(எம்.மனோசித்ரா)

தேசிய பாதுகாப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சின் கீழுள்ள பாதுகாப்பு ஆராய்ச்சிகள் மற்றும் மேம்பாட்டு நிலையத்தின் இராணுவ மற்றும் சிவில் கண்டுபிடிப்புகளை மேம்படுத்துவதற்கான செயற்பாடுகளில் முன்னேற்றம் கண்டுள்ளது. 

அதற்கமைய பாதுகாப்பு அமைச்சு மற்றும் முப்படையினர், வனஜீவராசிகள் திணைக்களத்தின் அவசியத்தை கருத்திற் கொண்டு மேற்கொள்ளப்பட்ட 15 கண்டுபிடிப்புத் திட்டங்கள் படையினரால் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளன.

பனாகொடவிலுள்ள பாதுகாப்பு ஆராய்ச்சிகள் மற்றும் மேம்பாட்டு நிலையத்தின் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வின்போது மேற்படி உபகரணங்கள் உரிய தரப்புக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டன.

இந்நிகழ்வில் பாதுகாப்பு ஆராய்ச்சிகள் மற்றும் மேம்பாட்டு நிலையத்தின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கே.ஆர்.பி ரொவெல், பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன, இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா, கடற்படை மற்றும் விமானப் படைகளின் தளபதிகள் ஆகியோரும் மேற்படி முப்படை செயற்பாடுகள் சார்ந்த இயந்திரங்களை காட்சிப்படுத்தும் நிகழ்வுகளில் கலந்துகொண்டனர்.

அவற்றில் ட்ரோன் ஜேமர் மேம்பாட்டுத் திட்டம், நிலம் கையகப்படுத்துதல் மற்றும் விற்பனைத் தகவல் முகாமைத்துவ தொகுதி, உணவு கொள்முதல் முகாமைத்துவ தொகுதி, ஆவண முகாமைத்துவ தொகுதி, புரிந்துணர்வு ஒப்பந்த மேலாண்மை அமைப்பு, டிஜிட்டல் மொபைல் ரேடியோ உற்பத்தி, சிறப்பு செயற்பாடுகளுக்கான கண்காணிப்பு தொகுதி, காட்டு பாதைகளில் துப்பாக்கி சூடுக்கான ஸ்மார்ட் டார்கெட் தொகுதி, குறிபார்த்து சுடுவதற்கான இயந்திரங்கள், குறிபார்த்து சுடுவதற்கான மோட்டார், டீ-வாகன குறிபார்த்து சுடுவதற்கான மற்றும் ஹைடெக் சோல்ஜர் தொகுதி ஆகியவற்றை உள்ளடக்கிய இராணுவம் தொடர்பான புதுமையானதும் ஆக்கபூர்வமானதுமான தயாரிப்புக்கள் உள்ளடங்குகின்றன.

 

அதேபோல் அங்கவீனமுற்ற வீரர்களின் பயன்பாட்டிற்கு அவசியமான பிரத்தியேகமான செயற்கை கைகள், வனஜீவராசிகள் திணைக்களத்தினால் பயன்படுத்தக்கூடிய காட்டு யானைகளுக்கு உதவும் சாதனங்கள் மற்றும் பயிலிளவல் அதிகாரிகளுக்கான தகவல் கட்டமைப்பு தொகுதிகளும் படையினரால் கண்டிபிடிக்கப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.