அவுஸ்திரேலியாவில் தமிழ் கலை, இலக்கிய முயற்சிகளை மதிப்பீடு செய்யும்போது அவற்றுக்கான ஊற்றுக்கண் திறந்து மூன்று தசாப்தங்களுக்கு மேலாகியிருப்பதையும் அவதானிக்கமுடிகிறது.

தமது தாயகத்தில் கலை, இலக்கிய, ஊடகத்துறைகளில் ஈடுபட்டவர்கள் புகலிடம் நாடி இங்கு வந்த பின்னரும் உள்ளார்ந்த ஆற்றல்கள் வற்றிப்போகாமல் இயங்கியமையால் தமிழ் கலை, இலக்கிய படைப்புலகத்தில் அவுஸ்திரேலியாவின் பங்களிப்பும் குறிப்பிடத்தகுந்ததாக விளங்குகிறது.

அவுஸ்திரேலியாவில்  தமிழ் கலை, இலக்கியம், இதழியல், வானொலி,  தொலைக்காட்சி முதலானவற்றை மதிப்பீட்டிற்குட்படுத்தும்போதுதான்  புலம்பெயர் இலக்கியம்   இங்கும் உலகளவிலும் எவ்வாறு பேசுபொருளானது என்பதையும் அறியமுடியும்.

இந்தியாவிலிருந்து ஒரு காலத்தில் இலங்கைக்கும் ஃபிஜி மற்றும் ஆபிரிக்காவிற்கும் தமிழர்கள் புலம்பெயர்ந்து சென்றிருந்தாலும், இலங்கையிலிருந்து தொழில் நிமித்தமும் கல்வியின் பொருட்டும் ஏராளமானோர் வெளிநாடுகளுக்கு சென்றிருந்தாலும், 1983 இல் இலங்கையில்  இனவாத வன்செயல் வெடித்ததன் காரணமாக தமிழர்களில் நிகழ்ந்த பாரிய புலப்பெயர்வின் பின்னர்தான் அவர்கள் மத்தியிலிருந்த கலை, இலக்கிய வாதிகளின் இயக்கத்தினால் புலம்பெயர்ந்தோர் இலக்கியம் பேசுபொருளானது.

இந்த வரலாற்றுப் பின்னணியில் அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் கடந்த இரண்டு தசாப்த காலமாக முன்னெடுத்துவரும் தமிழ் எழுத்தாளர் விழா இயக்கம், சமகால கொரோனோ பெருந்தொற்றினால், சமூக இடைவெளியை பேணி முதல் தடவையாக மெய்நிகரில்  இம்முறை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

2001 ஆம் ஆண்டு முதல் தடவையாக மெல்பனில்  தமிழ் எழுத்தாளர் விழா அடுத்தடுத்து  இரண்டு நாட்கள் நடைபெற்றன.  

முதல்நாள் பிரஸ்டன் நகர  மண்டபத்தினுள்ளும், இரண்டாம் நாள் மெல்பன் பண்டுரா  பூங்காவில்  திறந்த அரங்கிலும் நடைபெற்றது.

2002 ஆம் ஆண்டு சிட்னியிலும், மீண்டும் 2003 ஆம் ஆண்டு மெல்பனிலும் அதனையடுத்து 2004 ஆம் ஆண்டு  கன்பராவிலும்  தொடர்ச்சியாக நடைபெற்ற இவ்விழா 2005 ஆம் ஆண்டில் பலரதும்  வேண்டுகோளையடுத்து விக்ரோரியா மாநிலத்தில் பதிவுசெய்யப்பட்ட அமைப்பாக அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய  கலைச்சங்கமாக இயங்கத் தொடங்கி, தங்கு தடையின்றி வருடந்தோறும் இவ்விழாவை நடத்திவருகிறது.

