உண்மை சம்பவங்களை பின்னணியாக கொண்டு எடுக்கப்பட்ட ஜெய் பீம் திரைப்படம்  அண்மையில் வெளியாகி சமூகத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதற்கு காரணம் என்னவென்றால்  அது உண்மையாக நடந்த சம்பவம். அதாவது ஒடுக்கப்பட்ட சமூகம் ஒன்றை சேர்ந்தவரான ராசாகண்ணு ஒரு திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு, பொலிஸ் காவலில் அடித்தே கொல்லப்பட்டார்.  தமிழகத்தில் கடலூர் மாவட்டம் கம்மாபுரம்  பொலிஸ் நிலையத்தில் 1993இல் நடந்ததாக நிரூபிக்கப்பட்ட இந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டே தற்போது சூர்யா நடித்த ஜெய் பீம் படம் எடுக்கப்பட்டுள்ளது.

இருளர் பழங்குடி சமூகத்தை சேர்ந்த ராசாக்கண்ணு என்ற தொழிலாளி உண்மைக்கு மாறாக திருட்டுப்பட்டம் கட்டப்பட்டு, அவரும் அவரது உறவினர்களும் பொலிஸ் நிலையத்தில் கொடுமையாக துன்புறுத்தப்பட்டு, இறுதியில் ராசாக்கண்ணு கொல்லப்படுவதாக காட்டும் ஜெய்பீம் படம் இப்போது விவாதப் பொருளாகியிருக்கிறது.

சந்துரு என்ற வழக்குரைஞர் பாத்திரம், ராசாக்கண்ணுவுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக போராடுவதாக, வழக்காடுவதாக படம் சித்தரிக்கிறது. உண்மைக் கதையிலும், அப்போதைய வழக்கறிஞரும், பின்னாளில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்றவருமான சந்துரு இந்த வழக்கில் கட்டணம் ஏதும் பெற்றுக்கொள்ளாமல் வாதாடியுள்ளார்.

உண்மைக் கதையில் ராசாக்கண்ணுவின் மனைவி பெயர் பார்வதி. சம்பவம் நடந்த பின் அவர் முதலில் தொடர்புகொண்டது முதனை கிராமத்தை சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஊழியர் கோவிந்தன் என்பவரைத்தான்.

அவர் உடனடியாக அதை தங்கள் கட்சி ஒன்றியச் செயலாளர் ஆர்.ராஜ்மோகன் என்பவர் கவனத்துக்கு எடுத்துச் சென்றுள்ளார். கோவிந்தன், ராஜ்மோகன் இருவரும் இந்த வழக்கில் பார்வதிக்கு நீதி கிடைக்கும் வரை துணையாக நின்று போராடியுள்ளனர். அப்போது கட்சியின் கடலூர் மாவட்டச் செயலாளராக இருந்தவரும் இப்போதைய மாநிலச் செயலாளருமான கே.பாலகிருஷ்ணன், தற்போதைய அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் இந்த வழக்கில் நீதிகிடைக்க பங்களிப்பு செய்துள்ளனர்.

இந்தப் படத்தில் ராசாக்கண்ணு இருளராக சித்தரிக்கப்பட்டுள்ளார். ஆனால், அவர் உண்மையில் குறவர் சாதியை சேர்ந்தவர். குறவர்களும் ஒரு விளிம்பு நிலை சமூகம்தான்.

கடலூர் மாவட்டம் கோபாலபுரம் என்ற ஊரில் உள்ள கதிர்வேல் என்பவர் வீட்டில் 20.03.1993 அன்று 40 பவுன் நகை திருடுபோகிறது. அவரது வீட்டில் ஏற்கெனவே வேலை செய்தவரும், முதனை கிராமத்தை சேர்ந்தவருமான ராசாகண்ணு மீது அவர் பொலிஸில் சந்தேகம் தெரிவித்தார். இதையடுத்து கம்மாபுரம்  பொலிஸார் அன்றே முதனை சென்று ராசாக்கண்ணு மனைவி பார்வதி, அண்ணன் ரத்தினம், சிறுவர்களான ராசாக்கண்ணுவின் மகன்கள் இருவர் ஆகியோரை பிடித்துச் சென்றுள்ளனனர். மறுநாள் ஊர் மக்கள் ராசாக்கண்ணுவை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இதையடுத்து பார்வதி, ரத்தினம், ராசாக்கண்ணுவின் இரு மகன்கள் ஆகியோரை வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள். பொலிஸ் காவலில் ராசாக்கண்ணுவின் இரு மகன்களும் தாக்கப்பட்டனர்.

(குமார் சுகுணா )

பொலிஸ் காவலில் இருந்த கணவரைப் பார்க்க 22ஆம் திகதி சென்றார் பார்வதி. அப்போது அவர் கடுமையாக தாக்கப்பட்டிருந்தார். அவரது வேட்டியில் ரத்தக்கறை இருந்தது. அவரால் தண்ணீர் குடிக்க முடியவில்லை. சாப்பிட முடியவில்லை.

