வரவு, செலவுத்திட்டத்தை சமர்ப்பிப்பதற்கு முன் ஓய்வூதிய குறைப்பை அரசாங்கம் நீக்கிக்கொள்ளவேண்டும் - எரான் விக்ரமரத்ன வலியுறுத்தல்

Published By: Digital Desk 3

12 Nov, 2021 | 10:02 AM
image

(நா.தனுஜா)

ஓய்வூதியப்பயனாளிகளுக்கு 'அக்ரஹார' காப்புறுதியை வழங்குதல் என்ற போர்வையில் அவர்களுக்கான ஓய்வூதியக்கொடுப்பனவிலிருந்து சுமார் 600 ரூபாவை குறைப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. 

பாராளுமன்றத்தில் வரவு, செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னதாக இத்தீர்மானத்தை அரசாங்கம் இரத்துச்செய்யவேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைக்காரியாலயத்தில் நேற்று வியாழக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அங்கு அவர் மேலும் கூறியதாவது,

அண்மையில் ஓய்வூதியப்பயனாளிகளுக்கு 'அக்ரஹார' காப்புறுதியை வழங்குதல் என்ற போர்வையில் அவர்களுக்கான கொடுப்பனவிலிருந்து சுமார் 600 ரூபாவை குறைப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டிருக்கின்றது. இலங்கையைப் பொறுத்தவரையில் முதியவர்களின் தேவைகளைப் பூர்த்திசெய்வதற்கு அவசியமான போதியளவு வசதிகள் இல்லாமையினால் அவர்களுக்கு ஓய்வூதியக்கொடுப்பனவு என்பது மிகவும் அவசியமானதாகும். 

எனவே அதில் குறைப்பைச் செய்கின்ற தீர்மானத்தை பாராளுமன்றத்தில் வரவு, செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னதாக அரசாங்கம் நீக்கிக்கொள்ளவேண்டும்.

அதேபோன்று தனியார்துறை ஊழியர்கள் பணியிலிருந்து ஓய்வுபெறுவதற்கான வயதெல்லையை 60 ஆக உயர்த்துவதற்கும் பாராளுமன்றத்தில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. ஓய்வுபெறுவதற்கான வயதெல்லையை அதிகரிப்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம். 

குறிப்பாக ஓய்வுபெறும் வயதெல்லை 55 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளமை நியாயமற்றது என்பதே எனது நிலைப்பாடாகும். இருப்பினும் இலங்கையைப் பொறுத்தவரை 55 வயதில் ஓய்வுபெறமுடியும் என்ற நிலை காணப்படுவதனால், தற்போது பணிபுரிபவர்கள் அதற்கேற்றவாறு தமது திட்டங்களை வகுத்திருப்பார்கள். அத்திட்டங்கள் பெரும்பாலும் அவர்களுக்குரிய ஊழியர் சேமலாப நிதியத்தை மையப்படுத்தியவையாகவே இருக்கின்றன. 

எனவே ஏற்கனவே நடைமுறையிலிருந்த நியதியின்படி வகுத்திருந்த திட்டங்களை அடிப்படையாகக்கொண்டு ஒருவர் 55 வயதுடன் ஓய்வுபெறுவதற்குத் தீர்மானித்தால், அவருக்குரிய ஊழியர் சேமலாப நிதியத்தொகை வழங்கப்படவேண்டும். பொருளாதாரத்தை உரியவாறு நிர்வகிப்பதற்கான இயலுமையை அரசாங்கம் கொண்டிராததன் விளைவாக ஏற்பட்ட நட்டத்தை ஓய்வூதியக்கொடுப்பனவு மற்றும் ஊழியர் சேமலாப நிதியம் ஆகியவற்றின் மூலம் ஈடுசெய்துகொள்வதற்கு அரசாங்கம் முற்படுமேயானால, அதனை நாம் முழுமையாக எதிர்க்கின்றோம். 

எனவே இவ்விடயம் தொடர்பில் இன்றைய தினம் (நேற்று) பாராளுமன்றத்தில் திருத்தத்தை முன்வைத்து அதனை மாற்றியமைக்கவேண்டும்.

