(எம்.எம்.சில்வெஸ்டர்)

நாட்டின் பாதுகாப்பை  உறுதிப்படுத்துவதற்கு அரச தலைவர்கள் பாதுகாப்புத் துறையினர் முன்நின்று செயற்பட வேண்டும். 

அவர்கள் தங்களையும் , தங்களது குடும்பங்களையும் மாத்திரம் பாதுகாத்துக்கொள்வதற்காக மாத்திரம் செயற்படலாகது என கத்தோலிக்க திருச்சபையின் கொழும்பு மறை மாவட்ட சமூக மற்றும் தொடர்பாடல் பணிப்பாளர் அருட் தந்தை ஜூட் கிரிஷாந்த தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுக்கு தொடர்புடையவர்கள் மற்றும் அதற்கு பின்னணியில் உள்ளவர்கள், உண்மையை மூடி மறைப்பவர்கள் ஆகியோரை தேடிப்பார்க்குமாறு நாம் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக அராசங்கத்திடம் கேட்டு நிற்கிறோம். இந்த விசாரணை முறையாக நடக்கவில்லை என்று தோன்றுகிறது என அவர் மேலும் ‍தெரிவித்தார். 

அருட் தந்தை சிறில் காமினிக்கு கொழும்பு உயர் நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட அடிப்படை உரிமை மனு மீதான விசாரணை இன்றறைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 

அருட் தந்தை சிறில் காமினிக்கு ஆதரவு தெரிவித்து கொழும்பு மறை மாவட்ட அருட் தந்தையர்கள், அருட் சகோதரிகள் மற்றும் பொது மக்கள் சிலர் என நூற்றுக்கணக்கானோர் அமைதியான வழியில் கவனயீர்ப்பு போராட்டமொன்றை இன்றையதினம் முன்னெடுத்திருந்தனர்.  

இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டிருந்தபோத அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

"நாம் அருட் தந்தை சிறில் காமினியை பாதுகாப்பதற்காக நாம் இங்கு ஒன்று கூடவில்லை. இந்நாட்டின் தேசிய பாதுகாப்புக்காகவே ஒன்று கூடியுள்ளோம். 

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலையடுத்து எமது நாட்டில் அபாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என்பதையே நாம் தொடர்ந்தும் கூறி வருகிறோம்.

ஆகவே, அது குறித்து கூறவே நாம் இன்று கூடியுள்ளோம். இதற்காக குரல் கொடுத்த அருட் தந்தை சிறில் காமினி அடிகளாரை வேட்டையாடும் நோக்கில் இந்த அரசாங்கம் செயற்பட்டு வருகிறது. 

எமது அருட் தந்தையர்கள் மாத்திரமல்ல  மதகுருமார்கள் மீது கைவைக்க வேண்டாம். அவர்கள்  முன்நிற்பது உண்மையை கண்டறிவதற்காகவே  தவிர, அரசியல் இலாபத்துக்காக அல்ல. 

தேசிய சுதந்திரத்திற்காகவே நிற்கிறார்கள். எமது நாட்டு மக்கள் சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டு நிம்மதியாகவே வாழக்கூடிய நிலையை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென்பதற்காகவே கத்தோலிக்க மற்றும் மகா சங்கரத்தன தேரர் என எந்தவித பேதமுமில்லாத  மதத் தலைவர்கள் தங்களது கருத்துக்களை தெரிவிக்கின்றனர்.

ஆகவே, இவ்வாறான மதத் தலைவர்களுக்கு எதிராக குற்றாட்டுக்களை முன்வைப்பதை தவிர்க்குமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறோம். 

இதனை செய்யாது விட்டால், கத்தோலிக்க மக்களை மாத்திரம் அல்ல  இலங்கையிலுள்ள அனைத்து மக்களையும் ஒன்றிணைத்து வீதிக்கு இறங்குவோம். அவ்வாறு நடந்தால் அடுத்து என்ன நடக்கும் என்பதை அரசாங்கம் சிந்திக்க வேண்டும். 

அருட் தந்தை சிறில் காமினி அவர்கள் கூறிய கருத்துக்களால், தனக்கும் தனது குடும்பத்துக்கும் ஏதேனும் விபரீதம் ஏற்படக்கூடும் என கூறியே அரச புலனாய்வுத்துறையின் பணிப்பாளர் சுரேஷ் சாலி கூறுகிறார். 

அருட் தந்தை ஒருவரின் கருத்துக்கு புலனாய்வுத்துறையின் பிரதானி, எதற்காக அஞ்ச வேண்டும் என்பது குறித்து எமக்கு வெட்கமாகவுள்ளது. 

இவ்வாறு,  அவர் அஞ்சுவது அவர் குறித்தும் அவரது  குடும்பம் குறித்தும்தான். 

ஆனால், அருட் தந்தை சிறில் காமினி  மற்றும் மதத் தலைவர்கள் இரண்டரை வருடங்களுக்கும் மேலாக இந்நாட்டின் பாதுகாப்பு குறித்துதான் பேசுகிறார்கள். நாட்டின் பாதுகாப்பு குறித்து பேச வேண்டியவர்கள், தங்களது பாதுகாப்பு குறித்துதான் பேசுகிறார்கள். 

ஆகவேதான் நாம் கூறுகிறோம், நாட்டுத் தலைவர்கள், பாதுகாப்புத் துறையில் உள்ள உயரதிகாரிகள் என பொறுப்புவாய்ந்த அனைவரும்  தங்களது சுயவிருப்பங்களுக்காக இல்லாமல்  நாட்டின் பாதுகாப்பை முதன்மைப்படுத்தி செயற்பட வேண்டும். இந்நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு செயற்பட வேண்டும்"  என்றார்.

இந்த அமைதி வழி கவனயீர்ப்பு பேராட்டத்துக்கு  பெளத்தமதத் தலைவர்கள் உட்பட கொழும்பு மறை மாவட்ட அருட் தந்தையர்கள், அருட் சகோதரிகள் மற்றும் பொது மக்கள் சிலர் என நூற்றுக்கணக்கானோர்  கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.