(நா.தனுஜா)
இரசாயன உர இறக்குமதியைத் தடைசெய்து, அதற்கான தட்டுப்பாட்டை ஏற்படுத்தி, விவசாய நிலங்களை 'விளைச்சல் அற்ற நிலங்களாக' மாற்றி, அவற்றை பல்தேசியக்கம்பனிகளுக்கு விற்பனை செய்வதற்கான சதித்திட்டமொன்று அரங்கேறிவருகின்றதா? என்று சந்தேகம் வெளியிட்டுள்ள எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ, அரசாங்கத்தினதும் விவசாய அமைச்சின் அதிகாரிகளினதும் முறையற்ற செயற்பாடுகளின் விளைவாக உர இறக்குமதி விவகாரம் தற்போது இராஜதந்திர ரீதியிலான நெருக்கடியாக மாறியிருக்கின்றது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடளாவிய ரீதியில் விவசாயிகள் எதிர்கொண்டிருக்கும் நெருக்கடிகள் தொடர்பில் நேற்றைய தினம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது,
எமது நாட்டு விவசாயிகளின் கடுமையான உழைப்பின் காரணமாக கடந்த 2010 ஆம் ஆண்டளவில் அரிசி உற்பத்தியில் இலங்கை சுயதேவைப்பூர்த்தியடைந்த நாடாக மாற்றமடைந்தது.
உணவுப்பாதுகாப்பைப் பொறுத்தமட்டில் கடந்த ஒரு தசாப்தத்திற்கும் அதிகமான காலம் தெற்காசியாவில் இலங்கை முதலிடத்தில் இருந்துவந்திருக்கின்றது.
2019 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட உலக உணவுப்பாதுகாப்புச் சுட்டியின் பிரகாரம் இலங்கை 66 ஆவது இடத்தில் இருந்தது. இலங்கையின் தேயிலை மற்றும் தெங்கு உற்பத்திக்கு சர்வதேச மட்டத்தில் உயர்கேள்வி காணப்பட்டது. அவ்வாறிருந்த எமது நாட்டின் தற்போதைய நிலையென்ன?
அரசாங்கத்தின் தூரநோக்கற்ற, தன்னிச்சையான தீர்மானத்தின் காரணமாக உரியநேரத்தில் பயிர்ச்செய்கைக்கு அவசியமான உரம் கிடைக்கப்பெறாமையினால் விவசாயிகள் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டிருப்பதுடன் வெகுவிரைவில் நாட்டுமக்கள் அனைவரும் பாரிய உணவுப்பஞ்சத்திற்கு முகங்கொடுக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
எமது நாட்டின் நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பங்கு நிலம் விவசாயத்திற்காக ஒதுக்கப்பட்டிருப்பதுடன் நாட்டின் ஊழியப்படையில் நான்கில் ஒரு பங்கினர் நேரடியாகவோ, மறைமுகமாகவோ விவசாயத்துறையுடன் தொடர்புபட்டிருக்கின்றனர். அல்லது தமது வாழ்வாதாரத்திற்காக விவசாயத்துறையில் தங்கியிருக்கின்றனர். நாட்டின் மொத்தத்தேசிய உற்பத்தியில் விவசாயத்துறையின் பங்களிப்பு 7.3 சதவீதமாகும். அதேவேளை 1.8 மில்லியன்பேர் நெல்லுற்பத்தியுடன் தொடர்புபட்டிருக்கின்றனர். அதிகரித்துவரும் சனத்தொகைக்கு ஏற்ப கேள்வியும் உயர்வடைவதனால் அரிசி உற்பத்தியை வருடாந்தம் குறைந்தபட்சம் ஒரு சதவீதத்தினாலேனும் அதிகரிக்கவேண்டியுள்ளது. அவ்வாறிருக்கையில் விவசாயத்துறையை முழுமையாக ஸ்தம்பிதமடையச்செய்திருப்பதன் விளைவாக, எதிர்பார்க்கப்படும் இலக்கை அடைந்துகொள்வது மிகவும் கடினமான விடயமாகவே அமையும்.
ரஜரட்ட பிரதேசத்தில் மக்களிடையே பரவிவரும் சிறுநீரகநோய்க்கு ஒரேயொரு காரணம் இரசாயன உரத்தின் பயன்பாடு என்று எவ்வித அடிப்படைகளுமற்ற கருத்தொன்றை முன்வைத்து, அதுகுறித்து எந்தவொரு விஞ்ஞானபூர்வ பரிசோதனைகளையும் முன்னெடுக்காமல், சடுதியாக இரசாயன உர இறக்குமதியைத் தடைசெய்வதற்குத் தீர்மானம் மேற்கொண்டமை முட்டாள்தனமான செயற்பாடாகும். உலகில் அனைவரின் மத்தியிலும் தனித்துத்தெரியவேண்டும் என்ற தனியொரு நபரின் கனவை நனவாக்கிக்கொள்ளும் நோக்கில், நாட்டின் விவசாயிகள் உள்ளடங்கலாக அனைத்து மக்களினதும் உயிர்களைப் பணயம்வைத்துச் செயற்படுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாது.
இதன் விளைவாக விவசாயிகளும் விவசாயத்துறையும் அதனுடன் தொடர்புடைய ஏனைய துறைகளும் பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்கவேண்டியேற்படும். நெல்லுற்பத்தியாளர்களுக்கு மேலதிகமாக அரிசி ஆலை உரிமையாளர்கள், தேயிலை உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிற்சாலை உரிமையாளர்கள், தெங்கு உற்பத்தியாளர்கள், பூ மற்றும் பழப்பயிர்ச்செய்கையாளர்கள் அனைவரும் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நெல்லுற்பத்தி தொடர்பான பரிசோதனை நிலையத்தினால் பலவருடங்களாக முன்னெடுக்கப்பட்ட பரிசோதனைகளின் பிரகாரம், சேதன உரப்பயன்பாட்டினால் விளைச்சல் 21 - 30 சதவீதம் வரையில் வீழ்ச்சியடையும் என்று கண்டறியப்பட்டுள்ளது. அவ்வாறிருக்கையில் இவ்விடயம் தொடர்பில் முறையான விஞ்ஞானபூர்வப் பரிசோதனைகளின்றி மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தினால் விளைச்சல் மேலும் வீழ்ச்சியடையும் நிலையேற்பட்டுள்ளது.
அதுமாத்திரமன்றி உரியவாறு ஏற்றுக்கொள்ளப்பட்ட சட்டதிட்டங்களையும் வழிகாட்டல்களையும் புறக்கணித்து, நாட்டிற்குள் உரத்தைக் கொண்டுவருவதற்கு அரசாங்கம் மேற்கொண்டிருக்கும் முயற்சியினால் உள்நாட்டு விவசாயம் மாத்திரமன்றி நாட்டின் ஒட்டுமொத்த நிலமும் (வளமான நிலம்) பாதிப்படையும்.
அத்தோடு இம்முயற்சியின் விளைவாக வளிக்கட்டமைப்பிலும் மிகமோசமான தாக்கங்கள் ஏற்படும். சேதன உரத்தை மாத்திரம் பயன்படுத்தும் கொள்கையின் மூலம் பெருவர்த்தகக் கட்டமைப்பொன்று உருவாக்கப்பட்டு, அதனூடாகப் பொதுமக்களின் நிதியைக் கொள்கையடிக்கும் செயற்பாடே அரங்கேறிவருகின்றது.
அரசாங்கத்தினதும் அதிகாரிகளினதும் செயற்பாடுகள் காரணமாக உர இறக்குமதி தற்போது இராஜதந்திர ரீதியிலான நெருக்கடியாக மாறியிருக்கின்றது.
மேலும் இதனூடாக விவசாய நிலங்களை 'பயனற்ற நிலங்களாக' மாற்றி, அவற்றை பல்தேசியக்கம்பனிகளுக்கு விற்பனை செய்வதற்கான சதித்திட்டமொன்று அரங்கேறுகின்றதா? என்ற வலுவான சந்தேகமும் எழுந்துள்ளது. மறுபுறம் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான இழப்பீட்டை வழங்குவதாக அரசாங்கம் கூறியிருக்கின்போதிலும், அதனை நடைமுறைப்படுத்துவதற்கான எந்தவொரு செயற்திட்டமும் தற்போதுவரை முன்வைக்கப்படவில்லை.
இவ்வாறானதொரு சூழ்நிலையில் விவசாயிகள் உள்ளடங்கலாக ஒட்டுமொத்த நாட்டுமக்களினதும் நலனை முன்னிறுத்திய, அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட, நிலைபேறான விவசாய செயற்திட்டமொன்றை முன்னெடுக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கின்றது என்று அவர் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM