ஒரு சில பாடசாலைகளில் மாணவர்கள் கொவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளார்கள் - ஜோசப் ஸ்டாலின்

By Digital Desk 2

08 Nov, 2021 | 08:42 PM
image

 இராஜதுரை ஹஷான்

மாணவர்களுக்கு கொவிட் -19 தடுப்பூசி செலுத்தும் பணிகள் பூர்த்தி செய்யப்பட முன்னர் பாடசாலைகளின் கல்வி செயற்பாடுகள் முழுமையாக ஆரம்பிக்கப்பட்டுள்ளமை அவதானத்திற்குரியது.

மாணவர் போக்குவரத்து,பாடசாலையில் சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களை பின்பற்றல் தொடர்பில் அரசாங்கம் குறிப்பிட்ட அனைத்தும் நடைமுறைக்கு சாத்தியமற்றதாக உள்ளது என இலங்கை ஆசிரியர் - அதிபர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் காரியாலயத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 அவர்  மேலும் குறிப்பிடுகையில்,

மாணவர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தல் தொடர்பில் அரசாங்கம் ஆரம்பத்தில் குறிப்பிட்ட கருத்துக்கள் பொய்யாக்கப்பட்டுள்ளன.

மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகளை பூரணப்படுத்தாமல், பாடசாலையின் கல்வி செயற்பாடுகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மாணவர் போக்குவரத்து, பாடசாலைகளில் சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களை பின்பற்றல் தொடர்பில் சுகாதார அமைச்சு வழங்கிய பரிந்துரைகளை கல்வி அமைச்சு செயற்படுத்தவில்லை.

பெரும்பாலான மாணவர்கள் பொது போக்குவரத்து சாதனங்களை பயன்படுத்தி பாடசாலைக்கு வருகை தருகிறார்கள்.

பாடசாலைக்குள் சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களை பின்பற்றுவதற்கு தேவையான உபகரணங்களை பெற்றுக் கொள்வதற்கு கல்வி அமைச்சினால் பாடசாலைகளுக்கு நிதி வழங்கப்படவில்லை.

ஆகவே பாடசாலைகளை மீள ஆரம்பிக்க முன்னர் கல்வி அமைச்சு குறிப்பிட்ட விடயங்கள் அனைத்தும் நடைமுறைக்கு சாத்தியமற்றதாக உள்ளது.

ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்க போராட்டத்தை முடக்கும் வகையில் எவ்வித திட்டமிடலும் இல்லாமல் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

தற்போது ஒரு சில பாடசாலைகளில் மாணவர்கள் கொவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளார்கள். அது அவதானத்திற்குரியது.

கட்டம் கட்டமாக பாடசாலைகளை திறக்கும் தீர்மானத்திற்கு மாறாக ஒரு சில பாடசாலைகளில் அனைத்து ஆசிரியர்களும் கடமைக்கு அழைக்கப்பட்டுள்ளார்கள்.தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுப்படும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் கல்வி செயற்பாடுகளில் மாத்திரம் ஈடுபடுவார்கள் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right