(நா.தனுஜா)
அருட்தந்தை சிறில் காமினியைக் கைதுசெய்து, இந்நாட்டின் கத்தோலிக்கப்பிரஜைகள் உள்ளடங்கலாக ஒட்டுமொத்த மக்களையும் அடக்குவதற்கு அரசாங்கம் முற்படுமேயானால் அது மிகப்பெரிய தவறாகும்.
அருட்தந்தை சிறில் காமினியைக் கைதுசெய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால், அதனைத் தடுப்பதற்கான மாபெரும் அரணாக ஐக்கிய மக்கள் சக்தி தொழிற்படும் என்று அக்கட்சியின் உறுப்பினர்களான ஹர்ஷன ராஜகருணா மற்றும் ஹெக்டர் அப்புஹாமி ஆகியோர் கூட்டாகத் தெரிவித்துள்ளனர்.
கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைக்காரியாலயத்தில் நேற்று வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர்கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டனர்.
ஊடகவியலாளர் சந்திப்பில் முதலில் கருத்து வெளியிட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி கூறியதாவது,
தற்போதைய அரசாங்கம் மக்களின் ஜனநாயக உரிமைகளை அடக்கி, அவர்களின் குரல்வளையை நசுக்கி, எதேச்சதிகாரப்போக்கில் நாட்டை ஆட்சிசெய்துவருகின்றது. அண்மையகாலத்தில் கருத்துச்சுதந்திரம் முழுமையாக இல்லாமல்போயுள்ளது.
நாட்டில் நிலவும் பிரச்சினை தொடர்பில் எவரேனும் கருத்து வெளியிட்டால், பாதுகாப்புப்பிரிவினர் அதுகுறித்து உரியவாறு விசாரணைகளை முன்னெடுப்பதற்குப் பதிலாக அக்கருத்தை வெளியிட்டவரை விசாரணைகளுக்கு உட்படுத்தி, அச்சுறுத்தும் விதமாக செயற்படுகின்றனர்.
இத்தகைய செயற்பாடுகளை அரசாங்கம் உடனடியாக நிறுத்திக்கொள்ளவேண்டும் என்று வலியுறுத்தும் அதேவேளை, அருட்தந்தை சிறில் காமினிக்கு ஆதரவாக நாமனைவரும் வீதிகளில் இறங்கிப்போராடத்தயாராக இருக்கின்றோம் என்பதையும் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
உயிர்த்த ஞாயிறுதினப்பயங்கரவாதத்தாக்குதல்கள் தொடர்பில் அருட்தந்தை சிறில் காமினியினால் வெளியிடப்பட்ட கருத்துக்கள், பாராளுமன்றத்தில் ஆற்றப்பட்ட உரைகளை அடிப்படையாகக் கொண்டவையாகவே அமைந்திருந்தன. அவர் வெளியிட்ட கருத்துக்களை அடிப்படையாகக்கொண்டு அடுத்தகட்ட விசாரணைகளை மேற்கொள்வதற்குப் பதிலாக அருட்தந்தை சிறில் காமினியைக் கைதுசெய்து, இந்நாட்டின் கத்தோலிக்கப்பிரஜைகள் உள்ளடங்கலாக ஒட்டுமொத்த மக்களையும் புறக்கணிப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்குமேயானால் அது மிகப்பெரிய தவறென்பதை அவர்களுக்குச் சுட்டிக்காட்டுகின்றோம்.
அதேவேளை அருட்தந்தை சிறில் காமினியுடன் மாத்திரமன்றி, உண்மையைத்தேடும் அனைத்து பாதிரிமார்கள் மற்றும் மக்களுக்கு நாம் முழுமையாக ஆதரவை வழங்குவோம் என்பதுடன் அவர்களுடன் எப்போதும் ஒருமித்து நிற்பதற்கும் தயாராகவுள்ளோம்.
நாட்டில் குண்டுவெடிப்புச்சம்வமொன்று இடம்பெற்றால், அதுகுறித்து உரியவாறு விசாரணைகளை மேற்கொண்டு, குற்றவாளிகளுக்குத் தண்டனையை வழங்குவதுடன் மீண்டும் அவ்வாறான சம்பவம் இடம்பெறாமல் தடுப்பதே அரசாங்கத்தின் பொறுப்பாகும். அதன்படி உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரிகள் யார்? என்பதே சிறில் காமினி உள்ளிட்ட கத்தோலிக்க மதத்தலைவர்களினதும் நாட்டுமக்களினதும் ஒரேயொரு கேள்வியாக இருக்கின்றது.
