மலையக இளைஞர்களை மதுபானத்திற்கு அடிமையாக்கும் திட்டமிட்ட சூழ்ச்சி - வடிவேல் சுரேஷ் 

09 Nov, 2021 | 06:40 AM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

மலையக இளைஞர்களை மதுபானத்திற்கு அடிமையாக்கும் திட்டமிட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், மலையகத்தில் ஒரு பிரதேசத்திற்கு வழி கூறுவதாயினும் ஒரு மதுபானசாலையை அடையாளம் காட்டியே கூறவேண்டியுள்ளது எனவும் சபையில் சுட்டிக்காட்டிய ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ், எதிர்வரும் காலத்தில் மலையகத்தில் மதுபானசாலைகளை கட்டுப்படுத்தவும், இப்போது வழங்கப்பட்டுள்ள மதுபானசாலைகளின் அனுமதிப்பத்திரத்தை ரத்துச்செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை, வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தில் மலையகத்தின் மதுபானசாலைகளினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து கேள்வி எழுப்பும் போதே அவர் இதனை கூறினார். 

அவர் மேலும் கூறுகையில்,

மதுபானசாலை அனுமதிப்பத்திரம் பெருந்தோட்ட பகுதிகளை மையப்படுத்தியே வழங்கப்பட்டுள்ளன. பசறை, ஹப்புத்தளை, ஹாலிஎல ஆகிய பகுதிகளை மையமாகக்கொண்டு புதிதாகவும் மதுபானசாலைகளுக்கான அனுமதிப்பத்திரம் வாங்கப்பட்டுள்ளன. 

இதன் காரணத்தினால் மலையக மக்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். உதாரணமாக பசறை பகுதியில் சிங்கள தேசிய பாடசாலைக்கும் தமிழ் தேசிய பாடசாலைக்கும் இடையில், கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் இடைவெளியில் மதுபானசாலை ஒன்று திறக்கப்பட்டுள்ளது. 

மடுல்சீமை பகுதியில் தேயிலை தோட்டத்திற்குள் உள்ளேயும் கூட மதுபானசாலை திறக்கப்பட்டுள்ளது.

மஹியங்கனையில் மக்கள் தொகையுடன் ஒப்பிடுகையில் அங்கு ஒன்பது மதுபானசாலைகள் உள்ள நிலையில் பசறையிலும் மடுல்சீமையிலும், ஹாலி எலயிலும், பண்டாரவளையிலும் ஆகக்கூடுதலான மதுபானசாலைகளுக்கான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ள காரணத்தினால் முழுமையாக மலையக இளைஞர்கள் திசை திருப்பப்பட்டு பாதிக்கப்பட்டுள்ளதுடன், மலையக மக்களும் பொருளாதார ரீதியில் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். 

மலையகத்தில் ஒரு பிரதேசத்திற்கு வழிகூற வேண்டுமானால் ஒரு மதுபானசாலையை அடையாளம் காட்டியே கூறவேண்டியுள்ளது. 

ஒவ்வொரு பஸ் தரிப்பிடத்திற்கு அருகிலும் ஒரு மதுபானசாலை திறக்கப்பட்டுள்ளது. இதனால் மலையக மக்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், இளைஞர்கள் மதுபானங்களுக்கு அடிமையாகும் நிலைமை ஏற்பட்டுள்ளது

சட்டவிரோத மதுபானசாலைகளை தடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும், அதேபோல் அனுமதிப்பத்திரங்களை வழங்கும் வேளையில் தீவிரமாக பரிசீலிக்க வேண்டும், ஆனால் அவ்வாறு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே எதிர்வரும் காலத்தில் மலையகத்தில் மதுபானசாலைகளை கட்டுப்படுத்தவும், பொது மக்களையும் மாணவர்களையும் பாதுகாக்க இவ்வாறான அனுமதி வழங்கக்கூடாது எனவும், இப்போது வழங்கப்பட்டுள்ள மதுபானசாலைகளின் அனுமதிப்பத்திரத்தை ரத்துசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 மலையக சமூகத்தின் நிம்மதி, பாதுகாப்பை கருத்தில் கொண்டு மது ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் சபையில் தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்