நீதி அமைச்சர் சப்ரியின் இரு இராஜினாமாக் கடிதங்களை ஏற்க ஜனாதிபதி கோட்டா மறுப்பு - பரஸ்பர கருத்துப் பரிமாற்றத்தில் பேசப்பட்டது என்ன ?

Published By: Gayathri

08 Nov, 2021 | 07:44 PM
image

(ஆர்.ராம்)

நீதி அமைச்சர் பதவியிலிருந்தும், பொதுஜனபெரமுனவின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்புரிமையிலிருந்தும் இராஜினாமாச் செய்யும் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியின் இரு இராஜினாமாக் கடிதங்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஏற்பதற்கு மறுதலித்துள்ளார்.

அத்துடன், நீதி அமைச்சராகச் செயற்பட்டுக் கொண்டிருக்கும் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியின் சட்டவாக்கத்துறையில் நாட்டுக்கான சேவை தொடர்ந்தும் அவசியம் என்றும், புதிய அரசியலமைப்பு உருவாக்கம் உட்பட அனைத்து சட்டவாக்கச் செயற்பாடுகளையும் சுயாதீனமாக மேற்கொள்வதற்கு எவ்விதமான தடைகளும் விதிக்கப்படாது என்றும் ஜனாதிபதி கோட்டாபய தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இலங்கைக்கு விஜயம் செய்த உலக வங்கியின் தெற்காசிய வலயத்தின் உப தலைவர் ஹார்ட்விக் ஷெஃபர் தலைமையிலான குழுவினருக்கு மதிய போசனத்தினை வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மாளிகையில் ஏற்பாடு செய்திருந்தார்.

அந்த விருந்து நிகழ்வு நிறைவடைந்ததன் பின்னர் நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியுடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சந்திப்பொன்றை நடத்தினார்.

இந்தச் சந்திப்பில் ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தர மற்றும் ஜனாதிபதியின் ஆலோசகர் லிலித் வீரதுங்க ஆகியோரும் பங்கேற்றிருந்தனர். இரண்டரை மணிநேரமாக நடைபெற்ற இந்தச் சந்திப்பு தொடர்பான சில விபரங்களை நீதி அமைச்சர் அலி சப்ரி வீரகேசரிக்கு வெளிப்படுத்தியிருந்ததோடு ஜனாதிபதிக்கு நெருங்கிய தரப்பினரும் அச்சந்திப்பு தொடர்பான தகவல்களை தெரிவித்திருந்தனர். அவை வருமாறு, 

ஜனாதிபதி கோட்டாபயவுக்கும் நீதி அமைச்சர் அலி சப்ரிக்கும் இடையிலான சந்திப்பு ஆரம்பித்தவுடன் நீதி அமைச்சர் அலி சப்ரி, தனது இரண்டு இராஜினாமாக் கடிதங்களையும் முதலில் ஜனாதிபதியிடத்தில் கையளித்துள்ளார். 

அத்துடன், என்னால் தொடர்ந்தும் நீதி அமைச்சர் பதவியை வகிக்க முடியாது. அவ்வாறான நிலையில் நான் பாராளுமன்ற உறுப்பினராக தொடர்ந்தும் இருப்பதில் பயனில்லை என்று கூறியுள்ளார்.

அதன்போது, “நீங்கள் அவ்வாறு கூறக்கூடாது உங்களுடைய சிறப்பான செயற்பாடுகளை நான் நன்கு அறிவேன். நீங்கள் தொடர்ந்தும் பணியாற்ற வேண்டும். உங்களுடைய சேவை நாட்டின் சட்டவாக்கத்துறைக்கு மிகவும் அவசியமானது. ஆகவே, உங்களுடைய இராஜினாமாக் கடிதத்தினை ஏற்றுக்கொள்ள முடியாது” என்று பதிலளித்துள்ளார் ஜனாதிபதி கோட்டாபய.