அதற்குப் பதிலை வழங்குவதற்கும் உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை முழுமையாகப் பகிரங்கப்படுத்தி, அதில் குற்றவாளிகளாக அடையாளங்காணப்பட்டவர்களுக்குத் உரிய தண்டனையை வழங்குவதற்கும் அரசாங்கம் தயாராக இருக்கின்றதா? இத்தாக்குதல்களின் பின்னணியில் பாரிய சதித்திட்டமொன்று இருப்பதாக முன்னாள் சட்டமா அதிபர் கூறினார். அதுபற்றி விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, உண்மைகள் வெளிப்படுத்தப்பட்டனவா?
அதேபோன்று உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல்களையொத்த பிறிதொரு பயங்கரவாதத்தாக்குதல் நாட்டில் இடம்பெறப்போவதாகவும் அதற்குரிய ஆயுதங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்கள் தனக்குத் தெரியும் என்றும் கலகொட அத்தே ஞானசாரதேரர் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் பகிரங்கமாகக்கூறினார்.
அதுகுறித்து அவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டனவா? ஆனால் இன்றளவிலே 'ஒரே நாடு, ஒரே சட்டம்' என்ற சட்டவரைபைத் தயாரிப்பதற்கான செயலணியின் தலைவராக அவர் நியமிக்கப்பட்டிருக்கின்றார். நாட்டையும் மக்களையும் நேசிக்கின்ற பெருமளவான பௌத்த தேரர்களும் மதத்தலைவர்களும் எமது நாட்டில் இருக்கின்றார்கள்.
அவர்களை முன்னிறுத்தி இச்செயலணியை உருவாக்கியிருக்கலாம். அதுமாத்திரமன்றி சிங்கள, தமிழ், முஸ்லிம் மற்றும் கத்தோலிக்கர்கள் உள்ளிட்ட அனைத்து இனத்தவரும் இந்நாட்டில் வாழக்கூடிய சூழலை உறுதிப்படுத்தும் வகையிலேயே சட்டங்கள் இயற்றப்படவேண்டும். ஆனால் அதற்கு மாறாக 'ஒரே நாடு, ஒரே சட்டம்' என்ற கொள்கையின் மூலம் இனங்களுக்கிடையே பிளவுகளை ஏற்படுத்தி, முரண்பாடுகளைத் தோற்றுவிப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்குமானால் அது மிகமோசமான பாவச்செயலாகும் என்று குறிப்பிட்டார்.
அவரைத்தொடர்ந்து கருத்து வெளியிட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா கூறியதாவது,
உயிர்த்த ஞாயிறுதினப்பயங்கரவாதத்தாக்குதல்கள் தொடர்பில் அருட்தந்தை சிறில் காமினி வெளியிட்ட கருத்துக்களுக்காக அவர் குற்றப்புலனாய்வுப்பிரிவிற்கு அழைக்கப்பட்டு, விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு அசௌகரித்திற்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றார். அவர் கூறிய அதே கருத்துக்களை நானும் கூறுகின்றேன்.
முடியுமானால் என்னைக் குற்றப்புலனாய்வுப்பிரிவிற்கு அழைக்குமாறும் கைதுசெய்யுமாறும் சவால்விடுகின்றேன். இத்தாக்குதல்கள் தொடர்பில் உரியவாறு விசாரணைகளை மேற்கொண்டு நீதியை நிலைநாட்டுமாறு வலியுறுத்துகின்றோமே தவிர, அதற்கெதிராக வீதிகளுக்கு இறங்கவேண்டும் என்றோ அல்லது பழிவாங்கவேண்டும் என்றோ கூறவில்லை.
ஒருபுறம் கத்தோலிக்கர்கள் செறிந்துவாழும் பகுதிகளை அரச உடைமையாக்கிக்கொள்வதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுவரும் அதேவேளை, மறுபுறம் கத்தோலிக்கர்களைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற சிறில் காமினி போன்றவர்கள்மீது அடக்குமுறையைப் பிரயோகிக்கும் நடவடிக்கைகளும் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுகின்றன.
இத்தகைய அடக்குமுறைகள் மூலம் இன மற்றும் மதவாதமே போஷிக்கப்படும். நாம் அதற்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என்று தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM