நாட்டில் 17 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலையால் 63 ஆயிரத்து 317  குடும்பங்களைச் சேர்ந்த 2 இலட்சத்து 22 ஆயிரத்து 590 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக  அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

வெள்ளம், மண்சரிவு மற்றும் மின்னல் தாக்கம் காரணமாக நேற்றுமாலை வரை  25 பேர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காணாமல் போயுள்ளார். 

இதேவேளை, 80 அனரத்த முகாமைத்துவ மத்திய நிலையங்களில் 12 ஆயிரத்து 796 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கம்பளை - நுவரெலியா பிரதான வீதியில் அட்டபாகை பகுதியில்  2 மாடி வர்த்தக நிலையமொன்று இடிந்து விழுந்து முற்றாக சேதமடைந்துள்ளது. அப்பகுதி தாழிறங்கும் அபாயம் இருப்பதால் ஒரு வழி போக்குவரத்துக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கம்பளை நகரிலிருந்து சுமார் 5 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள அட்டபாகையில்,   நேற்றிரவு குறித்த வர்த்தக நிலையத்தில் இருந்த தாய், தந்தை மற்றும் மகன் ஆகியோர் வர்த்தக நிலையத்தை மூடிவிட்டு, உறவினர்கள் வீட்டுக்கு செல்வதற்கு வெளியே வந்த தருணத்திலேயே இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளதாகவும்,  இதனால் மூவரும் அதிஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மண்சரிவு அபாயம் காரணமாக, கண்டி – கொழும்பு பிரதான வீதியின் கீழ் கடுகன்னாவ பகுதி நேற்றிரவு முதல் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது.

 அதன்படி, நாளை காலை 9 மணி வரை குறித்த வீதியின் ஒரு பகுதி போக்குவரத்துக்காக தொடர்ந்தும் மூடப்பட்டுள்ளதாக கேகாலை மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.  

அதன்படி, கொழும்பிலிருந்து கண்டி நோக்கி பயணிக்கும் வாகனங்கள் அம்பேபுஸ்ஸ சந்தியில் திரும்பி குருணாகல், மாவத்தகம, கலகெதர, கட்டுகஸ்தொட்ட ஊடாக கண்டிக்கு பயணிக்க முடியும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதுதவிர மாவனெல்லை நகரின் எஸ் ஓ சந்தியின் வலதுபுறமாக திரும்பி ஹெம்மாத்தகம, அம்புலுவாவ, கம்பளை, பேராதனை ஊடாக கண்டிக்கு பயணிக்க முடியும் என பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

கண்டியிலிருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் வாகனங்களும் இந்த வீதிகளை பயன்படுத்த முடியும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.