தேர்தல் முறைமை தொடர்பில் பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. சபைமுதல் தினேஷ் குணவர்தன அதன் தலைவராக செயற்பட்டு வருகின்றார். அவர் பாராளுமன்றத்தில் யோசனையொன்றை முன்வைத்து மேலும் இரு மாதங்களுக்கு மாகாணசபையின் காலத்தை நீடித்துள்ளார்.

கொவிட் நிலைமை உள்ளிட்ட காரணிகளால் இது தொடர்பில் பாராளுமன்றத்தில் உள்ளக கலந்துரையாடல்களை முன்னெடுப்பதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கப் பெறவில்லை. எனவே கலந்துரையாடலுக்கு கூட எடுத்துக் கொள்ளப்படாத இந்த விடயம் தொடர்பான யூகம் நியாமற்றது என்றார்.