தொடர்ந்தும் மெல்பன், சிட்னி மற்றும் குவின்ஸ்லாந்தில் கோல்ட் கோஸ்டிலும் இவ்விழாவை நடத்திய இச்சங்கம், காலத்துக்காலம் கலை, இலக்கிய சந்திப்புகளையும் கருத்தரங்குகளையும் நூல் அறிமுக நிகழ்வுகளையும் வாசிப்பு அனுபவப் பகிர்வு  அரங்குகளையும் அனைத்துலக பெண்கள் தின விழாவையும்  நடத்தி வந்திருக்கிறது.

2020 ஆம் ஆண்டு பெருந்தொற்று தொடங்கியதையடுத்து, மெய்நிகரில் நிகழ்ச்சிகளை நடத்திவரும் இச்சங்கத்தின் வருடாந்த எழுத்தாளர் விழா இம்மாதம் 12 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அவுஸ்திரேலிய நேரம் இரவு 7-00 மணிக்கு சங்கத்தின் தலைவர் மருத்துவர்( திருமதி ) வஜ்னா ரஃபீக் தலைமையில் மெய்நிகரில் ஆரம்பமாகிறது.

முதல் நாள் நிகழ்ச்சி வாசிப்பு அனுபவப் பகிர்வாகவும், இரண்டாம் நாள் நிகழ்ச்சி பன்னாட்டு கவியரங்காகவும், மூன்றாம் நாள் நிகழ்ச்சி விசேட  இலக்கிய உரையரங்காகவும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவில் வதியும் எழுத்தாளர்கள் சிலரது அண்மைக்கால வெளியீடுகள்  முதல் நாள் நடைபெறும் வாசிப்பு அனுபவப்பகிர்வு நிகழ்ச்சியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளன. 

சங்கத்தின் தலைவர் மருத்துவர்( திருமதி ) வஜ்னா ரஃபீக்கின் தொடக்கவுரையையடுத்து எழுத்தாளர் முருகபூபதியின் தலைமையில் வாசிப்பு அனுபவப் பகிர்வுரையரங்கம் நடைபெறும். 

நூலின் பெயர் – ஆசிரியர் – உரையாற்றுபவர் விபரம் பின்வருமாறு: 

நெடு மரங்களாய் வாழ்தல் (கவிதை) – ஆழியாள் மதுபாஷினி.  உரை:  திருமதி ஜெ. ஹறோசனா ( இலங்கை ) 

சமாதானத்தின் கதை – ஜேகே.  (சிறுகதை) - உரை: பாத்திமா மாஜீதா  (இங்கிலாந்து)

கண்டிச்சீமை – மாத்தளை சோமு ( நாவல் )  -  உரை:    திருமதி சாந்தி சிவகுமார்  (மெல்பன்) 

அமீலா – தெய்வீகன்  (சிறுகதை) - உரை:  மருத்துவர் எம். நளீமுடீன்  (மெல்பன்) 

கானல் தேசம் (நாவல்)  நொயல் நடேசன் -  உரை: திரு. பார்த்தீபன் (பிறிஸ்பேர்ண்) 

கள்ளக்கணக்கு  (சிறுகதை) பேராசிரியர் ஆசி. கந்தராஜா  உரை: திருமதி ரஞ்ஜனி சுப்ரமணியம் (இலங்கை) 

நினைவழியா நாட்கள் (கவிதை) ஜெயராம சர்மா -  உரை:    கலாநிதி ஶ்ரீ கௌரி சங்கர் (மெல்பன்) 

சத்தியம் மீறியபோது (சிறுகதை)  வி. எஸ். கணநாதன் உரை:  டொக்டர்  நொயல் நடேசன் (மெல்பன்) 

உயிர் வாசம்  (நாவல்)  தாமரைச்செல்வி - உரை: திரு. கானா. பிரபா (சிட்னி) 

குறிப்பிட்ட  நூல்களின் வாசிப்பு அனுபவ உரைகளையடுத்து இலங்கை கிளிநொச்சியிலிருந்து  படைப்பிலக்கியவாதியும் ஊடகவியலாளருமான  திரு. கருணாகரன்  “புலம்பெயர் இலக்கியத்தின் எதிர்காலம்“  என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றுவார். 

