நியூசிலாந்தில் நடைபெறவுள்ள மகளிர் ஒருநாள் உலகக் கிண்ண தொடருக்கான தகுதிச் சுற்றுப் போட்டியில் பங்கேற்பதற்காக சாமரி அதபத்து தலைமையிலான இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியினர் நாளை (16 ஆம் திகதி) காலை சிம்பாப்வே புறப்படவுள்ளனர்.

ஒன்பது நாடுகளின் பங்குபற்றுதலுடன் நடைபெற்றுவரும் தகுதிச் சுற்றுப்போட்டிக்கான பல பயிற்சிகளில் கடந்த ஐந்து மாதங்களாக இலங்கை வீராங்கனைகள் வெற்றிகரமாக பங்குபற்றியுள்ளனர். 

தகுதிச் சுற்றுப் போட்டியில் இலங்கை அணி ‘ஏ’ பிரிவில் விளையாடும். அந்த பிரிவில் மேற்கிந்திய தீவுகள், அயர்லாந்து மற்றும் நெதர்லாந்து ஆகிய அணிகளை இலங்கை எதிர்கொள்ளும்.

இந்தக் குழுவில் பப்புவா நியூ கினியா அணியும் இடம்பெற்றிருந்த போதிலும், பி.சி.ஆர். சோதனையில் அணியின் வீரர்களுக்கு கொவிட் தொற்று இருப்பது கண்டறியப்பட்டு, அவர்கள் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

கொவிட் 19 பாதிப்பால், கடந்த 2 ஆண்டுகளாக இலங்கை மகளிர் அணி சர்வதேச போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்தது. எவ்வாறாயினும், உலகக் கிண்ணத் தகுதிச் சுற்றுக்கு தயாராகும் வகையில், இந்தப் பயிற்சிப் போட்டிகளை விளையாட இலங்கை கிரிக்கெட் நடவடிக்கை எடுத்துள்ளது.

உலகக் கிண்ண தகுதிச் சுற்று போட்டிகள் சிம்பாப்வேயில் நவம்பர் 21 ஆம் திகதி தொடங்க உள்ளது. 

உலகக் கிண்ண தகுதிச் சுற்று போட்டிகள் 2020 இல் இலங்கையில் நடத்த திட்டமிடப்பட்டது. எனினும் கொவிட்-19 வைரஸின் தாக்கம் காரணமாக சர்வதேச கிரிக்கெட் நிர்வாகம் (ஐசிசி) போட்டியை ஜூலைக்கு ஒத்திவைக்க வேண்டியிருந்தது, பின்னர் இந்த ஆண்டு நவம்பரில் சிம்பாப்வேயில் தகுதிச் சுற்றுகளை நடத்த முடிவு செய்தது.