தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் தமிழர் தாயகத்தில் சிங்­கள, பௌத்த மய­மாக்­கலை உடன் நிறுத்­தக்­கோ­ரியும் தமிழ் தேசி­யத்தின் இறைமை, சுய­நிர்­ணய உரிமை அடிப்­ப­டை­யி­லான ஒரு சமஷ்டித் தீர்வை வலி­ யு­றுத்­தியும் யுத்­தக்­குற்­றங்­க­ளுக்கும் இனப்­ப­டு­கொ­லைக்­கு­மான சர்­வ­தேச விசா­ர­ணையை வலி­யு­றுத்­தியும்இ அர­சியல் கைதிகள் விடு­தலை காணாமல்­போனோர் வி­வகாரம் மீள்­கு­டி­யேற்­றத்தில் காணப்­படும் தாமதம் காணி அப­க­ரிப்பு, இரா­ணுவ பிர­சன்னம், பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கான வாழும் உரிமை ஆகி­ய­வற்­றுக்கு உட­னடித் தீர்­வொன்றை வழங்­கு­மாறு கோரிக்கை விடுத்து தேசிய அரசாங்கம், சர்வதேச சமூகம் ஆகிய வற்றின் கவனத்தை ஈர்க்கும் வகையிலான 'எழுக தமிழ்' மாபெரும் கவனயீர்ப்பு  பேரணி இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. 

இந்த கவனயீர்ப்பு பேரணிக்கு அரசியல் கட்சிகள் பொது அமைப்புக்கள் தமிழகத்தைச் சேர்ந்த அமைப்புக்கள் என பெருமளவான கட்சிகளும் அமைப்புகளும் ஆதரவு வழங்கியுள்ளன.

இரு இடங்களில் ஆரம்பம் 

வலிவடக்கு, வலி.மேற்கு, யாழ்.நகரத்தை அண்மித்த பகுதிகள், ஆகிய பகுதிகளிலிருந்து வருகை தரும் பொதுமக்கள், பல்கலைக்கழக கல்வி சார் மற்றும் கல்வி சாரா தரப்புக்கள், பொது அமைப்புக்கள் அரசியல் கட்சிகள், மத அமைப்புக்கள்  ஆகியன யாழ்.பல்கலைக்கழக பிரதான  வாயில் முன்றலில் அணி திரளவுள்ளன. அதேபோன்று வடமராட்சி, தென்மராட்சி, கிளிநொச்சி, வவுனியா, மன்னார். முல்லைத்தீவு  மற்றும் ஏ9 வீதிக்கு அண்மித்த பகுதிகளிலிருந்து வருகை தரும் பொதுமக்கள், தொழிற்சங்கங்கள், அரசியல் கட்சிகள், மத அமைப்புக்கள்,  நல்லூர் கந்தசுவாமி கோவில் முன்றலில் ஒன்று கூடவுள்ளன. 

சி.வி ஆரம்பித்து வைப்பார்

இரண்டு இடங்களிலும் ஒன்றுகூடல்கள் நிறைவடைந்ததன் பின்னர் காலை 9மணிக்கு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் நல்லூர் ஆலய முன்றலிலிருந்து கவனயீர்ப்பு பேரணியை உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கவுள்ளார். இதனையொத்த நேரத்திலேயே பல்கலைக்கழக முன்றலிலிருந்தும் பேரணி ஆரம்பமாகவுள்ளது. 

பேரணி செல்லும் பாதை

நல்லூர் ஆலய முன்றலில் ஆரம்பமாகும் பேரணி கந்தர்மடத்தை நோக்கி நகர ஆரம்பிக்கும். அதேநேரம் யாழ்.பல்கலைகழக முன்னறிலில் ஆரம்பிக்கும் பேரணி பலாலி வீதியூடாக கந்தர்மடம் நோக்கி நகர ஆரம்பிக்கும். கந்தர்மடம் சந்தியில் இரண்டு பேரணிகளும் சந்தித்தன் பின்னர் நாவலர் வீதி வழியாக இலுப்பையடிச்சந்தியை அடைந்து கஸ்தூரியார் வீதி வழியாக வைத்திய சாலை வீதியை பேரணி அடையும். பின்னர் வைத்திய சாலை வீதி யூடாக சத்திரச்சந்தியை அடைந்து அங்கிருந்து காங்கேசன் துறை வீதியூடாக முற்றவெளியை அடையவுள்ளது.

