2022 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்டத்திற்கமைய உடனடியாக செயல்வலுப் பெறும் விதமாக மதுவரியை அதிகரிப்பதற்கு நிதியமைச்சர் முன்மொழிந்துள்ளார்.

வரி அதிகரிப்பன் மூலம் 25 பில்லியன் வருமானத்தை பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கப்படுகிறது. 

அதற்கமைய இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் தேசிய மட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் மதுபானங்களினதும், இறக்குமதி செய்யப்படும் மதுபானங்களினதும் விலை அதிகரிக்கப்பட்டுள்ளன.

அதன்படி 750 மில்லி லீட்டர் உள்நாட்டு அதிவிசேஷ சாராயம் போத்தல் ஒன்றின் விலை 96.14 ரூபாவினாலும்,தேசிய மட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் ஏனைய சாராயம் ஒரு போத்தலின் விலை 103.73 ரூபாவினாலும்,வெளிநாட்டு மதுபானப் போத்தலின் விலை 127 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

2022 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்டத்திற்கமைய மதுபானங்களின் விற்பனை விலை திருத்தம் செய்யப்பட்டுள்ளது. புதிய விலை இன்று முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான வர்த்தமானி நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.

புதிய வரித்திருத்தத்திற்கமைய விசேட சாராயத்திற்காக விதிக்கப்பட்டிருந்த வரி 3800 ரூபா தொடக்கம் 4180 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது 380 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதற்கு மேலதிகமாக மொலேஸஸ், பனங்கள்,தென்னங்கள், மற்றும் பதப்படுத்திய சாராயம் ஆகியவற்றிற்கான வரி 410 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

தேசிய மட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் வெளிநாட்டு மதுபானங்களான விஸ்கி, பிறன்டி, ஜின் மற்றும் ரம் ஆகிய மதுபானங்கள் மீதான வரி 4150 ரூபா தொடக்கம் 4570 ரூபா வரை 420 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வைன் வகையிலான மதுபானங்களுக்கான வரி 3300 வரை அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், 5சதவீதத்திற்கும் குறைவான செறிவுடைய பியர் 100 ரூபாவினாலும்,5 சதவீதத்திற்கும் அதிகமான செறியுடைய பியர் 250 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் அதிவிசேடம் 750 மில்லி லீட்டர் மதுபானத்திற்கான வரி 96.14 ரூபாவினாலும்,ஏனைய மதுபானங்களுக்கான வரி 103.73 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

தேசிய மட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் வெளிநாட்டு வைன்(750மி.லீ) வரி அறவிடல் 126.84 ரூபாவினாலும், 5 சதவீதத்திற்கும் குறைவான  செறிவுடைய  (625 மி.லீ) பியரின் விலை 3.10 ரூபாவிலும்,5சதவீதத்திற்கும் அதிகமான செறிவுடைய பியரின் விலை 14 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

சிகரெட் மீது அறவிடப்படுகின்ற வரியை உடனடியாக செயல்வலுப் பெறும் விதமாக அதிகரிப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. அதற்கமைவாக ஒரு சிகரெட்டின் விலை 5 ரூபாவினால் அதிகரிக்கப்படும். விலை அதிகரிப்பின் ஊடாக அரசாங்கத்திற்கு 8 பில்லியன் வருமானம் கிடைக்கப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.