ஆனால் அவரை தொடர்ந்து காவலில் வைத்துக்கொண்ட  பொலிஸார் பார்வதியை கட்டாயப்படுத்தி வீட்டுக்குப் போகச் சொல்லியுள்ளார்கள். அவர் விருத்தாசலம் சென்று அங்கிருந்து முதனை செல்வதற்கு முன்பாகவே பொலிஸார்  வேனில் முதனை வந்து, ராசாகண்ணு தப்பிச் சென்றுவிட்டதாக கூறியுள்ளனர்.

மிகமோசமாக தாக்கப்பட்டிருந்த ராசாக்கண்ணுவால் எப்படி தப்பியிருக்க முடியும் என்று பார்வதிக்கு சந்தேகம் வந்தது.

இதையடுத்து அவர் அதே ஊரைச் சேர்ந்தவரான மார்க்சிஸ்ட் கட்சி கிளைச் செயலாளர் கோவிந்தனிடம் இது பற்றிக்கூறியுள்ளார். கோவிந்தன் அன்று இரவே சேப்ளானத்தம் ஒன்றியச் செயலாளர்  ராஜ் மோகனிடம் தெரிவித்துள்ளார்.

மறுநாள் 23ஆம்திகதி காலை , கோவிந்தன்,  ராஜ் மோகன்.பார்வதி உள்ளிட்டோர் பொலிஸ் நிலையம் சென்று விசாரித்துள்ளார்கள் . அப்போது லொக் அப் அறை, தரை, சுவரெல்லாம் கழுவிவிட்டு . ஊதுவத்தி எரிந்துள்ளது. ஆனால், பொலிஸார் ராசாக்கண்ணுவை தேடிக் கொண்டிருப்பதாக கூறியிருக்கிறார்கள்.

மாக்ஸிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனிடம் தகவல் தெரிவிக்கப் படுகிறது. அவர் மாநில மையத்துக்கு இந்த தகவலைத் தெரிவித்தார். அத்துடன் கடலூர் வர சொல்லிவிட்டு அப்போதைய மாவட்ட பொலிஸ் கண்காணிப்பாளர் எஸ்.ஆர். ஜாங்கிட்டை பார்க்க அழைத்துச் சென்றுள்ளார். அப்போதே எஸ்.பி. வரை ராசாக்கண்ணு இறந்துவிட்ட செய்தி தெரிந்துள்ளது. ஆனால், அவர்கள் அப்போது அதை வெளிப்படுத்தவில்லை. ராசாக்கண்ணுவை தேடுவதாக  வாக்குறுதி அளித்துள்ளனர்.

அப்போது, விருத்தாசலம் எஸ்.ஐ. சமாதானம் பேசியுள்ளார். விட்டுக்கொடுத்துப் போகும்படியும், ஏதேனும் பணம் தந்துவிடலாம் என்றும் . அப்போதுதான் ராசாக்கண்ணு கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் ஊர்ஜிதம் ஆகியிருக்கிறது.

அப்போது மாநில செயற்குழு உறுப்பினராக இருந்த ஜி.ராமகிருஷ்ணன் வழக்குரைஞர் சந்துருவை சென்று பார்க்கும்படி கடிதம் கொடுத்துள்ளார். உயர்நீதிமன்றம் அருகே உள்ள சந்துரு அலுவலகத்தில் அவரைச் சென்று பார்த்துள்ளார்கள்.

அவர் பற்றி கேட்டபோது, பொலிஸை  எதிர்த்து வழக்கு நடத்தும்போது எவ்வளவு நெருக்கடி இருக்கும் என்று தெரியும். எனவே கட்டணம் ஏதும் வேண்டாம் என்று கூறியிருக்கிறார் சந்துரு. தட்டச்சு செலவுக்கு பணம் தந்தபோது அதுகூட வேண்டாம் என்று மறுத்துள்ளார். இறுதிவரை வழக்கில் உறுதியாக நின்றால் மட்டும் போதும் என்று அவர் கூறியிருக்கிறார்.

இந்நிலையில், எஸ்.ஐ. உள்ளிட்ட  பொலிஸ்காரர்கள் சென்னை சென்று வழக்குரைஞர் சந்துருவை சந்தித்து ராஜாமோகன், கோவிந்தன் எல்லாம் சமாதானமாக போய்விட்டதாக கூறி குழப்ப முயன்றிருக்கிறார்கள் . 

"திருப்பனந்தாள் அருகே உள்ள பந்தநல்லூரில் வசித்துவந்த ராஜாக்கண்ணுவின் அக்கா ஆச்சி, அவரது மகன் குள்ளன், கோவிந்தராஜ் என்கிற இன்னொருவர் ஆகியோரையும் பொலிஸார் இந்த வழக்கில் பிடித்துவந்து ராசாக்கண்ணு அடைக்கப்பட்டிருந்த அறைக்கு அடுத்த அறையில் வைத்து அடித்துள்ளார்கள்.

