கடந்த சில நாட்களுக்கு முன்னால் பெய்த கடும் மழையின் காரணமாக கற்பிட்டி பிரதேச செயலகத்திற்குற்பட்ட நாவற்காடு, நரக்கள்ளி, நுரைச்சோலை, திகலி ஆகிய பகுதிகளில் மேற்கொண்டு வரும் ஆயிரம் ஏக்கருக்கு அதிகமான பயிர்ச்செய்கை வெள்ள நீரில் மூழ்கியுள்ளதாக அப்பகுதி மக்கள் கவலைத் தெரிவிக்கின்றனர். 

தக்காளி, பயிற்றங்காய், சிறிய வெங்காயம், மிளகாய், கோவா, பீட்ரூட்,  ஆகிய பயிர்ச்செய்கை மேற்கொண்டு வந்ததாகவும் பயிர் செய்கை அனைத்தும் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதாக அப்பகுதி விவசாயிகள் இதன்போது தெரிவிக்கின்றனர். 

இதன்போது வண்ணாத்திவில்லு பிரதேச செயலகத்திற்குற்பட்ட பழைய எலுவாங்குளம் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் 100 ஏக்கருக்கு அதிகமான நெற்பயிர்ச் செய்கை வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக அப்பகுதி மக்கள் கவலைத் தெரிவிக்கின்றனர். 

ராஜாங்கனை நீர்த் தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டமையினால் குறித்த பகுதியில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் நகைகளை அடகு வைத்தும் வங்கிகளிள் நுண்கடன்களைப் பெற்றும் குறித்த விவசாயத்தை மேற்கொண்டு வந்ததாகவும் விவசாயிகள் கவலைத் தெரிவிக்கின்றனர்.

இதனால் ஏற்பட்டுள்ள நஷ்டஈடுகளை வழங்குமாறு விவசாயிகள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றனர்.