மீளக்குடியேறியது முதல் ஓலைக் குடிசையிலேயே தொடரும் வாழ்க்கை 

By Digital Desk 2

15 Nov, 2021 | 05:07 PM
image

திருகோணமலை மாவட்டம் குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்டதும் திருகோணமலை தேர்தல் தொகுதிக்குட்பட்டதுமான ஒரு கிராமமே கும்புறுப்பிட்டி கிழக்கு நாவற்சோலை கிராமம்.

1965களில் இது ஒரு மாதிரிக் கிராமமாக இருந்தது. பின்னர் 1977 களில் மக்கள் குடியேற்றம் இடம் பெற்றது. 1996 வரை மக்கள் வாழ்ந்து வந்த நிலையில் யுத்த வன்முறை காரணமாக  குடியேற்றத்தை விட்டு வெளியேறினர்.

உள்ளூரில்  இடம்பெயர்ந்த  மக்களே 2006 ஆம் ஆண்டு மீள்குடியேற்றம் செய்யப்பட்டு  தற்போது இக்கிராமத்தில்  வசிக்கிறார்கள். 

 தமிழ் சமூகத்தை சேர்ந்த சுமார் 569 குடும்பங்கள் இங்கு வாழ்ந்து வருகிறார்கள். இதில் 20 குடும்பங்கள் 2006 ல் இலங்கையில் இருந்து யுத்த சூழ்நிலை காரணமாக இந்தியாவுக்கு  சென்று மீண்டும் 2010ல்  இந்த இடத்தில் மீண்டும் குடியேறினார்கள். 

அன்றாட கூலித் தொழில் மூலமாக தங்களது ஜீவனோபாயத்தை  கொண்டு செல்லும் இம் மக்கள் ஓலை குடிசைகளிலும், தகரக் கொட்டில்களிலும் அதிகமாக வாழ்ந்து வருகிறார்கள். குறித்த கிராமத்தை சேர்ந்த இளைஞர் யுவதிகளில் சிலர் கப்பல் துறை, கந்தளாய் ஆகிய இடங்களில் உள்ள ஆடைத் தொழிற்சாலைகளில் வேலை செய்து வருகிறார்கள்.

அதிகமானவர்கள் ஆரம்ப கல்வியுடன் பாடசாலை கற்றலை கைவிட்டவர்களாக  உள்ளார்கள். இங்கு இரண்டு  அரச உத்தியோகத்தர்கள் மட்டுமே காணப்படுகிறார்கள். அவர்களுள் ஒருவர் அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றொருவர் தபால் ஊழியர்.

74 குடும்பங்கள் தகரக் கொட்டில், ஓலைக் குடிசை என தற்காலிகமாக வாழ்ந்து வருவதுடன் 59 குடும்பங்கள் காணி, வீடு இன்றி உறவினர்களின் வீடுகளில் வாழ்ந்து வருகிறார்கள்.

ஏனைய குடும்பங்கள் சொந்த வீடுகளில் வாழ்ந்து வருகிறார்கள். தற்போதைய நிலையில் தற்காலிகமான வீடுகளில் வசிப்பவர்கள் போதிய வருமானமின்மை காரணமாக நிரந்தர வீடுகளை சுயமாக கட்ட முடியாத நிலையில் வாழ்ந்து வருகிறார்கள்.

இக் கிராம மக்களின் பெரும்பாலான பிரதான  ஜீவனோபாய  தொழில்களாக சிறு கடல் தொழில், கூலித் தொழில் என்பனவே உள்ளன. இக் கிராமத்தில் வசிக்கும் குடும்பங்களில் 16 பேர்   முன்னால் போராளிகளாக இருந்து புனர்வாழ்வளிக்கப்பட்டு  சமூகமயமாக்கப்பட்டவர்கள். அரசாங்கம் மூலமாக பல அபிவிருத்தி செயற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டாலும் கூட பொதுவான அபிவிருத்திகளில் அதிக ஈடுபாடு  காட்டப்படுகிறது.

ஆனாலும் வீட்டுத் திட்ட அபிவிருத்தியில்  இந்த பகுதியில்  ஈடுபாடு காட்டுவது  குறைவாக உள்ளது. நாட்டில் அமைதி ஏற்பட்ட பின்னர்  முன்னாள் போராளிகளாக  புனர்வாழ்வளிக்கப்பட்டவர்களும்  அவர்களின் வாழ்வாதார நிலையும் இங்கு இதே கிராமத்தில் அடிப்படையாக உள்ளது.

இங்கு வசிக்கும் புனர்வாழ்வளிக்கப்பட்ட  குடும்பத்தில்  ஒரு குடும்பம் கடந்த ஒன்றரை வருட காலமாக தம்பதிகளாக  தடுப்புக் காவலில் இருந்துள்ளார்கள்.

வெவ்வேறு இடங்களில் ஒரு குடும்பத்துக்கு தலா ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான வாழ்வாதார உதவிகள் அரசாங்கத்தினால் வழங்கப்பட்டன. ஆனால் இங்கு கணவன், மனைவி இருவரும் ஒரு குடும்பம்  என்ற காரணத்தால்  இருவருக்குமாக  சேர்த்து ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான வாழ்வாதார உதவிகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன.

அரசாங்கம் மூலமாக புனர்வாழ்வு பெற்று சமூகமயமாக்கப்பட்ட குடும்பங்களுக்காக புனர்வாழ்வு ஆணையகம் ஊடாக வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் கால்நடை வளர்ப்பு, (ஆடு, மாடு) சுயதொழில் உபகரணங்கள், விவசாய உபகரணங்கள் என ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான உதவிகள் வழங்கப்பட்டன. 

ஆனாலும் வீட்டுத் திட்டம் வழங்குவதற்கான ஏற்பாடுகள் தொடர்பில்  முழுமையாக எந்தக் கவனமும் செலுத்தப்படவில்லை. ' ஒவ்வொரு வட்டாரத்துக்கும் மூன்று வீடுகள் வீதமே கிடைக்கப் பெறுகிறது. சிலரிடம் காணிக்கான ஆவணங்கள் இன்மையும் காணப்படுகிறது. எதிர்காலத்தில் அரசாங்கத்தினால் வீட்டு திட்டம் வழங்கப்படும் " என குச்சவெளி பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர்  ஐ.எம்.நாசிக் தெரிவித்தார்.

' பல்வேறு துன்பங்களுடன் 11 வருட காலமாக இந்த கரையான் கொட்டிலில் சிறு பிள்ளைகளுடன் வாழ்கிறோம்.  பல முறை வீடு கேட்டு கோரிக்கை விடுத்த போதிலும் அந்த கதை அவ்விடத்திலேயே முடிந்து விடுகிறது.

இந்த குடிசை வாழ்க்கையில் பிள்ளைகளை வைத்து தினமும் வருத்தம் தான் வருகிறது. மழை வெயில் காலங்களில் நிம்மதியாக தூங்க முடியாது பத்து வருட கால நிரந்தர வீட்டு கோரிக்கை நிறைவேறவில்லை. டி எஸ் ஒபிஸ் ஊடாக வெறும் 20 ஆயிரம் ரூபா மாத்திரமே கிடைக்கப்பெற்றது" என புனர்வாழ்வு பெற்ற இரு பிள்ளைகளின் தாயான செல்வராசா செல்வகுமாரி தெரிவித்தார்.   

ஆனால் குறிப்பிட்ட இந்த  குடும்பத்துக்கு அரசாங்கத்தினால் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டதாக குச்சவெளி பிரதேச செயலக  அரச தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. 

எது எப்படியாக இருந்தாலும் மழை காலங்களிலும் வெயில் காலங்களிலும் நிம்மதியாக தூங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர். "ஓலை குடிசை, தகரக் கொட்டில்களை நம்பி ஏமாந்து ஏமாந்து நொந்து போயிட்டோம். கல் வீடுகளை தருவதாக ஏமாற்றியே வருகிறார்கள்" என யோகராஜா பால்ராஜ் தெரிவித்தார்.   

