(இராஜதுரை ஹஷான்)

நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷவினால் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் பயனுடையதாக அமையும். 

விவசாயத்துறையினை முன்னேற்றுவதற்காக அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என வனஜீவராசிகள் பாதுகாப்பு  அமைச்சர் சி.பி ரத்நாயக்க தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் வியாழக்கிழமை (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கொவிட்-19 வைரஸ் தாக்கத்திற்கு மத்தியில் அரசாங்கம் நாட்டின் அபிவிருத்தி பணிகளை முன்னனெடுக்கின்றது.

கடந்த இரண்டு வருடகாலமாக கொவிட் வைரஸ் தாக்கத்திலிருந்து நாட்டு மக்களை பாதுகாக்க அரசாங்கம் பெருமளவிலான நிதியை செலவிட்டுள்ளது. 

பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரணம், கொவிட் தாக்கத்தின் பின்னரான பொருளதாரத்தை கட்டியெழுப்பும் வகையில் நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷவினால் 76 ஆவது வரவு –செலவுத் திட்டம்  பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படுகிறது.

2022ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் பயனுடையதாக அமையும்.

சேதன பசளை திட்டம் சிறந்ததாக காணப்பட்டாலும் அது சவால்மிக்கது.சேதன பசளைத் திட்டம் தற்போது அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது. கொவிட் தாக்கத்திற்கு மத்தியில் போராட்டங்கள் தற்போது தீவிரமடைந்துள்ளன. 

அரசியல் இலாபத்தை கருத்திற்கொண்டு ஜனாதிபதி சேதன பசளை திட்டத்தை அறிமுகப்படுத்தவில்லை. ஆனால் தற்போது எதிர்தரப்பினர் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்காக சேதன பசளைத் திட்டத்தை முழுமையாக பயன்படுத்திக்கொள்கிறார்கள்.

தேசிய உற்பத்திகளை மேம்படுத்துவது அரசாங்கத்தின் பிரதான இலக்காக உள்ளது. ஆகவே 2022 ஆம் ஆண்டு வரவு - செலவுத் திட்டத்தில் விவசாயத்துறைக்கு அதிக நிதி ஒதுக்கிடப்பட்டுள்ளது.

சவால்களை கண்டு அரசாங்கம் ஒருபோதும் தீர்மானங்களை மாற்றியமைக்கவில்லை.சேதன பசளை திட்டத்தின் உண்மை காரணிகளை விவசாயிகள் விளங்கிக்கொண்டு தற்போதைய சவாலை வெற்றிக் கொள்ள ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்றார்.