(நா.தனுஜா)
நாட்டுமக்கள் தற்போது முகங்கொடுத்திருக்கும் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் எதனையும் உள்ளடக்கியிருக்காத 2022 ஆம் ஆண்டிற்கான வரவு - செலவுத்திட்டம் இலங்கையை சோமாலியாவாக மாற்றுவதற்கான வரவு - செலவுத்திட்டமாகும்.
இந்த வரவு - செலவுத்திட்டத்தின் ஊடாக நாட்டுமக்கள் எவ்விதத்திலும் நன்மையடையப்போவதில்லை.
மாறாக அரசாங்கத்திற்கு நெருக்கமானவர்கள் மாத்திரமே சலுகைகளையும் நிவாரணங்களையும் பெற்றுக்கொள்வார்கள் என்று எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டுக்கான வரவு, செலவுத்திட்டம் நேற்று வெள்ளிக்கிழமை நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதன் உள்ளடக்கம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே சஜித் பிரேமதாஸ மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:
நாட்டுமக்கள் புரட்சிகரமான வரவு - செலவுத்திட்டமொன்றை எதிர்பார்த்தார்கள். ஆனால் அதற்கு முற்றிலும் மாறான, எவ்வித பயனுமற்ற வரவு, செலவுத்திட்டமே சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றது.
மக்களின் நலன்களை முன்நிறுத்தி வரவு - செலவுத்திட்டத்தை எதிர்பார்த்திருந்த அனைவருக்கும் பிரதிபலன்கள் எவையுமற்ற காகிதமே பதிலாகக் கிடைத்திருக்கின்றது.
நாட்டின் பொருளாதாரத்தை சீராக நிர்வகிப்பதற்கான எந்தவொரு செயற்திட்டமும் இந்த வரவு - செலவுத்திட்டத்தில் உள்ளடக்கப்படவில்லை.
பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கான குறுங்கால மற்றும் நீண்டகால அடிப்படையிலான வியூகங்களோ செயற்திறனான நுட்பங்களோ உள்ளடக்கப்படவில்லை.
பொருளாதார வளர்ச்சி வீதத்தைத் துரிதப்படுத்துவதற்காக திட்டங்கள் எவையும் முன்வைக்கப்படவில்லை.
வரவு - செலவுத்திட்டப் பற்றாக்குறையைக் குறைத்துக்கொள்வதற்கான திட்டங்களும் இல்லை.
அதிகரித்துள்ள வாழ்க்கைச்செலவு, பணவீக்கம், வாழ்க்கைத்தரத்தில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி ஆகியவற்றுக்கு வரவு - செலவுத்திட்டத்தின் மூலம் உரிய தீர்வு வழங்கப்படவில்லை.
மக்களின் வரையறுக்கப்பட்ட வருமானத்தில் அன்றாட வாழ்க்கையை முன்கொண்டுசெல்வதற்கான இயலுமை வீழ்ச்சிகண்டுவருகின்றது.
நாட்டின் கடன்களை மீளச்செலுத்துவதற்கான வழிமுறைகள் மற்றும் நாணயமாற்றுவீதத்தை சாதகமான மட்டத்தில் பேணுவதற்கான நுட்பங்கள் தொடர்பில் வரவு - செலவுத்திட்டத்தில் குறிப்பிடப்படவில்லை.
விவசாயிகள் முகங்கொடுத்திருக்கும் பிரச்சினைகள் மற்றும் அதன் விளைவாக நாட்டின் உற்பத்தியில் ஏற்படக்கூடிய வீழ்ச்சி என்பவற்றுக்குத் தீர்வு வழங்கப்படவில்லை.
உலகளாவிய ரீதியில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஆதிக்கம் மேலோங்கிவரும் சூழ்நிலையில், எமது நாட்டில் டிஜிட்டல் தொழில்நுட்பப் புரட்சியை ஏற்படுத்துவதற்கான செயற்திட்டங்களும் வரவு - செலவுத்திட்டத்தில் குறிப்பிடப்படவில்லை.
ஆகவே சுருக்கமாகக் கூறுவதாயின், 2022 ஆம் ஆண்டிற்கான வரவு, செலவுத்திட்டமானது எமது நாட்டை சோமாலியாவாக மாற்றுவதற்கான வரவு - செலவுத்திட்டமாகும்.
அதுமாத்திரமன்றி இவ்வரவு, செலவுத்திட்டத்தில் பொய்யான தரவுகளும் அடங்கியுள்ளன.
குறிப்பாக கொவிட் - 19 வைரஸ் பரவல் காரணமாக அரசாங்கத்திற்கு 500 பில்லியன் ரூபா வருமான இழப்பு ஏற்பட்டதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஆனால் இந்த வரவு, செலவுத்திட்டத்தை சமர்ப்பித்த நிதியமைச்சர் கடந்த செப்டெம்பர் மாதம் மேற்படி வருமான இழப்பு 1500 - 1600 பில்லியன் ரூபா என்று கூறியிருந்தார்.
இவ்வாறு மாற்றப்பட்ட தரவுகளைக்கூறி ஏன் மக்களை ஏமாற்றுகின்றார்கள்? அரச மற்றும் தனியார்துறை ஊழியர்கள் எதிர்பார்த்த சம்பள அதிகரிப்பு எங்கே? தற்போதைய மட்டுப்படுத்தப்பட்ட வருமானத்தில் மக்கள் எவ்வாறு வாழமுடியும்?
2022 ஆம் ஆண்டிற்கான வரவு, செலவுத்திட்டத்தினால் நாட்டுமக்கள் எதிர்பார்த்தவாறான நிவாரணங்களோ அல்லது நன்மைகளோ கிடைக்கப்போவதில்லை.
நாட்டை விரைவாக வீழ்ச்சிப்பாதையில் இட்டுச்செல்லும் வகையிலானதொரு வரவு, செலவுத்திட்டமே பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றது.
இதன்மூலம் அரசாங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் அவர்களுக்கு நெருக்கமானவர்களுக்கும் நன்மையளிக்கக்கூடியவகையிலான சில நிதியொதுக்கீடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.
இருப்பினும் மக்களுக்கான நலன்கள் இந்த வரவு - செலவுத்திட்டத்தின் ஊடாகக் குறைக்கப்பட்டிருக்கின்றன.
எனவே நாட்டுமக்களை மறந்துவிட்டு, அரசியல் ரீதியில் தமக்கு நெருக்கமானவர்களுக்கு சலுகைகளை வழங்கும் வகையிலேயே 2022 ஆம் ஆண்டிற்கான வரவு - செலவுத்திட்டம் அமைந்திருக்கின்றது என்று குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM