கடமைக்கு இடையூறு செய்வோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை - மன்னாரில் அமைச்சர் டக்ளஸ் 

06 Nov, 2021 | 06:35 PM
image

வளமான எதிர்காலத்தினை எமது மக்களுக்கு ஏற்படுத்துவதே நோக்கமாக இருக்கின்ற போதிலும், சட்ட விரோத செயற்பாடுகளுக்கு இடமளிக்க முடியாது என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

மன்னாருக்கான விஜயத்தினை இன்று (06.11.2021) மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடற்றொழிலாளர் சங்கப் பிரதிகள் மற்றும் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளுடனான கலந்துரையாடலின் போதே மேற்குறிப்பிட்டவாறு தெரிவித்தார்.

மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற சட்ட விரோத தொழில் முறைகள் உட்பட கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளுகின்ற பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக இன்றைய கூட்டத்தில் ஆராயப்பட்டது.

இக்கலந்துரையாடலில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சட்ட விரோத தொழில்முறைகள் அனைத்தும் நிறுத்தப்பட வேண்டும் எனவும் அதற்கு மக்களின் ஒத்துழைப்பு அவசியமெனவும் வலியுறுத்தினார்.

மேலும், "நாடளாவிய ரீதியில் சுருக்கு வலை தடை செய்யப்பட்டுள்ள போதிலும், குறித்த தொழில் முறைகள் தொடர்பான புதிய ஒழுங்கு விதிகள் வெளியிடப்படும் வரையில் 3 இஞ்சிக்கும் குறையாத அளவு கண் வலைகளைப் பயன்படுத்தி 16 மைல்களுக்கு அப்பால் சுருக்கு வலை தொழிலை தற்காலிகமாக மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்படும்.

அதேபோன்று கரைவலைத் தொழிலில் ஈடுபடுகின்றவர்கள் வின்ஞ் எனப்படும் இயந்திரங்களைப் பயன்படுத்துவதும் நிறுத்தப்பட வேண்டும்.

இவ்வாறு, தடைசெய்யப்பட்ட தொழில் முறைகளை  கட்டுப்படுத்துவதற்கு  கடற்படை, பொலிஸார் மற்றும் கடற்படையினரின் ஒத்துழைப்பினைப் பெற்றுக் கொள்ள முடியும். ஆனால் எமது மக்களுக்கு தேவையற்ற அசௌகரியங்களை ஏற்படுத்தக் கூடாது என்பதற்காக குறித்த வழிமுறையை தவிர்த்து வருகின்றேன்.

எனவே, கடற்றொழிலாளர்கள் தடை செய்யப்பட்ட தொழில்முறைகளை கட்டுப்படுத்துவதற்கு கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பினை வழங்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

மேலும், தடை செய்யப்பட்ட தொழில் முறைகளை கட்டுப்படுத்துவதில் எந்தவிதமான பாராபட்சங்களும் காட்டக்கூடாது என்று கடற்றொழில் திணைக்களப் பரிசோதகர்களுக்கு அறிவுறுத்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடமை செய்வதற்கு இடையூறுகள் ஏற்படுத்தப்படுமானால் தனக்கு அறியத் தருமாறும் அவ்வாறானவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்  தெரிவித்ததுடன்,  புனரமைக்கப்பட வேண்டிய கடற்றொழில் வீதிகள் தொடர்பான பட்டியலை முன்னுரிமை அடிப்படையில் வழங்குமாறும் கேட்டுக்கொண்டார்.

அத்துடன், முசலி போன்ற பிரதேசங்களில் ஏற்படுகின்ற கடலரிப்பினை தடுத்தல், கடலட்டை பண்ணை அமைக்க விரும்புகின்றவர்களுக்கு இடங்களை ஒதுக்குதல் உட்பட பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right