(பா.ருத்ரகுமார்)

அரசாங்கத்தின் முறையான வரிக்கொள்கை முறைமை மற்றும் நம்பகத்தன்மை என்பன அடுத்த ஆண்டுக்கான வரவு–செலவுத் திட்டத் தில் உறுதிப்படுத்தப்பட வேண்டுமென சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வலியுறுத்தியுள்ளது.

தற்போது இலங்கையில் அமுல்படுத்தப்பட்டுள்ள வற் வரி முறைமை அவசியமான தேவையாக காணப்படுகின்ற போதும் அது மக்களை பாதிக்கும் வகையில் அமைந்துவிடக்கூடாது என்பதை கருத்திற்கொண்டு வருமான அதிகரிப்புக்கு தேவையான ஆலோசனைகளையும், வரவுசெலவுத்திட்டத்தில் ஏற்படுத்த வேண்டிய உள்ளீடுகள் தொடர்பிலும் அரசாங்கத்துக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் குழு தலைவர் ஜெவோ லீ தெரிவித்தார்.

இம்மாதம் 13 ஆம் திகதியிலிருந்து 23 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் உறுப்பினர்கள் நேற்று வெள்ளிக்கிழமை மத்திய வங்கி தலைமையகத்தில் ஊடகவியளாளர் மாநாட்டை நடத்தியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.