(என்.வீ.ஏ.)இலங்கைக்கும் சிஷெல்ஸுக்கும் இடையில் கொழும்பு, குதிரைப் பந்தயத் திடலில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற கால்பந்தாட்டப் போட்டியில் 0 - 1 என்ற கோல் வித்தியாசத்தில் இலங்கை தோல்வி அடைந்தது.

இதையடுத்து 4 நாடுகளுக்கு இடையிலான பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கிண்ண சர்வதேச அழைப்பு கால்பந்தாட்ட இறுதிப் போட்டியில் விளையாட இலங்கை தகுதிபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.


இலங்கையின் இந்தத் தோல்விக்கு தலைமைப் பயிற்றுநர் அமிர் அலாஜிக்கின் தவறான வியூகங்களே பிரதான காரணம் எனவும் அவரை உடனடியாக பதவியிலிருந்து நீக்க இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கால்பந்தாட்ட விமர்சகர்கள் தெரிவித்தனர்.

மாலைதீவுகளுக்கு எதிராக 26 நிமிட இடைவெளியில் 4 கோல்களைப் போட்டு இலங்கையின் கௌரவத்தைக் காப்பாற்றிய முன்கள வீரர் வசீம் ராசீக்கை மத்திய களத்திலும், பொதுவாக மத்திய களத்தில் விளையாடிவரும் மொஹம்மத் ஆக்கிப், அசிக்கூர் ரஹுமான் ஆகியோரை பின்களத்திலும் அமிர் அலாஜிக் நிலைகளை மாற்றி விளையாடச் செய்தமை மிகப் பெரிய தவறு என விமர்சகர்கள் சுட்டிக்காட்டினர்.

அது மட்டுமல்லாமல், 'சர்வதேச கால்பந்தாட்டப் போட்டிக்கு முந்திய தினத்தன்று வீரர்களின் உடற் தகுதியை கண்டறிவதற்கான பயிற்சிகளே நடத்தப்படும். அந்தப் பயிற்சி ஒரு மணித்தியாலத்துக்கு மேல் நீடிக்காது. 


ஆனால், போட்டிக்கு முந்திய தினத்தன்று பொலிஸ் பார்க் மைதானத்தில் இலங்கை வீரர்களை இரண்டரை மணி நேரம் பயிற்சியில் ஈடுபடுத்தி அலைக்கழித்ததால் அவர்களது உடற்தகுதியைப் பேணும் சக்தி விரயமாக்கப்பட்டது என விமர்சகர்கள் கூறினர்.

மேலும், இலங்கை அணியினரை ஊக்குவிப்பதை விடுத்து, பயிற்றுநர் பதவியை ஏற்ற காலந்தொட்டு 'இலங்கை அணி முன்னேறுவதற்கு இன்னும் பல வருடங்கள் செல்லும். பல்வேறு குறைபாடுகள் நிலவுகின்றன' என தொடர்ச்சியாக எதிர்மாறான கருத்துக்களையே அலாஜிக் கூறிவந்துள்ளார்.

இலங்கை கால்பந்தாட்டத்தில் பல்வேறு தொழில்நுட்பக் குறைபாடுகள் நிலவுவதாகவும் வீரர்களின் உடற்தகுதி, ஆற்றல்களை மேம்படுத்துவதற்கு தொழில்நுட்ப இயந்திரம் தேவை எனவும் அலாஜிக் தெரிவித்ததையடுத்து இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் பல இலட்சம் ரூபா பெறுமதியான தொழில்நுட்ப இயந்திரம் ஒன்றை கொள்வனவு செய்துகொடுத்தது. 

ஆனால், கடந்த இரண்டு வருடங்களில் இலங்கை அணியில் முன்னேற்றம் ஏற்படாததுடன் ஒரு போட்டியிலேனும் அவரால் இலங்கைக்கு வெற்றியைப் பெற்றுக்கொடுக்க முடியாமல் போயுள்ளது.

அலாஜிக் பல்வேறு நாடுகளில் கழகங்கள் மற்றும் கால்பந்தாட்டப்  பயிற்சியகங்களில் பயிற்றுநராக செயற்பட்டுள்ளார். இலங்கையில் பயிற்நுர் பதவியை ஏற்பதற்கு முன்னர் ஒரே ஒரு தேசிய அணிக்கு (புருணை) மாத்திரமே அவர் பயிற்றுநராக இருந்துள்ளார். 
இலங்கையைத் தவிர்ந்த ஏனைய நாடுகளில் அவர் ஒரு வருடம்கூட பதவி வகிக்காததுடன் அவர் பயிற்றுவித்த எந்த அணியும் சிறந்த பெறுபேறுகளை ஈட்டவும் இல்லை.

சிஷெல்ஸுடான போட்டியின் முதல் 12 நிமிடங்களில் ஆக்ரோஷமான எதிர்த்தாடல் வியூகத்துடன் விளையாடிய இலங்கை வீரர்கள் திடீரென தடுத்தாடும் நிலைக்கு தள்ளப்பட்டமைக்கு பயிற்றுநரின் வியூகங்களே காரணம் எனவும் கூறப்படுகின்றது.

அப்போட்டியின் 31ஆவது நிமிடத்தில் பின்கள வீரர் அசிக்கூர் ரஹ்மானின் தவறு காரணமாக சிஷெல்ஸ் அணிக்கு பெனல்டி வழங்கப்பட்டது. அந்த பெனல்டியை சிஷெல்ஸ் அணித் தலைவர் ஸ்டீவ் பெனொய்ட் மாரி தவறவிட்டார்.

அதனைத் தொடர்ந்த சிஷெல்ஸ் வீரர்களின் வேகத்துக்கும் விவேகத்துக்கும் ஈடுகொடுப்பதில் இலங்கை வீரர்கள் சிரமத்தை எதிர்கொண்டனர். அணித் தலைவரும் கோல்காப்பாருமான சுஜான் பெரேரா எதிரணியினரின் கோல் போடும் முயற்சிகளைத் தடுத்திராவிட்டால் இலங்கை அணி படுதோல்வி அடைந்திருக்கும்.

எவ்வாறாயினும் போட்டியின் 68ஆவது நிமிடத்தில் இலங்கையின் பின்களத்தில் சரியான தடுத்தாடும் வியூகம் பிரயோகிக்கப்படாததை சாதகமாக்கிக்கொண்ட சிஷெல்ஸ், கோல் ஒன்றைப் போட்டது.

மாற்றுவீரர் ஜோசெப் ஹென்றி ரவிக்னியாவின் கோர்ணர் கிக்கை நன்கு பயன்படுத்திக்கொண்ட பதில் அணித் தலைவர் வொரென் எரிக் மெல், உயரே தாவி தனது தலையால் பந்தை முட்டி கோல் போட்டார். 
அந்த சந்தர்ப்பத்தில் இலங்கையின் பின்கள வீரர்கள் பந்துவந்த திக்கில் முறையாக நிலைகொள்ளாததே மோத்தேக்கு கோல் போடுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்தது.

எனவே பங்களாதேஷுடனான போட்டியின்போது அலாஜிக்கை நீக்கிவிட்டு உள்ளூர் பயிற்றுநர்களிடம் இலங்கை அணியை ஒப்படைப்பது குறித்து இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் சிந்திப்பது சாலச்சிறந்தது என கால்பந்தாட்ட விமர்சகர்கள் தெரிவித்தனர்.