“ 2009ல் வன்னியில் இருந்து இடம் பெயர்ந்த நிலையில் 2011.09.30 அன்று திருமணம் செய்து இதே கிராமத்தில் தகரக் கொட்டில் வாழ்க்கையை நம்பி 10 வருட காலமாக வாழ்ந்து வருகிறேன்.

எனது கணவன் ஒரு கூலித் தொழிலாளி ஆறு இலட்சம் ரூபா அளவில் அரசினால் வழங்கப்படும். மிகுதி மூன்று இலட்சம் தங்களுடைய  சொந்த  பணத்தை சேர்த்து   கல் வீடு கட்டி தருவதாக குறித்த கிராமத்தின் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் தெரிவித்த நிலையில் கோரிக்கை கடிதம் புகைப்படம் வழங்கப்பட்டு ஒன்பது மாதங்கள் கடக்கின்றன.

எந்த முடிவும் இல்லை. தற்போது சீட்டு காசு சொந்த  பணத்தில் 1 இலட்சத்து முப்பதாயிரம் ரூபா செலவில் கொட்டிலுக்கு அருகாமையில் அத்திவாரம் போடப்பட்டுள்ளது.

மிகுதி பணம் இல்லை கஷ்டமான நிலையில் உள்ளோம். மழை வெயில் காலங்களில் இருக்க முடியாது. அரச சார்பற்ற, தனவந்தர்கள் மூலம் கூட உதவி கிடைக்கவில்லை. கல் வீடும் கிடைக்கப்பெறவில்லை”  என ஒரு பிள்ளையின் தாயான  மோகன குமார் ராகினி தெரிவித்தார்.

இது தொடர்பில் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பிரதிநிதியான குச்சவெளி பிரதேச சபையின் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் நாகேஸ்வரன் ஜெயகாந்தனிடம் வினவிய போது, 

' மக்கள் வீடின்றி கொட்டில்களில் வாழ்ந்து வருகிறார்கள். இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சம்மந்தன் ஐயாவிடமும் சொல்லியிருக்கிறோம். அரசிடம் கேட்டு சொல்வதாக சொன்னார் புதுசு புதுசாதான் திட்டங்களை செய்கிறார்கள். ஆனால் கடந்த நல்லாட்சி அரசாங்கம் செய்த வீட்டு திட்டத்தை கைவிட்டு விட்டார்கள்.

எந்த விதமான அபிவிருத்திகளோ உட்கட்டமைப்பு வசதிகளோ இங்கு கிடைப்பது மிக அரிதாகவே உள்ளது. எல்லாவற்றிலும் ஏனைய பிரதேசங்களை விட இப் பிரதேச மக்கள் புறக்கணிக்கப்பட்டு வருகிறார்கள்” என்று கூரிய அவர் தொடர்ந்து கருத்து வௌியிடுகையில்,

இவ்வாறான குடிசை, தகரக் கொட்டில் வாழ்க்கையே தொடர்ந்தும் மக்கள் மத்தியில் நீடிக்கிறது. வீட்டுத் திட்டம் ஒருவருக்கு வழங்கப்படுகின்ற போது,  அவர்களின் பொருளாதார நிலை, ஏனைய அடிப்படை வசதிகளை வைத்தும்  பிரதேச செயலகம் ஊடாக புள்ளித் திட்டத்தின் அடிப்படையில் பயனாளிகள் தெரிவு  செய்யப்படுகிறார்கள்.

 கடந்த காலம் தொடக்கம் தற்போது வரையான அரசாங்கம் எங்களுக்கான வீட்டுத் திட்டங்களை அமைப்பதற்கு ஈடுபாடு காட்டவில்லை இது தொடர்பில் பிரதேச அபிவிருத்தி குழு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டங்களில் தெளிவுபடுத்திய போதும் இதற்கான தீர்வு கிட்டவில்லை என  மேலும் தெரிவித்தார்.

