(என்.வீ.ஏ.)

கொழும்பு குதிரைப் பந்தயத் திடலில் நடைபெற்றுவரும் 4 நாடுகளுக்கு இடையிலான பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கிண்ண சர்வதேச அழைப்பு காலப்பந்தாட்டப் போட்டியில் சம்பியனாவதற்கு இலங்கை அணியினர் உறுதிபூண்டுள்ளனர்.

மாலைதீவுகள் அணிக்கு எதிரான போட்டியை 4 - 4 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிதோல்வியின்றி முடித்துக்கொண்ட இலங்கை அணியினர், இம் முறை கிண்ணத்தை வென்றுகொடுப்பதாக உறுதி வழங்கினர்.

இலங்கை அணியினரை விளையாட்டுத்தறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ சந்தித்து பாராட்டியபோது, 'அமைச்சரே, பிரதமர் கிண்ணத்தை நிச்சயமாக வென்றெடுப்போம்' என இலங்கை அணியினர் உறுதி வழங்கினர்.

இலங்கை அணியினரின் ஆற்றலை பராட்டிய அமைச்சர், 'இலங்கை மண்ணில் நீங்கள் வெளிப்படுத்திய ஆற்றல்கள் குறித்து பெருமை அடைகின்றேன். அப் போட்டியை நீங்கள் சமப்படுத்தியதன் மூலம் இலங்கையின் கௌரவத்தைக் காப்பாற்றினீர்கள்' என குறிப்பிட்டார்.

இதேவேளை, இலங்கை அணி இறுதிப் போட்டிக்கு செல்வதை இலக்காகக் கொண்டு தனது இரண்டாவது போட்டியில் சிஷெல்ஸ் அணியை இன்று இரவு (9.00 மணி) எதிர்த்தாடவுள்ளது.

உலக கால்பந்தாட்ட அணிகளுக்கான தரவரிசையில் 199ஆம் இடத்திலுள்ள சிஷெல்ஸை 204ஆம் இடத்தில் உள்ள இலங்கையினால் வெற்றிகொள்ள முடியும் என இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத் தலைவர் ஜஸ்வர் உமர் குறிப்பிட்டார்.

வெளிநாடுகளில் விளையாடும் வீரர்கள் மூவர் இலங்கை அணிக்குள் ஈர்க்கப்பட்டதிலிருந்து இலங்கை காலப்பந்தாட்டத்தில் பெரு முன்னேற்றம் காணப்படுவதாகவும் அவர் கூறினார்.

வெளிநாகளில் கால்ப்பந்தாட்டம் விளையாடிவரும் மேலும் சில இலங்கை வம்சாவளியினரை அடுத்த வருடம் அணியில் இணைத்துக்கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்துவருவதாகக் குறிப்பிட்ட ஜஸ்வர், மாலைதீவுகளுடான போட்டியை வெற்றிதோல்வியின்றி முடிவுக்குக் கொண்டுவந்த இலங்கை வீரர்களுக்கு போனஸ் பரிசு வழங்கப்படும் என்றார்.

இதேவேளை இன்றைய முதலாவது போட்டியில் மாலைதீவுகள் அணியும் பங்களாதேஷ் அணியும் விளையாடுகின்றன.