(எம்.மனோசித்ரா)

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடனும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடனுமே ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இணக்கப்பாட்டு ஒப்பதந்தங்களைச் செய்துள்ளது. 

எனவே சுதந்திர கட்சியை விமர்சித்துக் கொண்டிருக்கும் ஒவ்வொருவருக்கும் தனித்து பதில் கூற வேண்டிய தேவை கிடையாது என்று இராஜாங்க அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட முக்கியஸ்தர்களுக்கும் இடையில் சு.க. தலைமையகத்தில் விசேட சந்திப்பொன்று நேற்று இடம்பெற்றது. 

இந்தச் சந்திப்பு நிறைவடைந்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே துமிந்த திஸாநாயக்க இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பை பலப்படுத்துவதற்காகவே இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடனேயே நாம் இணக்கப்பாட்டை எட்டியுள்ளோம் என்பதை சுதந்திர கட்சியை விமர்சிப்பவர்களிடம் தெரிவிக்க விரும்புகின்றோம். அதேபோன்று தான் பொதுஜன பெரமுன கட்சியுடனும் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

எனவே பாராளுமன்ற உறுப்பினர்களுக்கோ அல்லது வேறு நபர்களுக்கோ தனிப்பட்ட ரீதியில் பதிலளிப்பதற்கான தேவை கிடையாது. காரணம் கட்சி என்ற ரீதியில் இரு கட்சிகளே இணைந்துள்ளன. 

பொதுஜன பெரமுன மாநாட்டின்போது பங்காளி கட்சிகளுடன் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பதை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மிகத் தெளிவாக தெரிவித்திருந்தார்.

பதவிகள் தொடர்பில் சுதந்திர கட்சி எந்த சந்தர்ப்பத்திலும் கவனம் செலுத்துவதில்லை. சுதந்திர கட்சி அனைத்து சந்தர்ப்பங்களிலும் நாட்டை பற்றி சிந்தித்தே செயற்படும் என்றார்.

இதன்போது கருத்து வெளியிட்ட முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தாத அரசியல் கட்சிகள் பலவற்றின் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடியிருந்தோம். அதற்கமைய ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் இணைந்து செயற்படுவது தொடர்பில் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டது. 

அண்மையில் எந்த தேர்தல்களும் அறிவிக்கப்படவில்லை என்பதால் அது தொடர்பில் அவதானம் செலுத்தப்படவில்லை என்றார்.