போர் முடிவடைந்த பின்னரும் வடக்கில் சோதனைச்சாவடிகள் எதற்கு? - எரான் விக்ரமரத்ன

Published By: Digital Desk 3

06 Nov, 2021 | 11:06 AM
image

(நா.தனுஜா)

போர் முடிவிற்குக்கொண்டுவரப்பட்டு பலவருடங்கள் கடந்துள்ள நிலையிலும், இன்னமும் வடக்கின் பல்வேறு பகுதிகளிலும் சோதனைச்சாவடிகள் நிறுவப்பட்டிருக்கின்றன. நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிசெய்வதை இலக்காகக்கொண்டு மேற்கொள்ளப்படும் எந்தவொரு நடவடிக்கையும் மக்களின் பொதுவாழ்வில் பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் முன்னெடுக்கப்படவேண்டும். 

இதுவோர் ஜனநாயக நாடு என்பதையும் இங்கு ஜனநாயக நிர்வாகமே அமுலில் உள்ளது என்பதையும் வடக்கு மக்கள் உணரக்கூடியவகையில் அரசாங்கம் செயற்படவேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன வலியுறுத்தியுள்ளார்.

அதுமாத்திரமன்றி காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதை அரசாங்கம் உறுதிப்படுத்தவேண்டும் என்று குறிப்பிட்டுள்ள அவர், எதிர்வரும் ஆண்டிற்கான வரவு, செலவுத்திட்டத்தில் இழப்பீட்டுக்கான அலுவலகத்திற்கு போதியளவு நிதி ஒதுக்கீடு செய்யப்படவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைக்காரியாலயத்தில் நேற்று வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அங்கு அவர் மேலும் கூறியதாவது,

இன்னும் இருவாரங்களில் அடுத்த வருடத்திற்கான வரவு - செலவுத்திட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில், அதனூடாக மக்களுக்கு வழங்குவதற்கு எதுமில்லை என்றும் மக்களிடமிருந்தே பெறவேண்டியிருக்கிறது என்றும் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். அதுமாத்திரமன்றி அவர் பதவியேற்றுக்கொண்டதன் பின்னர் 'நான் நிதியில்லாத நிதியமைச்சர்' என்றும் குறிப்பிட்டார். 

எனவே தற்போதைய அரசாங்கம் நாட்டை முழுவதுமாக வங்குரோத்து நிலைக்குத் தள்ளிய பின்னர்தான் தன்னிடம் பொறுப்பை ஒப்படைத்திருக்கின்றார்கள் என்பதை அவர் ஏற்றுக்கொண்டுள்ளார்.

தற்போது நாட்டின் வருமானத்தில் ஏற்பட்டுள்ள பாரிய வீழ்ச்சியே பொருளாதார நெருக்கடிக்கான மிகமுக்கிய காரணமாகும். இருப்பினும் இது கொவிட் - 19 வைரஸ் பரவலின் விளைவு அல்ல. மாறாக அதற்கு முன்னரேயே அரசாங்கத்தினால் பின்பற்றப்பட்ட தவறான பொருளாதாரக்கொள்கைகளின் நேரடி விளைவாகும். எமது நல்லாட்சி அரசாங்கத்தில் மங்கள சமரவீர நிதியமைச்சராக இருந்தபோது நாட்டின் வருமானம் பெருமளவால் அதிகரித்தது. 

குறிப்பாக ஆட்சிப்பொறுப்பை ஏற்றுக்கொண்டபோது 10 சதவீதமாகக் காணப்பட்ட மொத்தத்தேசிய உற்பத்தி, எமது ஆட்சிக்காலம் முடிவடைகையில் 13 சதவீதமாக உயர்வடைந்திருந்தது. ஆனால் தற்போதைய அரசாங்கத்தின் முறையற்ற பொருளாதாரக்கொள்கைகள் மற்றும் செயற்திறனற்ற நிர்வாகம் என்பவற்றின் காரணமாக நாட்டின் வருமானம் வீழ்ச்சியடைந்ததுடன் கடந்த ஆண்டின் வரவு - செலவுத்திட்டப்பற்றாக்குறை 14 சதவீதமாகக் காணப்பட்டது. இது இவ்வாறிருக்கையில், தற்போது ஒருபுறம் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்திருப்பது மாத்திரமன்றி மறுபுறம் டொலருக்கான பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக மிகமோசமான பொருளாதாரக்கொள்கைகளின் விளைவாக நாட்டில் அரசாங்கமொன்று இயங்குகின்றதா? என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் தோற்றம்பெற்றிருக்கின்றது. அத்தியாவசியப்பொருட்களின் விநியோகத்தை ஒழுங்குபடுத்துவதற்கும் விலைகளைக் கட்டுப்படுத்துவதற்குமென அரசாங்கத்தினால் கடந்த காலங்களில் பல்வேறு வர்த்தமானி அறிவித்தல்கள் வெளியிடப்பட்டன. ஆனால் அவ்வர்த்தமானி அறிவித்தல்கள் எவையும் உரியவாறு நடைமுறைப்படுத்தப்படவில்லை. 

இந்நிலையில் பல்வேறு அத்தியாவசியப்பொருட்கள் தொடர்பில் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டுவிலைகளை நீக்குவதற்கான வர்த்தமானி அறிவித்தல் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் சீனி இறக்குமதிக்கான வரி குறைக்கப்பட்டது. ஆனால் அதனால் சீனியின் விலை குறைவடையவில்லை. 

