(எம்.மனோசித்ரா)

எதிர்க்கட்சியிடமிருந்து நாம் எதிர்பார்ப்பது அரசாங்கத்தின் அனைத்து செயற்பாடுகளை எதிர்ப்பதையல்ல. 

மாறாக நாட்டின் எதிர்காலத்திற்காக சரியான பாதையில் பயணிப்பதற்கான ஒத்துழைப்பையே எதிர்பார்க்கின்றோம். 

எதிர்க்கட்சியினரின் இவ்வாறான செயற்பாடுகள் கவலைக்குரியவை என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

அலரி மாளிகையில் புதன்கிழமை (10 ) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த ஜனாதிபதி மேலும் குறிப்பிடுகையில் ,

எதிர்க்கட்சியிடமிருந்து நாம் எதிர்பார்ப்பது அரசாங்கத்தின் அனைத்து செயற்பாடுகளை எதிர்ப்பதையல்ல. மாறாக நாட்டின் எதிர்காலத்திற்காக சரியான பாதையில் பயணிப்பதற்கு ஒத்துழைப்பதையே நாம் எதிர்க்கட்சியிடம் எதிர்பார்க்கின்றோம்.

நாடு திறக்கப்பட்டு புதிய பொதுமைப்படுத்தலின் கீழ் சகல செயற்பாடுகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

இதன் போது ஆர்ப்பாட்டங்கள் , பேரணிகள் உள்ளிட்ட காரணிகளால் மீண்டும் கொவிட் பரவக் கூடிய அபாயம் காணப்படுகிறது. 

அவ்வாறு இடம்பெற்றால் மீண்டும் நாட்டை முடக்க வேண்டியேற்படும். இது மக்களுக்கும் பொருளாதாரத்திற்கும் பாரதூரமான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை எதிர்க்கட்சி உணர வேண்டும்.

எனது பதவி காலத்தில் இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்த காலப்பகுதிக்குள் கொவிட் தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கு பாரிய வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அன்று ஆட்சியிலிருந்த தற்போதைய எதிர்க்கட்சி இதனை புரிந்து கொள்ள வேண்டும்.

5 ஆண்டுகள் ஆட்சியில் காணப்பட்ட பலவீனம் மற்றும் தோல்வியின் காரணமாக மக்கள் என்னை ஜனாதிபதியாக தெரிவு செய்தனர். 

ஆனால் இன்று எதிர்க்கட்சியினர் அதிகாரமில்லாத ஒரு குழுவினரைப் போன்று செயற்படுவது கவலைக்குரியது. நாட்டின் எதிர்காலத்திற்காக இந்த முறைமையிலிருந்து மாற்றமடைவதே தற்போதைய தேவையாகவுள்ளது என்றார்.