பிரதான கூட்டம்

முற்றவெளி மைதானத்தில் பேரணியில் கலந்துகொண்ட அனைவரின் சங்கமிப்புடன் பிரதான கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் தமிழ் மக்களின் கோரிக்கைகள், தேவைகள், வாக்குறுதி அளிக்கப்பட்டும் தற்போது நிறைவேற்றப்படாதுள்ள விடயங்கள், ஏமாற்றங்கள், எதிர்பார்ப்புக்கள், நிரந்தரமான அரசியல் தீர்வு, பாதிக்கப்பட்ட தரப்புக்கான  உரிய பொறுப்புக்கூறலும், நீதி வழங்கலும் ஆகிய அனைத்து விடயங்களையும் ஆட்சியில் அமர்ந்திருக்கும் தேசிய அரசாங்கத்திற்கும், சர்வதேச சமுகத்திற்கும் எடுத்துரைக்கும் வகையில் தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவரும், வடமாகாண முதலமைச்சருமான சி.வி.விக்கினேஸ்வரன் விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார்.

பல தரப்புக்களும் ஆதரவு

தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்த கவனயீர்ப்பு பேரணிக்கு, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளான ஈ.பி.ஆர்.எல்.எப், புளொட், ரெலோ ஆகிய கட்சிகள் தமது பூரண ஆதரவையும் ஒத்துழைப்புக்களையும்  வெளியிட்டுள்ளதோடு மக்களை அணிதிரளுமாறும் கோரிக்கை விடுத்துள்ளன. 

அதேவேளை  தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழர் விடுதலைக் கூட்டணி, ஸ்ரீரெலோ உள்ளிட்ட கட்சிகளும், பூரணமான ஆதரவை வழங்கியுள்ளதோடு, யாழ்.பல்கலைக்கழக கல்விசார் மற்றும் கல்வி சாரா அமைப்புக்கள், இலங்கை ஆசிரியர் சங்கம், கடற்றொழிலாளர் சங்கங்கள், அமைப்புக்கள், சிகை அலங்கரிப்பாளர் சங்கங்கள், போக்குவரத்து சங்கங்கள்,, விவசாய அமைப்புக்கள், வர்த்தக அமைப்புக்கள், மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம், கத்தோலிக்க மறைமாவட்ட நீதிக்கும் சமாதானத்திற்குமான ஆணைக்குழு, வீணாகான குருபீடம், தமிழ் சிவில் சமூக அமையம், பிரஜைகள் குழுக்கள், பொது அமைப்புக்கள், இடம்பெயர்ந்தோரை மீள்குடியேற்றுவதற்கான அமைப்புக்கள், காணாமல்போனோரை தேடியறிவதற்கான அமைப்புக்கள், மகளீர் அமைப்புக்கள் உட்பட பல அமைப்புக்களும் ஆதரவினை வழங்குவதாக அறிவித்துள்ளன.

தமிழக, புலம்பெயர் தரப்புக்கள் ஆதரவும் கோரிக்கையும்

எழுக தமிழ் மாபெரும் கவனயீர்ப்பு பேரணியில் அனைத்து ஈழ உறவுகளையும் அணிதிரளுமாறும் இப்பேரணி வெற்றிபெறுவதற்கு தமது வாழ்த்துக்களை தெரிவித்து தமது பூரணமான ஆதரவையும்  தமிழக அரசியல் கட்சிகள், புலம்பெயர் அமைப்புக்கள் வெளியிட்டுள்ளன. 

