(ஆர்.ராம்)

மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துதல், 13 ஆவது திருத்தச்சட்டத்தினை அமுலாக்கல் உள்ளிட்ட விடயங்கள் மற்றும் சிறுபான்மை தமிழ் பேசும் சமூகங்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளுக்கு எதிராக ஒன்றிணைந்து செயற்படுதல் ஆகியவற்றை நோக்காகக் கொண்ட தமிழ் பேசும் கட்சிகளின் ஒன்றிணைந்த பயணம் தொடரும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின்தலைவரும் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

அடுத்து வரும் காலத்தில் நடைபெறவுள்ள கூட்டங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும், தமிழரசுக்கட்சியின் பிரதிநிதிகளும் பங்கேற்பார்கள் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் கொழும்பு இல்லத்தில், அவருடன் மு.கா.வின் தலைவர் ஹக்கீம், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசன் சந்திப்பொன்றை வெள்ளிக்கிழைமையன்று நடத்தியிருந்தார்கள். 

அது தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தமிழ்க் கட்சிகளின் கூட்டத்தின் நானும், மனோகணேசனும் கலந்து கொண்டிருந்தோம். இந்தக் கூட்டத்தில் இலங்கை தமிழரசுக்கட்சி கலந்து கொண்டிருக்கவில்லை. 

அக்கட்சி கலந்து கொண்டிருக்காமை வருத்தமளிக்கும் ஒரு விடயமாகும். அத்துடன் அக்கட்சி தமிழ்த் தேசிய அரங்கில் மிகவும் முக்கியமானதொரு வகிபாகத்தினைக் கொண்டிருக்கும் நிலையில் அது பங்கேற்றிருக்காமை பொருத்தமற்றதொன்றாகவே இருந்தது.

எனினும், அதுபற்றிய உரையாடலின்போது அக்கட்சியினருக்கு குறித்த தினமன்று பங்குபற்றுவதற்கான ஏதுநிலைகள் இல்லாமையினால் சமூகமளித்திருக்கவில்லை என்று கூறப்பட்டது. 

இந்நிலையில், நான் கொழும்பு திரும்பியதும் நண்பர் மனோகணேசனுடன் இணைந்து மூத்த தலைவர் சம்பந்தனை சென்று சந்தித்தோம்.

குறித்த கூட்டத்தின் நோக்கம் மற்றும் தற்போதைய காலத்தில் தமிழ் பேசும் கட்சிகளின் ஒன்றிணைவுக்கான அவசியம் பற்றியும் எடுத்துரைத்தோம். அவர் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கூட்டத்தினை வரவேற்றார். அவ்விதமான முயற்சியை முன்னெடுத்தமைக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

மேலும் தொடர்ந்தும் இந்த விடயத்தினை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும், அதற்கான தனது ஆசீர்வாதங்களும் ஒத்துழைப்பும் இருக்கும் என்று குறிப்பிட்டார்.

அதுமட்டுமன்றி,  நான் 13 ஆவது திருத்தச்சட்டம் தமிழ் மக்களுக்கோ அல்லது முஸ்லிம் மக்களுக்கோ பிரச்சினைக்கான தீர்வினை வழங்காது என்பதில் உறுதியாக இருக்கின்றபோதும், அரசியலமைப்பில் உள்ள அச்சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துவது அவசியமானது என்ற நிலைப்பாட்டிலேயே உள்ளேன் என்பதையும் சம்பந்தனுக்கு தெளிவுபடுத்தியிருந்தேன்.

அந்தவகையில், அடுத்து வரும் காலத்தில் தமிழ் பேசும் கட்சிகள் வலிமையான வகையில் ஒன்றிணையும். அதில் தமிழ் அரசுக்கட்சியின் பங்கேற்பும் இருக்கும். அவ்விதமான பங்கேற்காமையுடன் முன்னெடுக்கப்படும் விடயங்கள் வெற்றியடையாது என்றார்.