அச்சமயத்தில், நீதி அமைச்சர் அலி சப்ரி, “ஞானசார தேரர் தலைமையில் நீங்கள் ‘ஒரேநாடு - ஒரே சட்டம்’ என்ற விடயத்திற்காக செயலணியொன்றை அமைத்துள்ளீர்கள். இது சட்டவாக்கத்தில் ஈடுபடும் எம்போன்றவர்களுக்கு அகௌரவமான விடயமாகும். 

இவ்விதமான செயலணியொன்றை நியமித்ததன் பின்னர் நான் நீதி அமைச்சராக நீடிப்பதில் பயனில்லை. சமயத்தலைவர் ஒருவர் நாட்டின் சட்டத்தினை இயற்றுவதாக இருந்தால் அத்துறைச்சார்ந்த நான் அப்பதவியில் இருப்பதானது பொருத்தமானதல்ல” என்று குறிப்பிட்டுள்ளார்.

அதுமட்டுமன்றி நீதி அமைச்சர் அலி சப்ரி, “அவ்வாறான சட்டமியற்றும் அதிகாரத்தினைக் கொண்டிருக்கும் குறித்த தேரர் முஸ்லிம்களுக்கு எதிரான மனநிலையைக் கொண்டவர். அத்துடன் சிறுபான்மையினருக்கும் எதிராகவே செயற்பட்டும் இருக்கின்றார். எனவே, அவர் தலைமையிலான செயலணியை சிறுபான்மையினர் நம்பமாட்டார்கள். மேலும் தமிழினத்தைச் சார்ந்த எவ்விதமான உறுப்பினர்களும் உள்வாங்கப்படவும் இல்லை” என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

“மேலும், இவ்விதமான செயலணியொன்று நியமிக்கப்பட்டமையானது எனக்கு அளிக்கப்பட்ட பொறுப்பை சரியாகச் செய்யவில்லை என்ற தோற்றப்பாட்டையும் என் மீதான நம்பிக்கையீனத்தினையும் வெளிப்படுத்துவதாகவும் உள்ளது” என்றும் நீதி அமைச்சர் அலி சப்ரி குறிப்பிட்டு மீண்டும் இரண்டாவது தடவையாக இராஜினாமக் கடிதங்களை ஜனாதிபதியிடம் நீட்டியிருக்கின்றார்.

அதன்போது,  ஜனாதிபதி கோட்டாபய, “நீங்கள் இவ்விதமாக இராஜினாமாச் செய்வது பொருத்தமற்றது. உங்கள் மீது எமக்கு பூரண நம்பிக்கை உள்ளது. உங்களின் செயற்பாடுகளில் திருப்தியைக் காண்கின்றேன். 

புதிய அரசியலமைப்பு பணிகளையும் சிறப்பாகவே முன்னெடுத்துள்ளீகள். இந்த நாட்டின் சட்டவாக்கம் உங்களைப் போன்றவர்களால் தான் முன்னெடுக்கப்பட வேண்டும். சட்டவாக்கத்தின் நான் தலையீடு செய்யப்போவதில்லை. சட்டவாக்கத்துறைக்கான பூரண சுயாதீனத்தன்மை உள்ளது. அதில் நான் இடையூறுகளை ஏற்படுத்தப்போவதில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

எனினும், நீதி அமைச்சர் அலி சப்ரி, “ஜனாதிபதி செயலணியின் நியமனமானது, முஸ்லிம்கள் மத்தியில் பலத்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமன்றி எனது சமூகம் சார்ந்து எனக்கு அழுத்தங்களும் அதிகமாகவே உள்ளது. 

ஆகவே தயவுசெய்து எனது சட்டத்தரணி தொழிலுக்கு திரும்பிச் செல்வதற்கு அனுமதியுங்கள். நான் தனிப்பட்ட எந்தவொரு நோக்கத்திற்காகவும் அரசியலிற்கு வரவில்லை. உங்களுக்காக பிரசாரங்களைச் செய்யவில்லை. எனக்கும் உங்களுக்கும் இடையிலான உறவுநிலை தொடர்ந்தும் இருக்கும். நான் அரசியலை விட்டு ஒதுங்கவே விரும்புகின்றேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது ஜனாதிபதி கோட்டாபய, “நான் ஜனாதிபதி செயலணியை நியமித்தது பற்றி தவறான புரிதலே உங்களுக்கும் பலருக்கும் ஏற்பட்டுள்ளது. நான் அச்செயலணியை நியமித்தமையானது, ஒரே நாடு - ஒரே சட்டம் என்பது பற்றிய தெளிவுப்பாட்டைப் எனக்குப் பெற்றுக்கொள்வதற்கு ஆகும். 

