அருட்தந்தை சிறில் காமினியை விசாரணைக்கு அழைப்பு

By Digital Desk 2

14 Nov, 2021 | 09:42 PM
image

எம்.எப்.எம்.பஸீர்

அருட்தந்தை சிறில் காமினி நாளை (15) சி.ஐ.டி. எனும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டுள்ளார். 

உயர் நீதிமன்றில் கடந்த 8 ஆம் திகதி  எட்டப்பட்டிருந்த இணக்கப்பாட்டுக்கு அமைய, வாக்கு மூலம் பெற சி.ஐ.டி.யினர்  இவ்வாறு அருட்தந்தை சிறில் காமினியை அழைத்துள்ளதாக சி.ஐ.டி. தகவல்கள் தெரிவித்தன.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக, வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு விளக்கமளிக்கும் வகையில் கடந்த மாதம் 23 ஆம் திகதி பேராயர் தலைமையில் நடைபெற்ற இணையத்தள மாநாட்டில் வெளியிடப்பட்ட கருத்து தொடர்பில், அரச புலனாய்வுப் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் முறையிட்டிருந்தார்.

அந்த முறைப்பாட்டை மையப்படுத்தி, 2007 ஆம் ஆண்டு 56 ஆம் இலக்க சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பிலான சர்வதேச இணக்கப்பாட்டு சட்டத்தின் 3 (1),(2) ஆம் உறுப்புரைகள்  பிரகாரமும், தண்டனைச் சட்டக் கோவையின் அத்தியாயங்களின்  கீழும் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் நிலையில்,  அது குறித்த விசாரணைகளுக்கு குற்றப்புலனாய்வு திணைக்களம் அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோவுக்கு ஆஜராகுமாறு அறிவித்துள்ளது.

இந்த விசாரணைகளுக்கமைய வாக்குமூலம் பதிவு செய்வதற்காக, முதன் முதலாக கடந்த ஒக்டோபர் 28 ஆம் திகதி முன்னிலையாகுமாறு, குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் விசேட விசாரணை பிரிவு, அறிவித்திருந்தது.

இதனடிப்படையில்  கடந்த நவம்பர் 3 ஆம் திகதி மு.ப. 9.30 க்கு வருகை தருமாறு மீண்டும் குற்றப்புலனாய்வு திணைக்களம்  அருட்தந்தை சிறில் காமினிக்கு அறிவித்தது. 

இந்நிலையிலேயே உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அதற்கான விசாரணைகள் எதிர்வரும் நாட்களில் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் கூறி, தனது

சட்டத்தரணியூடாக எழுத்து மூலம் பதில் வழங்கியுள்ள அருட் தந்தை விசாரணைகளுக்கு செல்வதை தவிர்த்திருந்தார்.

இந்நிலையில்  கடந்த 8 ஆம் திகதி  அவர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனு மீதான பரிசீலனை உயர் நீதிமன்றில் இடம்பெற்றது.

இதன்போது பிரதிவாதிகள் சிலர் சார்பில்  மன்றில் ஆஜராகிய மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ரொஹந்த அபேசூரிய, உயர் நீதிமன்றுக்கு  உறுதிப்பாட்டொன்றினை வழங்கும் முகமாக,  தற்போதைய நிலையில் அருட் தந்தை சிறில் காமினியை கைது செய்ய எந்த தீர்மானமும் இல்லை என அறிவித்தார். 

இது தொடர்பில் சி.ஐ.டி. பணிப்பாளர்  உறுதியளித்துள்ளதாகவும், விசாரணை நடவடிக்கை நிறைவடைந்ததும்  இந்த விவகாரத்தில் சட்ட மா அதிபரின் ஆலோசனைக்கு அமைய அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில் தீர்மானிக்கப்படும்  எனவும்   சுட்டிக்காட்டினார்.

இவ்வாறான பின்னணியிலேயே தற்போது அருட் தந்தை சிறில் காமினி விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். நாளை அவர், சி.ஐ.டி.யின் விஷேட விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் லலித்த திஸாநாயக்க தலைமையிலான குழுவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக அறிய முடிகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right