(எம்.மனோசித்ரா)

சுகாதார தரப்பினர் என்ற ரீதியில் நாம் பாரிய சிரமங்களுக்கு மத்தியில், அர்ப்பணிப்புடன் சேவையாற்றி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள கொவிட் பரவலை , அரசியல் தேவைகளுக்காக மீண்டும் உக்கிரமடையச் செய்து விட வேண்டாம் என்று சகல அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் செய்பாட்டாளர்களிடமும் இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

அத்தோடு நாட்டில் தற்போது நடைமுறையிலுள்ள சட்டத்திற்கமைய இவ்வாறான ஆர்ப்பாட்டங்களை நடத்துவது தனிமைப்படுத்தல் கட்டளை சட்டத்திற்கமைய வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலை மீறி முன்னெடுக்கப்படும் சட்ட விரோத செயற்பாடாகவே கருதப்படும் என்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இது தொடர்பில் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண மேலும் தெரிவிக்கையில் ,

ஐக்கிய மக்கள் சக்தியினரால் பெருமளவிலான மக்களை ஒன்றிணைத்து இன்று கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டம் அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்படுகிறதா அல்லது ஆதரவாக முன்னெடுக்கப்படுகிறதா என்பது சுகாதார தரப்பினரான எமக்கு தேவையற்றது.

எவ்வாறிருப்பினும் சுகாதார தரப்பினர் என்ற ரீதியில் நாம் பாரிய சிரமங்களுக்கு மத்தியில் , அர்ப்பணிப்புடன் சேவையாற்றி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள கொவிட் பரவலை , அரசியல் தேவைகளுக்காக மீண்டும் உக்கிமடையச் செய்து விட வேண்டாம் என்று கோருகின்றோம்.

மிகுந்த நெருக்கடிக்கு மத்தியிலேயே கொவிட் தொற்றாளர் எண்ணிக்கையும் , மரணங்களின் எண்ணிக்கையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த நிலைமையை தொடர்ந்தும் பேணுவதற்கு முயற்சிக்குமாறு சகல அரசியல் கட்சிகளிடமும் கேட்டுக் கொள்கின்றோம்.

நாட்டு மக்கள் ஓரளவிற்கேனும் சுகாதார விதிமுறைகளை பின்பற்றுகின்ற நிலையில் , அவர்களை அதனை மீறி செயற்படுத்துவதற்கு தூண்டும் வகையில் தவறான முன்னுதாரணமாக செயற்பட வேண்டாம் என்றும் கோருகின்றோம்.

சகல அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களிடமும், செயற்பாட்டாளர்களிடமும் நாம் இந்த கோரிக்கையை முன்வைக்கின்றோம்.

அத்தோடு தற்போது நடைமுறையிலுள்ள சட்டத்திற்கமைய இவ்வாறான ஆர்ப்பாட்டங்களை நடத்துவது தனிமைப்படுத்தல் கட்டளை சட்டத்திற்கமைய வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலை மீறி முன்னெடுக்கப்படும் சட்ட விரோத செயற்பாடாகவே கருதப்படும்.

எவ்வாறிருப்பினும் நாட்டு மக்களின் சுகாதார நலன் மற்றும் பெறுமதி மிக்க உயிர் என்பவற்றை உதாசீனப்படுத்தி இவ்வாறான அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுவதை தவிர்த்துக் கொள்ளுமாறு மீண்டும் மீண்டும் கேட்டு;க் கொள்கின்றோம் என்றார்.