(நா.தனுஜா)

நாடளாவிய ரீதியில் நாளாந்தம் பதிவாகும் கொவிட் - 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ள நிலையில், நேற்றைய தினம் நாட்டில் 22 கொவிட் - 19 மரணங்கள் பதிவாகியுள்ளன.

அதேவேளை கொவிட் - 19 தடுப்பூசி வழங்கல் செயற்திட்டமானது நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 

பொதுமக்களுக்கு நேற்று வெள்ளிக்கிழமை வழங்கப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை தொடர்பான விபரங்கள் சுகாதார அமைச்சின் தொற்றுநோய்த்தடுப்புப் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி நேற்று சைனோபாம் முதலாம்கட்டத் தடுப்பூசி 2107 பேருக்கும் இரண்டாம்கட்டத் தடுப்பூசி 9489 பேருக்கும் வழங்கப்பட்டிருப்பதுடன் பைஸர் முதலாம்கட்டத் தடுப்பூசி 5681 பேருக்கும் இரண்டாம் கட்டத்தடுப்பூசி 524 பேருக்கும் மூன்றாம்கட்ட செயலூட்டித்தடுப்பூசி 8298 பேருக்கும் வழங்கப்பட்டுள்ளது. 

அதேபோன்று 54 பேர் முதலாம்கட்ட மொடேனா தடுப்பூசியையும் 8 பேர் இரண்டாம்கட்டத் தடுப்பூசியையும் பெற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

இத்தரவுகளின் அடிப்படையில் இவ்வருடம் ஜனவரி மாதத்திலிருந்து நேற்று வரையான காலப்பகுதியில் அஸ்ராசெனேகா முதலாம்கட்டத் தடுப்பூசி 1,479,631 பேருக்கும் இரண்டாம்கட்டத் தடுப்பூசி 1,418,593 பேருக்கும் சைனோபாம் முதலாம்கட்டத் தடுப்பூசி 11,924,276 பேருக்கும் இரண்டாம்கட்டத் தடுப்பூசி 10,815,088 பேருக்கும் வழங்கப்பட்டுள்ளது. 

அதேபோன்று ஸ்புட்னிக் முதலாம்கட்டத் தடுப்பூசி 159,110 பேருக்கும் இரண்டாம்கட்டத் தடுப்பூசி 155,780 பேருக்கும் பைஸர் முதலாம்கட்டத் தடுப்பூசி 1,490,090 பேருக்கும் இரண்டாம்கட்டத் தடுப்பூசி 449,542 பேருக்கும் மூன்றாம்கட்ட செயலூட்டித்தடுப்பூசி 105,816 பேருக்கும் வழங்கப்பட்டுள்ளது. 

அத்தோடு 804,799 பேருக்கு மொடேனா முதலாம்கட்டத் தடுப்பூசியும் 782,701 பேருக்கு இரண்டாம்கட்டத் தடுப்பூசியும் வழங்கப்பட்டுள்ளது.

தொற்றாளர்களும் மரணங்களும்

இவ்வாறானதொரு பின்னணியில் இன்றையதினம் 512 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டிருப்பதுடன் 22 கொவிட் - 19 மரணங்களும் பதிவாகியுள்ளன. 

அதன்படி நாடளாவிய ரீதியில் அடையாளங்காணப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 549,296 ஆக அதிகரித்திருப்பதுடன் தொற்றினால் ஏற்பட்ட மரணங்களின் எண்ணிக்கை 13,972 ஆக உயர்வடைந்துள்ளது. 

மேலும் இன்று காலை 10 மணிவரையான தகவல்களின்படி தொற்றாளர்களில் 523,503 பேர் முழுமையாகக் குணமடைந்திருப்பதுடன், தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்ற மற்றும் வீடுகளிலேயே சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள தொற்றாளர்களின் எண்ணிக்கை 11,331 ஆகும்.