இது பார்வதிக்கு தெரியாது. இந்த மூவருக்கும் ராசாக்கண்ணு இறந்தது தெரியாது. இதற்கிடையில் இவர்கள் சில மாதம் கழித்து ராசாக்கண்ணு பற்றி தெரிந்துகொள்வதற்காக முதனை வந்தபோதுதான் இவர்களும் தாக்கப்பட்ட விஷயம் தெரியவந்திருக்கிறது. அத்துடன் மார்ச் 22 மாலை ராசாக்கண்ணு உடலை வண்டியில் ஏற்றியதை கோவிந்தராஜ் மட்டும் பார்த்துள்ளார்.

ஆனால், அவருக்கும் ராசாக்கண்ணு இறந்துவிட்டாரா, உயிரோடு இருந்தாரா என்று தெரியாது. இந்த விவரங்களை வழக்குரைஞர் சந்துருவுக்குத் தெரியப்படுத்தினோம்.

நெய்வேலியை சேர்ந்த மருத்துவர் ராமச்சந்திரன் பொலிஸ் கேட்டுக்கொண்டதற்கு ஏற்ப ராசாக்கண்ணுவுக்கு சிகிச்சை அளித்ததாக சான்றிதழ் அளித்திருந்தார். இது, ராசாக்கண்ணு தப்பித்துச் சென்றார் என்ற கருத்துக்கு வலு சேர்த்தது. இந்நிலையில்தான் இந்த வழக்கில் சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் வாதிட்டார் சந்துரு.

அப்போது நீதிபதிகள், பத்மினி காவல் நிலைய வல்லுறவு வழக்கில் தமிழ்நாடு பொலிஸை  சேர்ந்த லத்திகா சரண் விசாரணை நடத்தி உண்மையை வெளிக் கொண்டுவரவில்லையா எனவே சி.பி.சி.ஐ.டி. விசாரணையே போதாதா என்று கேட்டனர். இதையடுத்து ஐ.ஜி. பெருமாள்சாமி தலைமையிலான சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு சந்துரு ஒப்புக்கொண்டார். சி.பி.சி.ஐ.டி. விசாரணை அதிகாரியாக இருந்த வெங்குஷா என்பவர்தான் மிகச் சிறப்பாக புலன்விசாரணை செய்து இந்த வழக்கில் நடந்ததை கண்டுபிடித்தார்.

ராசாக்கண்ணு  பொலிஸ் நிலையத்தில் நடந்த சித்ரவதையில் இறந்துவிட்ட நிலையில், அவரது உடலை எஸ்.ஐ. அந்தோணிசாமி  வீராசாமி ராமசாமி .உள்ளிட்டோர் வண்டியில் கொண்டு சென்று மீன்சுருட்டி  பொலிஸ் நிலைய எல்லையில் உள்ள திருவாலப்புத்தூர் - ஜெயங்கொண்டம் சாலையில் எறிந்துவிட்டு வந்துவிட்டனர் என்பதையும், ஆனால், அவர்கள் நினைத்தபடி அவர் உடல் மீது லொறி, பஸ் ஏதும் ஏறாததால் அடையாளம் தெரியாத சடலம் என்ற வகையில் அதைக் கைப்பற்றிய மீன்சுருட்டிபொலிஸ் நிலையத்தினர் அடக்கம் செய்ததையும் வெங்குஷா கண்டுபிடித்தார். அவர்கள் எடுத்த புகைப்படத்தை வைத்து பார்வதி ராசாக்கண்ணு உடலை அடையாளம் காட்டினார்.

இதையடுத்து எஸ்.ஐ. அந்தோணிசாமி உள்ளிட்ட 12 பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டனர். எஸ்.ஐ. அந்தோணிசாமி, ஏட்டு வீராசாமி  ஆகியோருக்கு ஆயுள் தண்டனை கிடைத்தது. மருத்துவர் மீதான குற்றமும் உறுதி செய்யப்பட்டது. உயர் நீதிமன்றத்தில் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கிலும் சி.பி.சி.ஐ.டி. சிறப்பாக வழக்கை நடத்தியது. அங்கேயும் தண்டனை உறுதி செய்யப்பட்டது. 

இதுதான் உண்மை சம்பவம். இதனையே சூர்யா ஜெய்பீம் திரைப்படமாக நடித்துள்ளார். இதில் பார்வதி பெயர் செங்கேனி என மாற்றப்பட்டுள்ளது. அதேபோல  ராசாக்கண்ணுவை கொன்ற எஸ்.ஐ. அந்தோணிசாமி பெயர் குருமூர்த்தியாக மாற்றப்பட்டுள்ளது. இந்த படத்துக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ள போதிலும் விமர்சனங்களும் வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.