(துபாயிலிருந்து நெவில் அன்தனி)

இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட்டில் பாகிஸ்தானின் வெற்றி அலையை முடிவுக்குக் கொண்டுவந்ததுடன் பாகிஸ்தானின் இருபதுக்கு - 20 உலகக் கிண்ண கனவையும் இறுதிநேரத்தில் தகர்த்த அவுஸ்திரேலிய அணி 5 விக்கெட்டுகளால் அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது.

Marcus Stoinis and Matthew Wade were involved in a half-century stand, Australia vs Pakistan, T20 World Cup, 2nd semi-final, Dubai, November 11, 20211

பாகிஸ்தானுக்கு எதிராக துபாய் சர்வதேச விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (11) நடைபெற்ற இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் வீறுநடைபோட்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 5 விக்கெட்களால் வெற்றிபெற்று 11 வருடங்களின் பின்னர் இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றது.


பாகிஸ்தானினால் நிர்ணயிக்கப்பட்ட சற்று கடினமான 177 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 19 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 177 ஓட்டங்களைப் பெற்று அபார வெற்றியீட்டியது.


13 ஆவது ஓவரில் 5 விக்கெட்களை இழந்து 96 ஓட்டங்களை மாத்திரமே அவுஸ்திரேலியா பெற்றிருந்ததால் அவ்வணிக்கு வெற்றிவாய்ப்பு இல்லை என்றே எண்ணத் தோன்றியது.


ஆனால், புதன்கிழமை நடைபெற்ற முதலாவது அரை இறுதியில் போன்றே கடைசி ஓவர்களில் மார்க்ஸ் ஸ்டொய்னிஸும் மெத்யூ வேடும் 40 பந்துகளில் 81 ஓட்டங்களைப் பகிர்ந்து அவுஸ்திரேலியாவை வெற்றிபெறச் செய்தனர்.


அவுஸ்திரேலியாவின் வெற்றிக்கு 20 ஓட்டங்கள் தேவைப்பட்டபோது வேட் கொடுத்த சற்று கடினமான பிடியை ஹசன் அலி தவறவிட்டமை ஆட்டத்தில் திருப்பு முனையாக அமைந்தது.

அதனைத் தொடர்ந்து வேட் 3 சிக்ஸ்களை தொடர்ச்சியாக விளாசி பாகிஸ்தானின் இறுதி ஆட்ட வாய்ப்பை தவிடுபொடியாக்கினார்.


மெத்யூ வேட் 17 பந்துகளில் 4 சிக்ஸ்கள், 2 பவுண்ட்றிகளுடன் ஆட்டமிழக்காமல் 41 ஓட்டங்களையும் மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் ஆட்டமிழக்காமல் 40 ஓட்டங்களையும் பெற்றனர்.


அவுஸ்திரேலியா பதிலுக்கு துடுப்பெடுத்தாடியபோது ஆரம்ப ஓவரிலேயே அணித் தலைவர் ஆரொன் பின்ச்சின் விக்கெட்டை இழந்து பெரும் தடுமாற்றத்தை எதிர்கொண்டது.


எனினும் டேவிட்  வோர்னருடன் ஜோடி சேர்ந்த மிச்செல் மார்ஷ் 2ஆவது விக்கெட்டில் 30 பந்துகளில் 51 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது ஷடாப் கானின் பந்துவீச்சில் மார்ஷ் 28 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேறினார்.


அடுத்துவந்த முன்னாள் தலைவர் ஸ்டீவன் ஸ்மித் நீண்ட நேரம் தாக்குப் பிடிக்காமல் 5 ஓட்டங்களுடன் களம் விட்டகன்றார்.


தாகசாந்திக்குப் பின்னர் ஷதாப் கான் வீசிய முதல் பந்தில் விக்கெட் காப்பாளரிடம் பிடிகொடுத்து டேவிட் வோர்னர் (49) ஆட்டமிழந்ததார். வோர்னர் ஆட்டமிழந்ததாக மத்தியஸ்தர் தீர்ப்பு வழங்கியபோதிலும் 'அல்ட்ரா எஜ்' சலன அசைவுகளில் பந்து துடுப்பிலிருந்து விலகிச் செல்வதாகவே தென்பட்டது.


சற்று நேரத்தில் அதிரடி வீரர் க்ளென் மெக்ஸ்வெல் (7), 'ரிவேர்ஸ் ஸ்வீப் ஷொட்' அடிக்க விளைந்து ஆட்டமிழந்த போது.

அவுஸ்திரேலியாவின் தோற்றுவிடும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஸ்டொய்னிஸ் வேட் ஜோடி அபாரமாகத்  துடுப்பெடுத்தாடியதன் பலனாக ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் நியூஸிலாந்தை எதர்த்தாட அவுஸ்திரேலியா தகுதிபெற்றுக்கொண்டது.


இதன்படி 14 வருட இருபது 20 உலகக் கிண்ண வரலாற்றில் புதிய அணி ஒன்று சம்பியனாவது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட பாகிஸ்தான், எதிரணி பந்துவீச்சாளர்களைத் துவம்சம் செய்து 20 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 176 ஓட்டங்களைக் குவித்தது.

இந்த இருபது 20 உலகக் கிண்ண போட்டியில் ஆரம்பத்திலிருந்து அபரிமிதமாக பிரகாசித்துவந்த அணித் தலைவர் பாபர் அஸாம், மொஹமத் ரிஸ்வான் ஆகிய இருவரும் நேற்றைய போட்டியிலும் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி முதலாவது விக்கெட்டில் 10 ஓவர்களில் 71 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். அஸாம் 39 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய மொஹம்மத் ரிஸ்வான் 4 சிக்ஸ்கள், 3 பவுண்ட்றிகளுடன் 67 ஓட்டங்களைப் பெற்றார். இந்த வருட இருபது 20 உலகக் கிண்ண போட்டியில் ரிஸ்வான் பெற்ற 3ஆவது அரைச் சதம் இதுவாகும்.

பக்கார் ஸமானும் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 32 பந்துகளில் 4 சக்ஸ்கள், 3 பவுண்ட்றிகளுடன் 55 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார். உலகக் கிண்ணப் போட்டியில் ஸமான் பெற்ற முதலாவது அரைச் சதம் இதுவாகும்.

எவ்வாறாயினும் அவர்கள் நால்வரினதும் அபார துடுப்பாட்டங்கள் மெத்யூ வேட், மார்க்ஸ் ஸ்டொய்னிஸ் ஆகியோரின் அதிரடிகள் வீண் போனதுடன் பாகிஸ்தானின் இறுதி ஆட்ட வாய்ப்பும் பறிபோனது.