யுத்த சூழ்நிலை காரணமாக மீள் குடியேற்றப்பட்ட கிராமம் ஊடாக மக்களுடைய பல வருட கால எதிர்பார்ப்புக்கள் இங்கு நிறைவேறவில்லை. குச்சவெளி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட தமிழ் சமூகத்தை அதிகம் கொண்ட பிரதேசம் என்றால் இந்த  கிராமமே எடுத்துக்காட்டாக விளங்குகின்றது. அரச சார்பற்ற நிறுவனமாக லீட்ஸ் எனும் நிறுவனம் மாத்திரமே அங்கு பணிபுரிகிறது.   இவர்கள் கூட சிறுவர் உரிமைகள் தொடர்பான திட்டம் ஊடாக  பணியாற்றி வருகிறார்கள். 

ஆனாலும் இங்கு வீட்டுத் திட்டங்கள் தொடர்பிலான  முன்னெடுப்புக்கள்  எதுவும் இவ்வாறான அரச சார்பற்ற அமைப்புக்களாலும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. அவர்களிடம் அது பற்றி பேசிய போது நிதிப் பிரச்சினையை காரணமாக முன் வைத்தனர்.

தற்போதைய அரசாங்கம் ஊடாக ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுக்கும் தலா 30 இலட்சம் ரூபா அபிவிருத்தி பணிகளுக்காக ஒதுக்கப்படவுள்ளது. ஆனாலும் இதன் மூலம் வீடற்றவர்கள் எல்லோருக்கும் வீடுகளை வழங்குவது சாத்தியமற்ற ஒன்றாகவே  காணப்படுகிறது.

புதிதாக திருமண பந்தத்தில் இணைந்து குடும்ப வாழ்க்கையினை ஆரம்பிக்கும் போது பலர் வீடு மற்றும்  காணிகள் இன்றி சிக்கல் நிலை தோன்றுகின்றது. இதனால் இம் மக்களின் வீடில்லா பிரச்சினைக்கான நிரந்தர தீர்வினை பெற முடியாமல் உள்ளது.

ஆட்சிக்கு மாறி மாறி வரும் அரசுகள் பொதுவான அபிவிருத்திகளில் கவனம் செலுத்துவதுண்டு. இதனால்  மீள் குடியேற்ற கிராமத்தில் வாழும் மக்களின் நிரந்தர  வீட்டுக்கான கனவு நிறைவேறாத ஒன்றாகவே உள்ளது 

தற்போது பணிப்பெண்ணாக வெளிநாடு செல்வதாக இருந்தால் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஊடான சுற்றறிக்கையின் பிரகாரம் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் இருப்பின் வெளிநாடு செல்ல முடியாது என தெரிவிக்கப்படுகிறது. ஆனால் அதையும் மீறி சிலர் பிள்ளைகளை விட்டு விட்டு எப்படியோ வெளிநாட்டுக்கு செல்கின்றனர். இது ஒரு பெரும் சமூகப் பிரச்சினையாகவும் தோற்றம் பெற்றுள்ளது.

மக்களின் இவ்வாறான நிலைமைகளை அரசியல் உயர்மட்டத்தில் உள்ளவர்களும்> மக்கள் பிரதிநிதிகளும் நன்கு உணர்ந்துள்ளனர். இருந்தாலும் இது தொடர்பில் முழுமையான கரிசனை காட்ட அவர்களால் முடியவில்லை. காலம் காலமாக தேர்தல் காலங்களில் மாத்திரம் அள்ளி வீசப்படும் வாக்குறுதிகளே எஞ்சுகின்றன. இம் மக்களின் தொடரான இவ்வாறான வாழ்க்கைக்கு நிரந்தர தீர்வினை பெற்றுக் கொடுப்பது யார்?

பொதுவான அபிவிருத்திகளை விடவும் தங்களது கனவு இல்லத்துக்காக காத்திருக்கும் இந்த மக்களின் ஏக்கம் எப்போது தீரும் என இக் கிராமவாசிகள் அங்கலாய்க்கின்றனர். 

ஹஸ்பர் ஏ ஹலீம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right