அடுத்ததாக அரசாங்கத்திற்குச் சொந்தமான பல்வேறு கட்டமைப்புக்கள் நட்டத்தில் இயங்கிவருகின்றன. அவற்றில் குறிப்பாக சுமார் 7000 ஊழியர்களைக் கொண்ட ஸ்ரீலங்கன் விமானசேவை கடந்த 10 - 11 ஆண்டுகாலத்தில் அடைந்திருக்கக்கூடிய நட்டம் 250 பில்லியன் ரூபாவைக் கடந்திருக்கின்றது. எமது நாட்டின் பிரஜைகளில் பெரும்பாலானோர் இலங்கை விமானசேவையில் ஒருமுறைகூடப் பயணித்திருக்கமாட்டார்கள். 

ஆனால் செல்வந்தர்களுக்காக இயங்குகின்ற அவ்விமானசேவை நிறுவனத்திற்கு ஏற்பட்ட நட்டத்தின் சுமை சாதாரண பொதுமக்கள்மீதே சுமத்தப்படுகின்றது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் ஆட்சிக்காலத்தில் ஸ்ரீலங்கன் விமானசேவையின் 51 பங்குகள் எமது நாட்டின் வசமும் 43.6 சதவீதமான பங்குகள் எமிரேட்ஸ் நிறுவனத்தின் வசமும் காணப்பட்டன. அதன்பிரகாரம் கடந்த 1998 ஆம் ஆண்டிலிருந்து ஸ்ரீலங்கன் விமானசேவையின் நிர்வாகப்பொறுப்பு எமிரேட்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டதுடன் பீட்டர் ஹில் என்பவர் பிரதம நிறைவேற்று அதிகாரியாக நியமிக்கப்பட்டார். 

இந்நிலையில் கடந்த 2008 ஆம் ஆண்டில் அப்போதைய ஜனாதிபதியும் அவரது குழுவினரும் கொழும்பிலிருந்து லண்டனுக்குச் செல்வதற்கு ஸ்ரீலங்கன் விமானசேவையில் ஆசனங்களைக் கோரினர். இருப்பினும் ஆசனங்கள் அனைத்தும் ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டிருந்தமையினால், ஜனாதிபதி கோரிய ஆசனங்களை அவர்களால் வழங்கமுடியாமல்போனது. 

ஆசனங்கள் வழங்கப்படாமையினால் பிரதம நிறைவேற்று அதிகாரியாகப் பதவிவகித்த பீட்டர் ஹில் என்பவரின் வீசா அரசாங்கத்தினால் இரத்துச்செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து ஸ்ரீலங்கன் விமானசேவையை நிர்வகிக்கும் பொறுப்பிலிருந்து எமிரேட்ஸ் நிறுவனம் விலகிக்கொண்டது. அதன் விளைவாக ஸ்ரீலங்கன் விமானசேவையின் நட்டம் 250 பில்லியன் ரூபாவைக் கடந்திருக்கின்றது

இவ்வாறானதொரு சூழ்நிலையில் நாளைய தினம் (இன்றையதினம்) சமர்ப்பிக்கப்படவுள்ள 2022 ஆம் ஆண்டிற்கான வரவு, செலவுத்திட்டத்தில் கல்வி மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளுக்கான ஒதுக்கீடுகள் குறைக்கப்பட்டிருப்பதாக அறியமுடிகின்றது. அதுமாத்திரமன்றி வரவு, செலவுத்திட்டத்தின் மூலம் மக்களுக்கு வழங்குவதற்கு எதுவுமில்லை என்றும் மாறாக அவர்களிடமிருந்தே பெறவேண்டியிருக்கின்றது என்றும் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ கூறுகின்றார். 

ஆனால் மக்களிடமிருந்து பெறுமளவிற்கு அவர்களிடம் எதுவும் இல்லையென்பதை முதலில் புரிந்துகொள்ளவேண்டும். அதேபோன்று அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழும்போது, எதிர்க்கட்சியே அவர்களுக்குத் தூண்டுதலளிக்கின்றது என்றுகூறி ஜனாதிபதி நழுவிக்கொள்ளக்கூடாது. 

மாறாக மக்களின் பிரச்சினைகளுக்குரிய தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று குறிப்பிட்டார். 

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13