(எம்.மனோசித்ரா)

நாட்டின் பல்வேறு மாகாணங்களிலும் புதிய கொவிட் தொற்றாளர்களாக இனங்காணப்படுபவர்கள் திருமண வைபவங்கள், மரண சடங்குகள் உள்ளிட்டவற்றில் கலந்து கொண்டவர்கள் என்று தகவல்கள் கிடைத்துள்ளன.

எனவே இது தொடர்பில் பொது மக்கள் மிக அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள இலங்கை மருத்துவ சங்கம், கொவிட் தொற்றுக்கு பின்னரான பாதிப்புக்களில் நீரிழிவு நோய் ஏற்படல் மற்றும் தீவிரமடைதல் என்பன அதிகரித்து வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.இது தொடர்பில் திங்கட்கிழமை (15) கொழும்பிலுள்ள இலங்கை மருத்துவ சங்கத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சங்கத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பத்மா குனரத்ன தெரிவிக்கையில் ,

எமக்கு கிடைக்கப் பெற்றுள்ள தகவல்களின் அடிப்படையில் வெவ்வேறு மாகாணங்களில் திருமண வைபவங்கள், மரண சடங்குகள் உள்ளிட்ட அதிகளவான மக்கள் ஒன்று கூடக்கூடியவற்றில் கலந்து கொண்டவர்களே தொற்றாளர்களாக இனங்காணப்படுகின்றமை தெரியவந்துள்ளது. 


இதன் காரணமாகவே கடந்த இரு வாரங்களாக தொற்றாளர் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே மக்கள் இது தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றார்.

சங்கத்தின் பிரதித் தலைவர் விசேட வைத்திய நிபுணர் மலிந்த சுமணதிலக்க கொவிட் தொற்றுக்கு பின்னரான நீரிழிவு நோய் தொடர்பில் தெளிவுபடுத்துகையில்,


கடந்த காலங்களில் கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களுக்கு தற்போது கொவிட் தொற்றுக்கு பின்னரான பாதிப்புக்கள் ஏற்படுவதை பரந்தளவில் அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. 


இதில் பிரதானமானது நீரிழிவு நோயை தீவிரமடையச் செய்வதாகும். ஏனைய அறிகுறிகளுக்கு அப்பால் நீரிழிவு ஏற்படும் வீதம் சிலரிடம் அதிகரித்து வருவதை அவதானிக்க முடிகிறது.

சில நாடுகளில் முன்னெடுக்கப்பட்டுள்ள ஆய்வுகளுக்கமைய சுமார் 15 வீதமானோருக்கு இவ்வாறு நீரிழிவு நோய் ஏற்பட்டுள்ளமையை இனங்காணக் கூடியதாகவுள்ளது. 


கொவிட் தொற்றுக்கு உள்ளாக முன்னர் நீரிழிவு நோய்க்கு உட்படாதவர்களுக்கு, கொவிட் தொற்றின் பின்னர் நீரிழிவு நோய் ஏற்பட்டுள்ளமை இந்த ஆய்வுகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.