இரண்டாம் நாள் நிகழ்ச்சி – பன்னாட்டுக்கவியரங்கம் 

இரண்டாம் நாள் 13 ஆம் திகதி சனிக்கிழமை  அவுஸ்திரேலியா நேரம் இரவு  7-00 மணிக்கு  எழுத்தாளர்  பாடும்மீன் சு. ஶ்ரீகந்தராசா தலைமையில் "புதியதோர் உலகை நோக்கி....!" என்னும் தலைப்பில்  நடைபெறும் பன்னாட்டுக் கவியரங்கில்  இலங்கை, அவுஸ்திரேலியா, மற்றும் அய்ரோப்பிய நாடுகளைச்சேர்ந்த கவிஞர்கள் பங்குபற்றுவர். 

சங்கத்தின் துணைத்தலைவர் திரு. சங்கர சுப்பிரமணியனின் தொடக்கவுரையுடன்  ஆரம்பமாகும்.

இக்கவியரங்கில்  இலங்கையிலிருந்து  கவிஞர்கள்  செங்கதிரோன் கோபாலகிருஷ்ணன், ஏ. பீர் முகம்மது, வேலாயுதம் தினகரன், வெல்லவூர்க் கோபால், இங்கிலாந்திலிருந்து கோவிலூர் செல்வராஜன்,  ஜெர்மனியிலிருந்து  அம்பலவன் புவனேந்திரன், டென்மார்க்கிலிருந்து  முல்லை நாச்சியார்,  அவுஸ்திரேலியாவிலிருந்து  இளமுருகனார் பாரதி,  கல்லோடைக்கரன்  ஆகியோர்  பங்கேற்பர்.

இதனையடுத்து காப்பியக்கோ  ஜின்னா செரிபுத்தீன் சிறப்புரையாற்றுவார். 

மூன்றாம் நாள் 14 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அவுஸ்திரேலியா நேரம் இரவு 7-00 மணிக்கு எழுத்தாளர் நொயல் நடேசன் தலைமையில், சங்கத்தின் துணைத்தலைவர்  திரு. ந. சுந்தரேசனின் தொடக்கவுரையுடன் ஆரம்பமாகும்.

சிறப்புரையரங்கில்  தமிழக பிரபல எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன், நினைவும் நிஜமும் என்னும் தொனிப்பொருளில் இலக்கியத்தின் ஆதாரமும் சமகால நிகழ்வுகளும் என்னும் தலைப்பில்  சிறப்புரையாற்றுவார்.

இவ்விழாவின் முதல்நாள், மற்றும் இறுதிநாள் நிகழ்ச்சிகளின் பின்னர், சங்கத்தின் செயற்குழு உறுப்பினரும் இசைக் கலைஞருமான திரு. அருண் குமாரசாமியின் சப்தஸ்வரங்கள் மெல்லிசை நிகழ்ச்சி நடைபெறும்.

இறுதிநாளன்று,  நிகழ்ச்சிகளின் நிறைவையடுத்து சங்கத்தின் செயலாளர் கலாநிதி ஶ்ரீ கௌரி சங்கர் நன்றியுரை நிகழ்த்துவார். 

இவ்விழாவில் இணைந்துகொள்ளுமாறு, உலகெங்குமிருக்கும் தமிழ் கலை, இலக்கிய ஆர்வலர்களை அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் அன்புடன் அழைக்கின்றது.

முருகபூபதி

மெய்நிகர் இணைப்பு: 

 

https://us02web.zoom.us/j/81928215942?pwd=ZHQ3VUtyZXpudnNDcitpTHVTbm9JQT09

Meeting ID: 819 2821 5942

Passcode: 445435