(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)


வரவு - செலவுத் திட்ட விவாதத்தில் நாம் எழுப்பும் கேள்விகளுக்கு பதில் தெரிவிக்க நிதி அமைச்சர் சபையில் இல்லை.

எனவே இன்றைய தினத்தில் இருந்து அவரை சபைக்கு வரவழைக்க நடவடிக்கை எடுங்கள் எனவும், சம்பிரதாய முறைப்படி நிதி அமைச்சர் சபையில் இருக்க வேண்டும் எனவும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், எதிர்க்கட்சி பிரதம கொறடாவான லக்ஸ்மன் கிரியெல்லவும் சபையில் கோரிக்கையொன்றை முன்வைத்தனர்.

பாராளுமன்றத்தில் இன்று திங்கட்கிழமை, அரசாங்கத்தின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றிய எதிர்க்கட்சி பிரதம கொரடாவான லக்ஸ்மன் கிரியெல்ல,

நாட்டின் முக்கியமான விடயங்களை முன்வைத்து வரவு - செலவு திட்ட விவாதம் இடம்பெற்றுக்கொண்டுள்ள நிலையில், நாம் எழுப்பும் கேள்விகளுக்கு பதில் தெரிவிக்க நிதி அமைச்சர் சபையில் இல்லை. உரிய அமைச்சர்கள் எவரும் இல்லை.

 
விடயப்பரப்பு தெரியாத, தெளிவு இல்லாத நபர்கள் எம்மிடம் கேள்வி எழுப்புகின்றனர். அவர்களுக்கு பதில் தெரிவிக்க வேண்டிய அவசியம் எமக்கு இல்லை என்றார்.


இதன்போது ஒழுங்குப்பிரச்சினை எழுப்பிய எதிர்க்கட்சி உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்க,


சம்பிரதாய முறைப்படி நிதி அமைச்சர் சபையில் இருக்க வேண்டும். ஆனால் அவர் சபையில் இல்லை. எனவே இன்றைய தினத்தில் இருந்து அவர் வரவு - செலவுத் திட்ட விவாதத்தில் பங்குபற்ற வேண்டும் என்ற கோரிக்கையொன்றை முன்வைப்போம். 


ரொனி டி மெல் தொடக்கம் சகல நிதி அமைச்சர்களும் வரவு - செலவுத் திட்ட விவாதத்தில் சபையில் இருப்பார்கள். ஆகவே இப்போது விவாதிக்காது, இன்றைய  தினத்தில் இருந்து நிதி அமைச்சர் சபைக்கு வரவேண்டும் என்ற அழைப்பை விடுப்போம் என்றார்.


இதன்போது நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவை நியாயப்படுத்த கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க,


சபாநாயகர் அவர்களே, நிதி அமைச்சு சார்ந்து கேள்விகளுக்கு பதில் தெரிவிக்க அமைச்சர்கள் உள்ளனர். 
எதிர்க்கட்சிகளின் கேள்விகளை முன்வைத்தால் நாம் அதற்காக பதிலை தெரிவிப்போம்.

மாறாக பஷில் ராஜபக்ஷ வருவாரா, எங்கு உள்ளார், என்ன செய்கின்றார் என்ற கேள்வி அவசியமற்றது. எந்த கேள்வி கேட்டாலும் அதற்கு பதில் தெரிவிக்க நாம் தயாராக உள்ளோம் என்றார்.


இதன்போது மீண்டும் உரையாற்றிய எதிர்க்கட்சி பிரதம கொரடாவான கிரியெல்ல எம்.பி,
நாட்டின் பிரதான இரண்டு பிரச்சினைகளுக்கு பதில் கூறுங்கள். ஒன்று நாட்டில் டொலர் இல்லை, வங்கியில் டொலர் இல்லை, இதற்கு தீர்வு என்ன? 


அதேபோல் கடன்களை செலுத்துவது எவ்வாறு? ஒரு வருடத்திற்கு 6 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக செலுத்த வேண்டியுள்ளது. இதற்கு என்ன தீர்வு? நீங்கள் இந்த கேள்விகளுக்கு பதில் கூறுங்கள் என்றார்.


எனினும் லக்ஸ்மன் கிரியெல்ல எம்.பியின் கேள்விகளுக்கு பதில் கூறாது இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க மௌனம் காத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.