குறிப்பாக திராவடர் விடுதலைக்கழகம், விடுதலைச்சிறுத்தைகள் கட்சி, தமிழ் தேசிய பேரியக்கம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகம், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, தமிழ் நாடு சட்டத்தரணிகள் சங்கம், பேராசிரியர் புகழேந்தி ஆகியோரும், அமெரிக்கா, பிரித்தானியா, கனடா உட்பட ஐரோப்பிய நாடுகளின் புலம்பெயர் அமைப்புக்களும் பேரணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

ஏற்பாடுகளும் பூர்த்தி

தனியே மக்கள் நலன் சார்ந்து முன்னெடுக்கும் இப்பேரணிக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தமிழ் மக்கள் பேரவை அறிவித்துள்ளது. குறிப்பாக பேரணியில்  பொதுமக்கள் பங்கேற்கும் வகையில் விசட போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரதேசத்திலிருந்தும் பேரணியில் கலந்து கொள்வதற்காக விசேட போக்குவரத்து சேவை நடத்தப்படவுள்ளது. அதற்கான பிரத்தியேக பெயர் பலகையுடன் குறித்த பேரூந்துகள் சேவையில் ஈடுபடவுள்ளன. அத்துடன் துவிச்சக்கர வண்டிகள்இ மற்றும் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் இதரவாகனங்களில்  வருவோர் பேரணியில் இணைந்து கொள்வதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.  அதற்கான அறிவுதல்கள் வழங்கப்படும் பட்சத்தில் அவற்றை பின்பற்றுமாறும் பேரவை கோரியுள்ளது. 

ஈ.பி.டி.பியின் அறிவிப்பு

எழுக தமிழ்' கூட்டுப்பேரணியை வெற்றிபெறச் செய்வோம். மக்களே அணிதிரண்டு வாரீர்! அலை கடலென வாரீர் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி அழைப்பு விடுத்துள்ளதுடன்.  தமிழ் பேசும் மக்களின் இலட்சிய கனவுகளை வென்றெடுக்க ஒருமித்த குரலுக்கு உரம் கொடுத்து பலம்சேர்க்க எழுக தமிழ் கூட்டுப்பேரணியில் பங்கேற்க உணர்வெழுச்சியோடு அனைத்து மக்களும் அணிதிரண்டு வருமாறு அறைகூவல் விடுப்பதாக கூறியுள்ளது. 

சர்ச்சையும் தெளிவு படுத்தலும்

தமிழ் மக்களின் பேராதரவுடன் நடைபெற இருக்கும் இப்பேரணியை குழப்பும் நோக்குடன் சிலர் விசமத்தனமான பிரச்சாரங்களை முன்னெடுக்க தயாராக இருப்பதாகவும் எம்மால் அறிய முடிகின்றது. ஜனநாயகக் கட்சி எனற பெயர் குறிப்பிடப்பட்ட சுவரொட்டிகள் யாழ்ப்பாண நகரப் பகுதியில் ஒட்டப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகின்றது. இத்தகைய சுவரொட்டிகளை யார் வெளியிட்டார்கள் என்பது தெரியவில்லை ஆயினும் இதற்கும் தமிழ் மக்கள் பேரவை முன்னெடுக்கும் பேரணிக்கும் எதுவித தொடர்பும் இல்லை என அறிவித்துள்ள தமிழ் மக்கள் பேரவை, அரசியல் கட்சிகள் சார்பற்ற இப்பேரணியில் தமிழ் மக்களின் நலன் சார்ந்து பேரவையால் முன்மொழியப்பட்ட கோரிக்கைகளை ஏற்று அதனை ஆதரிப்பவர்கள் எவராயினும் இப்பேரணியில் கலந்து கொள்ள முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளது. 

உணர்பூர்வமாக அணிதிரள்வீர்

இந்த பேரணியில் பொதுமக்கள், உட்பட அனைத்து தமிழ்த் தரப்புக்களும் அணிதிரளவேண்டுமென வடமாகாண முதலமைச்சர், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள், வடமாகாண போக்குவரத்து அமைச்சர், தமிழ் தேசிய மக்கள் முன்னணி யின் தலைவர்கள் உட்பட பல தரப்புக்களும் பகிரங்கமாக கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.