(எம்.நியூட்டன்)

மூவாயிரத்து 300 குடும்பங்களைச் சேர்ந்த 11ஆயிரத்து 416 பேர்  யாழ்ப்பான மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.

தற்போதைய காலநிலை தொடர்பாக யாழ். மாவட்டச் செயலரின்  ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாணத்தில் இன்று இரவு முதல் பெய்த மழை காரணமாக 243 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவானதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்திருக்கிறது. 

நேற்று அதிகாலை வெளியான வளிமண்டலவியல் திணைக்களத்தினுடைய  அறிக்கையின்படி, வட மாகாணத்தில் 150 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

மிகக்குறுகிய காலத்திலேயே மழைவீழ்ச்சி ஏற்பட்டதன் காரணமாக யாழ். மாவட்டத்தில் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டு இருக்கின்றது. 

அனேகமான வீதிகள், வீடுகள், பொது இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருப்பதை அவதானிக்க கூடியதாக உள்ளது.

அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஊடாக தற்போதைய நிலையில் சேத விபரங்களை மதிப்பீடு செய்து வருகின்றோம். அதேபோன்று உள்ளூராட்சி மன்றங்கள் ஒத்துழைத்து செயல்பட்டுவருகின்றன.

குறிப்பாக யாழ்ப்பாணம், நல்லூர், சண்டிலிப்பாய், சங்கானை, உடுவில், தெல்லிப்பளை, கோப்பாய், சாவகச்சேரி, பருத்தித்துறை, மருதங்கேணி பிரதேச செயலர் பிரிவுகளிலேயே இந்த அறிக்கை எமக்கு கிடைக்கப்பெற்றது. 

எவ்வாறிருப்பினும் 105 குடும்பங்களைச் சேர்ந்த 339 நபர்கள் மாத்திரமே இடம்பெயர்ந்தவர்கள் என்ற வகையிலே தற்காலிக இடங்களில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்றார்.

இதேவேளை, யாழ். குடாநாட்டில் அதிக  மழை காரணமாக நகரின் பெரும் பகுதி வெள்ளத்தினால் மூழ்கி காட்சியளிக்கின்றது.

வெள்ளநீர் தேங்கி நிற்பதன்  காரணமாக யாழ்ப்பாணம் ஸ்டான்லி வீதியானது பொதுமக்கள் போக்குவரத்திற்காக ஒரு வழி பாதையாக பொலிஸாரால் அறிவிக்கப்பட்டு வீதித் தடைகளும் போடப்பட்டுள்ளது.

கடந்த இரு நாட்களாக குடாநாட்டில் அதிக மழை பொழிவதோடு இன்று அதிகாலை முதல் பெரும் மழை பொழிகின்றது. இதனால்  நகரின் மத்தியில் உள்ள 43 குளங்களும் நிரம்பி வழிகின்றது.

மேலும் யாழ். நகரின் மத்தியில் உள்ள ஸ்ரான்லி வீதி, கண்ணாபுரம், சோலைபுரம், கற்குளம், பொம்மைவெளி, நித்திய ஒளி மற்றும் திருநெல்வேலி உள்ளிட்ட மாநகர சபை பிரதேசங்கள் நீரில் மிதக்கின்றன.

யாழ்ப்பாணக் குடாநாட்டின் நகரின் மத்தி நீர் வழிந்தோடும் பிரதான இடங்கள் பல தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளமையினால் நீர் மிக வேகமாக  அதிகரிப்பதனால் மக்கள் பெரும் அவலத்தை எதிர்நோக்குகின்றமை குறிப்பிடத்தக்கது.