(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)

கடன் சுமையுடன் இருக்கும் வாடிக்கையாளர்களை மேலும் கடன் சுமைக்கு தள்ளும் வகையிலேயே வரவு - செலவு திட்ட யோசனைகள் அமைந்திருக்கின்றன. 

மக்கள் எதிர்பார்த்த எதுவும் இல்லை. அத்துடன் அரசாங்கம் எதிர்பார்க்கும் வருமானத்தை பெற்றுக்கொள்ள முடிம் என்ற நம்பிக்கை அரசாங்கத்துக்கு இல்லை என்பது தெளிவாக தெரிகின்றது என முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்,

அடுத்த வருடத்துக்கான வரவு - செலவு திட்டம் நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் அது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவி்கையில்,

வரவு - செலவு திட்டத்தில் எதிர்பார்த்த எதுவும் இல்லை. பெரிய கம்பனிகள் மற்றும் வங்கிகளிடம் வரியை அதிகரித்திருக்கின்றது. 

வங்கிகள் அதனை வாடிக்கையாளர்களிடம் அறவிடுவது நிச்சயமாகும். இதனால் கடன் சுமையுடன் இருக்கும் வாடிக்கையாளர்கள் மேலும் கடன் சுமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 

அத்துடன் அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிப்பதற்கு எடுத்திருக்கும் நடைமுறைகளில் தெளிவில்லாத தன்மை காணப்படுகின்றது. 

அதனால் இதனை எவ்வாறு நடைமுறைப்படுத்துப்போகின்றது என்பதை பார்த்துவிட்டுதான் இதுதொடர்பில் மேலதிக விடயங்கள் தெரியவரும்.

அத்துடன் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ் வரவு - செலவு திட்டத்தில் முன்மொழிந்திருக்கும் விடயத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் என்னதான் உத்தரவாதங்களை தந்தபோதும் அதனை நாங்கள் நம்பப்போவதில்லை. 

கிராமங்கள் பிரதேசங்களின் அபிருத்திக்கு நிதி ஒதுக்கப்படுள்ளபோதும் அதற்கான பணத்தை எவ்வாறு அரச வருமானமாக ஈட்டிக்கொள்ளப்போகின்றது என்பது தொடர்பில் பலத்த சந்தேகம் இருக்கின்றது.

மேலும் நெருக்கடியான காலகட்டத்தில் இவ்வாறான வரவு செலவு திட்டம் மூலம் தெளிவின்மை காணப்படுகின்றது. 

குறிப்பாக ஒவ்வொரு காலாண்டிலும் செலவு செய்யக்கூடிய நிதியை திறட்டிய பின்னர் அதற்கு அனுமதி அளிக்கப்பட்ட பின்னர்தான் செலவினங்களை செய்ய முடியும் என்ற புதிய ஏற்பாட்டை செய்திருக்கின்றது. 

இதன் மூலம் எந்த ஆதாயத்தையும் அரசாங்கத்துக்கு சரிவர பெறமுடியும் என்ற நம்பிக்கை இல்லை என்பது தெளிவாக தெரிகின்றது என்றார்.