(என். வீ. ஏ.)


இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் நடத்திவரும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கிண்ண சர்வதேச அழைப்பு கால்பந்தாட்டத்தில் தீர்மானமிக்க கடைசி போட்டிகள் இன்று நடைபெறவுள்ளன.

எதிர்வரும் 19 ஆம் திகதி நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் விளையாடவுள்ள அணிகளைத் தீர்மானிக்கும் போட்டிகளாக இவை அமையவுள்ளதுடன் இலங்கையின் தலைவிதியும் இன்றைய கடைசி லீக் போட்டியில் தீர்மானிக்கப்படவுள்ளது.

இன்று பிற்பகல் 4.00 மணிக்கு ஆரம்பமாவுள்ள முதலாவது போட்டியில் சிஷெல்ஸ் அணியும் மாலைதீவுகள் அணியும் மோதவுள்ளன. இந்தப் போட்டி முடிவு எத்தகையதாக இருந்தாலும் இலங்கைக்கு அது தாக்கத்தை ஏற்படுத்தாது.ஆனால், இரண்டாவதாக நடைபெறவுள்ள போட்டியில் பங்களாதேஷை வெற்றிகொண்டால் மாத்திரமே இலங்கையினால் இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியும்.

கொழும்பில் இன்று காலை கடும் மழை பெய்ததால் கொழும்பு குதரைப்பந்தயத் திடலில் இரண்டு போட்டிகளை நடத்த முடியுமா என்ற சந்தேகம் நிலவுகின்றது. 

எனினும் இன்றைய போட்டிகள் 4 அணிகளுக்கும் தீர்மானம் மிக்க போட்டிகளாக அமைவதால் அவற்றை நடத்தியே ஆகவேண்டிய நிலையில் இருப்பதாக, இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் ஊடக முகாமையாளர் இர்ஷாத் ஹஷிம்தீன் தெரிவித்தார்.பங்களாதேஷுக்கு எதிரான இன்றைய போட்டியில் இலங்கை வெற்றிபெறுவதாக இருந்தால், மிகச் சரியான வியூகங்களை அமைத்து விளையாடுவது அவசிமாகும்.

அணியின் தலைமைப் பயிற்றுநர் அமிர் அலாஜிக்கின் தவறான வியூகங்களாலேயே சிஷெல்ஸ் அணியுடனான போட்டியில் இலங்கை தோல்வி அடைவதற்கு காரணமாக அமைந்தது என கால்பந்தாட்ட விமர்சகரக்ள் சுட்டிக்காட்டியிருந்தனர்.

இன்றைய போட்டியில் அலாஜிக்கினால் இலங்கைக்கு வெற்றியை ஈட்டிக்கொடுக்க முடியாமல் போனால் அவர் பதவியை இழக்கவேண்டி வரும் என சம்மேளனத்தினால் கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.கடந்த இரண்டு போட்டிகளில் போன்று வீரர்களைத் தவறான இடங்களில் நிலைகொள்ளச் செய்யாமல் அவரவரது வழமையான நிலைகளில் விளையாடச் செய்ய பயிற்றுநர் முன்வரவேண்டும் என கால்பந்தாட்ட விமர்சகர்கள் வலியுறுத்தினர்.

மாலைதீவுகள், சிஷெல்ஸ் அணிகளுடனான போட்டிகளில் அணித் தலைவரான கோல்காப்பாளர் சுஜான் பெரேரா எதிரணிகளின் கோல் போடும் முயற்சிகளைத் தடுத்திராவிட்டால் இலங்கை இந்நேரம் போட்டியிலிருந்து வெளியேறியிருக்கும்.

எனவே சுஜான் பெரேராவைப் போன்று அணியில் இடம்பெறும் சகல வீரர்களும் விடாமுயற்சியுடனும் அர்ப்பணிப்புத்தன்மையுடனும் விளையாடினால் மாத்திரமே இன்றைய போட்டியில் பங்களாதேஷை வெற்றிகொள்ளக்கூடியதாக இருக்கும்.

அத்தடன் பின்கள வீரர் ஜெ. சுபன், மத்திய கள வீரர்களான எம்.என்.எம். பஸால், எம். ஆக்கிப் ஆகியோரை முதல் பதினொருவர் அணியில் இணைப்பது அவசியம் என கால்பந்தாட்ட விமர்சகர்கள் குறிப்பிட்டனர்.

இன்றைய போட்டியில் சுஜான் பெரேரா (தலைவர் - கோல்காப்பாளர்), பின்கள வீரர்கள் ஹர்ஷ பெர்னாண்டோ, டக்சன் பியூஸ்லஸ், ஜூட் சுபன், சரித் ரட்நாயக்க, மத்திய கள வீரர்கள் மார்வின் ஹெமில்டன், மொஹமத் பஸால், மொஹமத் ஆக்கிப், சலன சமீர, முன்களத்தில் வசீம் ராஸிக், டிலொன் டி சில்வா ஆகியோரை முதல் பதினொருவராக களம் இறக்குவது இலங்கைக்கு சாதகமான பெறுபேறு கிடைக்கச் செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மாற்றுவீரர்களாக கவிந்து இஷான், அசிக்கூர் ரஹ்மான், அஹமத் ஷஸ்னி, சமோத் டில்ஷான் பயன்படுத்தலாம்.