(எம்.மனோசித்ரா)தேசிய மற்றும் சர்வதேச சவால்களுக்கு மத்தியில் எதிர்கால அபிவிருத்தி மற்றும் பொருளாதார இலக்கினை வெற்றி கொள்வதற்கான கொள்கை ரீதியான தீர்வுகள் பல நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவினால் இம்முறை வரவு - செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா தெரிவித்தார்.

வரவு - செலவுத் திட்டம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,கொவிட் தொற்றின் காரணமாக முழு உலகிலும் தலைத் தூக்கிய பொருளாதார, சமூக, அரசியல் சவால்களுக்கு மத்தியில் இம்முறை வரவு - செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.

 'சுபீட்சத்தின் நோக்கு' கொள்கை திட்டத்தை உண்மையாக்கும் நோக்கத்துடன் பல புதுமையான கொள்கைகளை செயற்படுத்த பல விடயங்கள் முன்மொழியப்பட்டுள்ளன.

நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்கான ஒத்துழைப்பினைப் பெற்றுக்கொள்வதற்காக சிறிய மற்றும் நடுத்தர தொழிற்துறையை கட்டியெழுப்புவதற்கு இம்முறை பல வேலைத்திட்டங்கள் வரவு- செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன. 

பெருந்தோட்டத்துறை, பராம்பரிய தொழிற்துறை, ஆபணர தொழிற்துறை, நாடளாவிய ரீதியில் சிறிய முதலீட்டு வலயங்களை அமைப்பதன் மூலம் சிறிய மற்றும் நடுத்தர உற்பத்திகளை ஊக்குவிக்க தேவையான சூழலை உருவாக்குவதற்கான பின்னணி கண்டறியப்பட்டுள்ளது.

நச்சுத்தன்மையுடைய உணவுகளிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்காக இரசாயன உர பாவனையிலிருந்து சேதன உரப்பாவனையை நோக்கி நகர்வதற்கான வேலைத்திட்டங்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ திட்டமிட்டு முன்னெடுத்துள்ளார். 


விவசாயத்துறையை மேம்படுத்துவதற்காக தொழில்நுட்பத்திற்குள் செல்வது தொடர்பில் இம்முறை வரவு - செலவுத் திட்டத்தில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதோடு , இதன மூலம் உணவு பாதுகாப்பினை உறுதிப்படுத்த முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டில் வீதி கட்டமைப்பினை வலுப்படுத்துவதன் மூலம் நாட்டின் உற்பத்தி பொருளாதாரம் , நாட்டின் எதிர்கால அபிவிருத்தி மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு என்பவற்றுக்காக சிறந்த உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. 


குறிப்பாக கிராமிய வீதி கட்டமைப்புக்களை சிறந்த முறையில் அபிவிருத்தி செய்வதன் ஊடாக அதனுடன் இணைந்த அனைத்து துறைகளையும் மேம்படுத்த முடியும்.

சுபீட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்திற்கமைய ஒரு இலட்சம் கிலோ மீற்றர் வீதிஅபிவிருத்தி பணிகள் கொவிட் சவாலுக்கு மத்தியிலும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. 


அதற்கமைய இவ்வாண்டு 18,000 கிலோமீட்டர் வீதி அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது. அதே போன்று அடுத்த ஆண்டு 25,000 கிலோமீட்டர் வீதி அபிவிருத்தி செய்யப்படும்.

வறுமையிலுள்ள மக்களின் மற்றொரு தேவை கிராமங்களிலுள்ள பாலங்களை அபிவிருத்தி செய்வதாகும். அதிவேக நெடுஞ்சாலைகள் குறித்து அவதானம் செலுத்தும்போது கொழும்பு துறைமுகநகர வீதி, கொழும்பு அத்துருகிரிய அதிவேக வீதி, ருவன்புற அதிவேக வீதி, குருணாகலை - தம்புளை அதிவேக வீதி, கொழும்பு - மொரட்டுவை கரையோர வீதி உள்ளிட்ட கொழும்பு நகருக்குள் வாகன போக்குவரத்து நெறிசல் காணப்படுகின்ற வீதிகளில் மேம்பால கட்டமைப்புக்களை 2024 ஆம் ஆண்டில் நிறைவு செய்து மக்களுக்கு வழங்க எதிர்பார்த்துள்ளோம். இதற்காக 280,000 நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.