தற்காலத்தில் நாற்பது வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கும், பெண்களுக்கும் முதுகு வலி மற்றும் கழுத்து வலி ஏற்படுவது சாதாரணமாகிவிட்டது. இதற்கு காரணம் எலும்பு தேய்மானம் என்று கூறுவர். இதனை தடுக்க இயலாதா? என்று ஒரு பிரிவினரும், இதனை வராமல் தற்காத்துக் கொள்வது எப்படி? என்று மற்றொரு பிரிவினரும் கேட்பார்கள்.

எலும்புக்கு வலுவூட்டுவது கல்சியம் என்னும் தாதுசத்து. இந்த சத்தை நாம் எம்முடைய உடலில் குறையாமல் பார்த்துக்கொண்டால் எலும்பு தேய்மானம் ஏற்படாது. அலட்சியப்படுத்தினால் உடலில் கல்சியத்தின் அளவு குறைந்து எலும்பின் வலு குறையும். இதனால் எலும்பு முறிவு கூட ஏற்பட வாய்ப்புண்டு.

ஓஸ்டியோபோரோஸிஸ் என்னும் எலும்பு புரை நோய், எலும்பை உருக்குவதோடு மட்டும் நிற்காமல் கழுத்து மற்றும் முதுகு வலியையும உருவாக்கும். இந்த நோய் ஆண்களைக் காட்டிலும் பெண்களையே அதிகம் பாதிக்கிறது. குறிப்பாக மாதவிடாயின் இறுதி நாட்களின் போது அதாவது மெனோபாஸ் அடையும் காலகட்டத்தில் பெண்களை இது அதிகமாக பாதிக்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. இதற்கான அறிகுறிகளை உணர்ந்த உடனே இதற்கான தடுப்பு முறைகளில் நாம் கவனம் செலுத்தவேண்டும். 

இந்நோயால் பாதிக்கப்பட்டால், வாரத்தில் 5 முதல் 6 நாட்கள் வரை உடற்பயிற்சி செய்யவேண்டும். அதிலும் வாரத்திற்கு 3 முறையாவது ஏரோபிக்  மற்றும் உடலை வலுப்படுத்தும் பயிற்சியை தொடர்ச்சியாக 30 நிமிடமாவது செய்யவேண்டும்.

உணவில் உப்பை குறைத்துக்கொள்ளவேண்டும். ஏனெனில் உணவில் உப்பை அதிகம் சேர்ப்பதால், அது சிறுநீர் மற்றும் வியர்வையின் மூலம் வெளியேற்றும் கல்சியத்தின் அளவை அதிகரிக்கிறது. இதனால் உடலில் தேவையான அளவை விட கல்சியம் சத்து குறையும் நிலை உருவாகும். அதன் காரணமாக எலும்பு தேய்மானம் அடையும்.

அதேபோல் விற்றமின் டி, உடல்  கால்சியத்தை உறிஞ்சுவதற்கு பெரிதும் உதவி செய்கிறது. இத்தகைய விற்றமின் டி சத்தை சூரிய ஒளியின் மூலம் அதிகமாக உற்பத்தியாகிறது. அத்துடன் பால், ஓரஞ்சு மற்றும் காலை உணவுத் தானியங்களிலும் விற்றமின் டி அதிகமாக இருக்கிறது.

அதேசமயத்தில் சில மருந்துகள் இத்தகைய பாதிப்புகளை உருவாக்குகின்றன. மருத்துவர்களின் கண்காணிப்பு மற்றும் பரிந்துரை இல்லாமல் எந்த ஒரு மருந்து மாத்திரைகளையும் தொடர்ச்சியாக பயன்படுத்தாதீர்கள்.

சிலருக்கு என்று இல்லாமல் அனைவருக்கும் பொருந்தகூடிய மற்றொரு அம்சம், புகை மற்றும் மதுவை முற்றாக தவிர்க்கவேண்டும். இவையிரண்டும் உடலில் உள்ள கல்சியம் அளவை சீர்குலைத்து, ஈஸ்ட்ரோஜன் எனும் எலும்பை வலுவாக்கும் ஹார்மோன்களின் சுரப்பியையும், சுரப்பியின் செயல்பாட்டையும் கட்டுப்படுத்துகிறது.

எனவே மேற்கண்ட விடயங்களில் கவனமுடன் செயல்பட்டால் 40 வயது முதல் ஆயுள் உள்ளவரைக்கும் முதுகு வலி மற்றும் கழுத்து வலி இல்லாமல் ஆரோக்கியமாக இருக்கமுடியும்.

டொக்டர் ராஜ்கண்ணா M.S.,

தொகுப்பு  அனுஷா.

தகவல் : சென்னை அலுவலகம்