ஐக்கிய நாடுகள் சபையின் 71வது கூட்டத்தொடரில் கலந்துகொண்ட சகல அரச தலைவர்களும் இலங்கையின் தற்போதைய நிகழ்ச்சித்திட்டங்கள் குறித்து தங்களது திருப்தியை வெளியிட்டுள்ளனர் என்றும் அந்த நல்லாசிகளுடன் இலங்கை உலகில் உண்மையான வெற்றியை நோக்கி முன்னெடுத்துச் செல்வதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

அமெரிக்காவின் நியூயோர்க் தலைநகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் 71வது கூட்டத்தொடரில் பங்குபற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட அமைச்சர்கள் நேற்று (22) நியூயோர்க் தலைநகரத்தில் ஒரு விசேட பத்திரிகையாளர் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தனர். அந்த சந்திப்பின்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

சுதந்திரம், ஜனநாயகம், மனித உரிமைகள், அடிப்படை உரிமைகள், நீதிமன்றத்தின் சுயாதீனம் ஆகிய நல்லாட்சி எண்ணக்கருக்களை நடைமுறைப்படுத்துவதை அடிப்படையாகக்கொண்டு இன்று ஒரு மிகச் சிறந்த கோணத்தில் சர்வதேசம் இலங்கையை பார்ப்பதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, தற்போதைய அரசாங்கத்தின் நோக்கம் இலங்கையில் வாழும் மக்களுக்கு ஒரு சிறந்த எதிர்காலத்தையும் உலகம் போற்றும் வகையிலான நல்லாட்சி எண்ணக்கருக்களின் அடிப்படையில் அமைந்த ஒரு அரச நிர்வாகத்தையும் முன்னெடுப்பதேயாகும் என்றும் கூறினார்.

நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடிகளில் இருந்து நாட்டைக் கட்டியெழுப்பி நாட்டில் உள்ள எல்லாத்துறைகளையும் அபிவிருத்தி செய்து நட்பு நாடுகளின் ஒத்துழைப்புகளை பெற்றுக்கொள்வதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் 71வது கூட்டத்தொடருடன் இணைந்ததாக நடைபெற்ற கலந்துரையாடல்களின் மூலம் தமக்கு முடியுமாக இருந்ததாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் இளவரசர் செயிட் உசைன் இலங்கை தொடர்பாக மிகத் தெளிவான நிலைப்பாட்டுடன் கலந்துரையாடியதாகவும் அவர்கள் எல்லோரினதும் உதவி இன்று இலங்கைக்கு கிடைத்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுடனும் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ முன் உடனும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மிக நெருங்கிய தொடர்புகளை கொண்டுள்ளபோதும் எதிர்காலத்தில் அந்த தலைமைத்துவங்களில் ஏற்படவுள்ள மாற்றங்கள் இலங்கையின் சர்வதேச உறவுகளுக்கு எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்தும் என பத்திரிகையாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த ஜனாதிபதி அவர்கள், இந்த அனைத்து உறவுகளும் தனிப்பட்ட வகையில் அன்றி கொள்கை அடிப்படையிலேயே கட்டியெழுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

கடந்த அரசாங்க காலத்தில் ஐக்கிய நாடுகள் சபையுடனான உறவுகளில் ஏற்பட்டிருந்த விரிசல் நிலைமைகளுக்கு கொள்கை சார்ந்த அம்சங்களே காரணமாகும் என்றும் அரசாங்கத்தின் கொள்கைகள் நாட்டு மக்களுக்கும் சர்வதேசத்திற்கும் தெளிவாக இருக்குமானால் நாட்டின் அங்கீகாரம் தொடர்பில் பிரச்சினைகள் எழ வாய்ப்புகள் இல்லை என்றும் குறிப்பிட்டார்.

அமைச்சர்களான மங்கள சமரவீர, மஹிந்த சமரசிங்க, அர்ஜூன ரணதுங்க, கயந்த கருணாதிலக்க, பைசர் முஸ்தபா, பிரதி அமைச்சர் அஜித் பீ.பெரேரா ஆகியோரும் இங்கு கருத்து தெரிவித்தனர்.