(இராமேஸ்வரத்திலிருந்து ஆ.பிரபுராவ்) 

இராமேஸ்வரம் அருகே இன்று திடீரென சிலின்டர் வெடித்து தீ விபத்து  ஏற்பட்டதில்  20 இலட்சம்  ரூபா மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்துள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் ராஜீவ்காந்திநகர் மீனவர்குடியிருப்பில்  முத்துவிஜயன் என்பவரது வீட்டில் சமையல் செய்துவிட்டு வெளியே சென்ற போது  திடீரென தீ பிடித்தது.

வழக்கத்திற்கு மாறாக காற்றின் வேகம் இருந்ததால் தீ பரவி சண்முகம் என்பவரின் வீட்டில் பிடித்து எரிந்தது அப்போது சமையல் அறையிலிருந்த   காஸ்சிலிண்டர் வெடித்து   அருகே இருந்த வீட்டிலும் தீ பரவியது.

மேலும் சிலிண்டர் வெடித்ததில் சுமார் 100 மீற்றர் தொலைவிலுள்ள தென்னை மற்றும் மல்லிகை தேர்ட்டத்திலும் தீ பிடித்தது.

இதனையடுத்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. ஆனால் தீயணைப்பு வகானம் சம்பவ இடத்திற்கு வருவதற்கு வழியில்லை என்பதால் மீனவர்களும் பொதுமக்களும் தீயணைப்பு வீரர்களுடன் இணைந்து சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் தீயை அணைத்தனர்.

 

இந்த தீவிபத்தில் நான்கு குடிசைகளும் ஒரு தோட்டமும் எரிந்துள்ளது. மேலும் திருமணத்திற்காக வாங்கிவைத்திருந்த 5 பவுண் நகையும் தீயில் எரிந்து நாசம் அடைந்ததாக பாதிக்க்பட்டவர் தெரிவித்துள்ளார்.

விபத்து குறித்து இராமேஸ்வரம் வட்டாச்சியர் காவல்துறை துணைக்கண்கானிப்பாளர் மற்றும் வருவாய்த்துறை ஊழியர்கள் நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினர்.

இதனால் சுமார்  20 இலட்சம் ரூபா மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்துள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

 பகல் வேளை என்பதால் வீடுகளில் யாரும் இல்லாததால் அதிஷ்டவசமாக உயிர்ச்சேதம் தடுக்கப்பட்டது. விபத்து குறித்து தங்கச்சிமடம் பொலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை  மேற்கொண்டு வருகின்றனர்.