இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் மகேந்திர சிங் டோனி சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். 

இச் சந்திப்பு இடம்பெறுவதற்கு முன் இடம்பெற்ற எம்.எஸ்.தோனி பட விளம்பர விழாவில் படையப்பா பட திரைப்பட வசனத்தை தமிழில் பேசி ரஜினி ரசிகர்களை டோனி மகிழ்வித்திருந்தார்.

இந்திரைப்பட விழா நிகழ்வில் நடிகர் சூர்யாவின் இரு பிள்ளைகளையும் சந்தித்து நகைச்சுவையாக பேசிய டோனி, நான் உங்கள் அப்பாவின் தீவிர ரசிகன் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் டோனியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு “எம்.எஸ்.டோனி தி அன்டோல்ட் ஸ்டோரி” என்கிற திரைப்படம் தாயராகியுள்ளது. 

எதிர்வரும் 30 ஆம் திகதி வெளியாகவுள்ள இந்த திரைப்பபடத்தை விளம்பரப்படுத்துவது தொடர்பான நிகழ்ச்சி சென்னை சத்தியம் தியேட்டரில் நடைபெற்றது. இந்தி படமான இதில் டோனியின் கதாபாத்திரத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புத் நடித்திருக்கிறார்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற டோனி, தாம் ரஜினியின் தீவிர ரசிகர் என்றுதெரிவித்து, படையப்பா படத்தில் ரஜினி பேசிய வசனத்தை பேசிக் காண்பித்து நிகழ்ச்சிக்கு வந்திருந்த ரசிகர்களை டோனி கவர்ந்தார். 

இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நடிகர் தனுசின் வீட்டில் ரஜினிகாந்த்தை டோனி சந்தித்தார்.

45 நிமிடம் நீடித்த இந்த சந்திப்பின்போது சினிமா, ஆன்மீகம், விளையாட்டு என பல்வேறு விஷயங்கள் தொடர்பாக இருவரும் சுவாரஷ்யமாகப் பேசிய மகிழ்ந்துள்ளனர். 

இந்த சந்திப்பின்போது ரஜினி குடும்பத்தினருடன்  உணவருந்தியமை குறிப்பிடத்தக்கது.