அந்த செயலணியானது, சட்டவாகத்துறைக்கு பரிந்துரைகளைச் செய்யாது. அந்தச் செயலணியானது தமது அவதானங்களை எனக்கு பரிந்துரைக்கும். அதன் பின்னர் சட்டவாக்கத்துறை அதனை விரும்பினால் புதிய அரசியலமைப்பில் உள்ளீர்த்துக்கொள்ளமுடியும். ஆகவே செயலணி சட்டவாகத்தின் சுயாதீனத்தில் தலையீடு செய்யாது” என்று பதிலளித்துள்ளார். 

அதன்போது, நீதி அமைச்சர் மீண்டும் “இல்லை இந்த செயலணி பற்றிய பார்வை மக்கள் மத்தியில் மாறுபட்டதாக உள்ளது. ஆகவே நான் பதவிவிலகளைச் செய்வது தான் பொருத்தமென்று கருதுகின்றேன். 

நீங்கள் பொருத்தமானவரை நியமித்து செயற்பாடுகளை முன்னெடுங்கள். அதில் எவ்விதமான மனக்கசப்புக்களும் எனக்கு இல்லை. தயவுசெய்து எனது கடிதங்களை ஏற்றுக்கொள்ளுங்கள்” என்று கூறியுள்ளார்.

எனினும், ஜனாதிபதி கோட்டாபய, “நான் அனைத்து இனங்களின் மீதான கரிசனையைக் கொண்டிருக்கின்றேன். நியாயமாக நடந்து கொள்ளவே விளைகின்றேன். ஆகவே வேண்டாத குழப்பங்களை தவிர்த்து தங்களின் செயற்பாடுகளை தொடருங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். இத்துடன் சந்திப்பு நிறைவுக்கு வந்துள்ளது.

இந்நிலையில்,  ஜனாதிபதி மற்றும் ஞானசார தேரர் தலைமையிலான செயலணியின் அடுத்த கட்டச் செயற்பாடுகளை பொறுத்திருந்து பார்ப்பதாக நீதி அமைச்சர் அலி சப்ரி மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எதிர்ப்புக்களுக்கு மத்தியிலேயே அஜித் மன்னம்பெருமவுக்கு வேட்புமனுவில்...

2024-10-13 19:23:56
news-image

ஐக்கிய மாதர் சக்தியின் தேசிய அமைப்பாளர்...

2024-10-14 02:42:39
news-image

இந்த மண்ணில் தமிழரசுக்கட்சியினால்தான் தமிழ் மக்கள்...

2024-10-14 02:23:21
news-image

யாழ். தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் தமிழரசு...

2024-10-14 02:07:52
news-image

முக்கியமான தீர்மானங்களின் போது நபர்கள் தொடர்பில்...

2024-10-14 01:58:57
news-image

கொழும்பில் பிரபல வர்த்தகர் ரணில் விலத்தரகே...

2024-10-14 01:41:54
news-image

தேர்தல் செலவு அறிக்கையை கையளிக்காத ஜனாதிபதி...

2024-10-13 23:39:33
news-image

தேர்தலில் போலித் தமிழ்த்தேசியவாதிகளையும் போதை வியாபாரிகளையும்...

2024-10-13 19:23:46
news-image

கொடிகாமத்தில் குண்டு வெடிப்பு; இளைஞன் படுகாயம்

2024-10-13 19:17:35
news-image

சீரற்ற காலநிலை – கொழும்பு கம்பஹா...

2024-10-13 18:48:40
news-image

களுவாஞ்சிக்குடியில் இரு மோட்டார் சைக்கிள்கள் மோதியதில்...

2024-10-13 18:37:55
news-image

அம்பாறையில் தமிழ் மக்களின் வாக்கினை சிதைக்க...

2024-10-13 18:58:57