அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் வழக்குகளை வவுனியா அல்லது யாழ்ப்பாண மேல் நீதிமன்றங்களுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர்  விஜயகலா மகேஸ்வரன் கோரியுள்ளார்.

தம்மை விடுதலை செய்யுமாறு கோரி அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் தமது வழக்குகளை தமிழ்ப் பகுதிகளில் உள்ள நீதிமன்றுக்கு மாற்றுமாறு கோரியும் வருகின்றனர்.

இதனையடுத்தே அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் வழக்குகளை யாழ்ப்பாணம் அல்லது வவுனியா மேல் நீதிமன்றங்களுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்குமாறு இராஜாங்க அமைச்சர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரியிருக்கின்றார். இதற்கான கடிதத்தினை அவர் பிரதமரிடம் நேற்று கையளித்துள்ளார்.

இந்தக் கைதிகளின் வழக்குகள் அனுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் இடம்பெறுவதனால் மொழிப் பிரச்சினை காரணமாக வழக்கு விசாரணை இழுபட்டுச் செல்கின்றது. வழக்கு விசாரணையை துரிதப்படுத்துவதாயின் இந்த வழக்குகளை யாழ்ப்பாணம் அல்லது வவுனியா மேல் நீதிமன்றங்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.