எம்.மனோசித்ரா

ராஜபக்ஷாக்கள் எவ்வகை சட்டங்களை நடைமுறைப்படுத்தினாலும் , அழுத்தங்களைப் பிரயோகித்தாலும் , நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்று சிறையிலடைத்தாலும் தடைகள் அனைத்தையும் தகர்த்து எதிர்வரும்  செவ்வாய்கிழமை (16) கொழும்பில் பாரிய மக்கள் படையணியை திரட்டுவோம். 

69 இலட்சம் வாக்குகளால் பூரித்துப் போன ராஜபக்ஷ அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பும் வேலைத்திட்டத்தை ஆரம்பிப்போம் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே தெரிவித்தார்.

கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

நாட்டு மக்கள் கிராமங்கள் உள்ளிட்ட பகுதிகளில் இதுவரையில் முன்னெடுத்த போராட்டங்களை ஒன்று சேர்த்து  செவ்வாய்கிழமை ( ஐக்கிய மக்கள் சக்தி பாரிய ஆர்ப்பாட்டமொன்றை ஏற்பாடு செய்துள்ளது. 

நாட்டு மக்கள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள போதிலும், ராஜபக்ஷாக்கள் தாம் எதனையுமே அறியாதவர்கள் போல தமக்கு மாத்திரம் ஏற்றாட் போல் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

தேசிய சொத்துக்களை விற்கின்றனர் , வெளிநாடுகளிலுள்ள தமது சகாக்களுக்கு அவற்றை வழங்கி அதன் மூலம் கிடைக்கப் பெறும் இலஞ்சத்தினை தமது பைகளில் இட்டுக் கொள்கின்றனர்.

விவசாயிகளின் நெருக்கடியை தீர்ப்பதற்காக இறக்குமதி செய்யப்படும் உரத்திலும் மோசடி செய்கின்றனர். இவற்றை பார்த்து சகித்துக் கொண்டிருக்க முடியாமல் தமது கிராமங்களில் எதிர்ப்பினை வெளியிட்டுக் கொண்டிருந்த மக்களை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை கொழும்பில் ஒன்று திரட்டுவோம்.

ராஜபக்ஷாக்கள் எவ்வகை சட்டங்களை நடைமுறைப்படுத்தினாலும் , எவ்வகை அழுத்தங்களைப் பிரயோகித்தாலும் , நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்று சிறையிலடைத்தாலும் அந்த தடைகள் அனைத்தையும் தகர்த்து போலியான நித்திரையிலிருக்கும் ராஜபக்ஷாக்களுக்கு உணர்த்துவதற்காகவே மக்களை இவ்வாறு ஒன்று திரட்டுகின்றோம். 

நாளை மறுதினம் முழு கொழும்பையும் சுற்றிவளைத்து விவசாயிகள் உள்ளிட்ட நாட்டு மக்கள் அனைவரதும் பிரச்சினைகளுக்கான தீர்வைக் கோருவோம். 

69 இலட்சம் வாக்குகளால் பூரித்துப் போன ராஜபக்ஷ அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பும் வேலைத்திட்டத்தை நாம் நாளை மறுதினத்திலிருந்து ஆரம்பிப்போம் என்றார்.