மாறாக இறக்குமதி வரி மூலம் நாட்டிற்குக் கிடைக்கப்பெற்றுவந்த வருமானம் மாத்திரமே இழக்கப்பட்டது. அதுமாத்திரமன்றி அண்மையகாலத்தில் உணவுப்பொருட்கள், மரக்கறிகள் உள்ளிட்ட அனைத்தினதும் விலைகள் வெகுவாக அதிகரித்துள்ளன. இவற்றிலிருந்து நாட்டின் நிர்வாகம் தொடர்பில் அரசாங்கத்திற்குப் போதிய தெளிவில்லை என்ற விடயம் வெளிப்பட்டுள்ளது.

அடுத்ததாக ஐக்கிய மக்கள் சக்தியின் கொள்கைத்திட்டத்தைத் தயாரிப்பதற்காக நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் விஜயம் மேற்கொண்டு, பொதுமக்களுடன் கலந்துரையாடி அவர்களி;ன் தேவைகள் மற்றும் அபிப்பிராயங்கள் தொடர்பில் கேட்டறிந்து வருகின்றோம். 

அதன் ஓரங்கமாகக் சில தினங்களுக்கு முன்னர் வடமாகாணத்தின் சகல பகுதிகளுக்கும் சென்று, அங்குள்ள மக்களைச் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தோம். அதன்மூலம் தற்போது தெற்கில் வாழும் மக்கள் முகங்கொடுத்துள்ள அனைத்துப் பிரச்சினைகளும் வடக்கிலும் இருப்பதைப் புரிந்துகொள்ளமுடிந்தது. ஆனால் வடக்கில் வாழும் மக்களை அச்சுறுத்தி, அடக்கிவைத்திருப்பதன் காரணமாக அவர்கள் தெற்கிலுள்ள மக்களைப்போன்று வீதிகளில் இறங்கிப்போராடமாட்டார்கள். இருப்பினும் அங்கும் விவசாயம், மீன்பிடி, சுற்றுலா உள்ளிட்ட அனைத்துத்துறைகளும் பாதிக்கப்பட்டிருப்பதுடன் மக்களின் வருமானம் வெகுவாக வீழ்ச்சியடைந்திருக்கின்றது.

அதேபோன்று போரின் பின்னரான காலப்பகுதியில் ஏற்பட்ட பிரச்சினைகள் தொடர்பிலும் விசேடமாக அவதானம் செலுத்தவேண்டியுள்ளது. போர் இடம்பெற்ற காலப்பகுதியில் காணாமல்போன அல்லது வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதை அறிந்துகொள்வதற்காகப் பெருமளவானோர் காத்திருக்கின்றார்கள். காணாமல்போனோர் தொடர்பாக உண்மையை அறிவதற்காகத் தெற்கிலும் பலர் காத்திருக்கின்றார்கள். 

அதற்கென எமது அரசாங்கத்தினால் காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் ஸ்தாபிக்கப்பட்டது. அந்த அலுவலகத்தின் செயற்பாடுகளைத் தொடர்ந்து முன்னெடுத்துச்செல்லவேண்டிய பொறுப்பு தற்போதைய அரசாங்கத்திற்கு இருக்கின்றது. அதுமாத்திரமன்றி போரின் போது பொதுமக்களின் சொத்துக்களுக்கும் பாரிய சேதம் ஏற்பட்டது. எனவே சொத்துக்களை இழந்தவர்களுக்கும் காணாமல்போனோரின் உறவினர்களுக்கும் நட்டஈட்டை வழங்குவதற்கென இழப்பீட்டுக்கான அலுவலகமும் உருவாக்கப்பட்டது. இருப்பினும் அவ்வலுவலகத்தின் ஊடாக இழப்பீட்டை வழங்குவதற்கென 2021 ஆம் ஆண்டிற்கான வரவு, செலவுத்திட்டத்தில் மிகக்குறைந்தளவு நிதியே ஒதுக்கப்பட்டது. 

இந்நிலையில் பாதிக்கப்பட்ட அனைத்துத்தரப்பினருக்கும் உரியவாறு இழப்பீட்டை வழங்கக்கூடிய வகையில் அடுத்த ஆண்டிற்கான வரவு, செலவுத்திட்டத்தில் நிதியை ஒதுக்கீடு செய்யுமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம். அத்தோடு நல்லாட்சி அரசாங்கத்தினால் ஸ்தாபிக்கப்பட்ட நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தை மேலும் வலுவூட்டுவதற்கு அவசியமான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் அரசாங்கத்திடம் கோருகின்றோம்.

மேலும் போர் முடிவடைந்து பலவருடங்கள் கடந்தும் அங்கு வீதிகளில் சோதனைச்சாவடிகள் இயங்குகின்றன. இவை நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிசெய்வதற்கு அவசியம் எனும்போதிலும், அதனை பொதுமக்களின் சாதாரண வாழ்க்கையில் எவ்வித பாதிப்புக்களையும் ஏற்படுத்தாத வகையில் புலனாய்வுப்பிரிவினர் ஊடாகவே முன்னெடுக்கவேண்டும். 

இதுவோர் ஜனநாயக நாடு என்பதையும் இங்கு ஜனநாயக ரீதியான நிர்வாகமே அமுலில் இருக்கின்றது என்பதையும் வடக்குவாழ் மக்கள் உணரக்கூடியவகையிலேயே தேசிய பாதுகாப்பை உறுதிசெய்வதற்கான விடயங்களை நடைமுறைப்படுத்தவேண்டும் என்று வலியுறுத்தினார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59