இலங்கையின் நிலைமாற்று நீதி பொறிமுறை : நேபாளத்திலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்

05 Nov, 2021 | 04:09 PM
image

இலங்கையின் 30 வருட போருக்கு பின்னரான காலகட்டத்தை போலவே, நேபாள அரசும் தனது ஓர் தசாப்த கால உள்நாட்டுப்போரின் விளைவுகளையும் சிக்கல்களையும் போர் முடிவுக்கு வந்து 15 வருடங்களாகியும் இன்னும் தீர்க்க முடியாது போராடிக்கொண்டிருக்கின்றது.

நேபாள அரசுக்கும் அந்நாட்டின் மாவோயிச சித்தாந்தத்தை பின்பற்றும் நேபாள கம்யூனிசக்கட்சியின் கெரில்லா போராளி அமைப்பிற்கிடையில் 1996 இலிருந்து 2006 வரை ஒரு தசாப்தகால உள்நாட்டு யுத்தம், ஆயிரக்கணக்கான மக்களின் உயிரிழப்புக்களுடனும் வலிந்து காணமலாக்கப்பட்டோரும் பல மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களுடன் ஓர் முடிவுக்கு வந்தது.

நேபாளத்தில் ஓர் நிலையான, சமாதானத்தையும் அமைதியையும் நிலைநாட்ட முடியாமலிருப்பதற்கு முக்கிய காரணம் அங்குள்ள போரால் பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்களின் வலிகளையும்இ காணமலாக்கப்பட்டோர் தொடர்பான எந்த விசாரணைகளும் நீதியையோ அல்லது பரிகாரங்களையோ வழங்கவில்லை என்பதாகும்.

காணாமல் போனவர்களின் சர்வதேச ஆணையத்தின்படி, 1996-2006 போரில் 10,000 க்கும் அதிகமானோர் இறந்தனர் மற்றும் 1,300 க்கும் அதிகமானோர் மாவோயிஸ்ட் கெரில்லாக்களுக்கும் அரசாங்கப் படைகளுக்கும் இடையிலான பத்து ஆண்டுகால மோதலின் போது காணாமல் போயுள்ளனர்.

ஏப்ரல் 2014 இல், நேபாளம் கடுமையான விமர்சனங்களுக்கு மத்தியில் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு மற்றும் வலுக்கட்டாயமாக காணாமல் போனவர்களை விசாரிக்கும் ஆணையத்தை உருவாக்குவதை கட்டாயப்படுத்தும் ஒரு நிலைமாறுகால நீதி அரசியலமைப்பு திருத்தங்களை நிறைவேற்றியது.

நேபாள மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்புகள், அச்சட்டங்களில் உள்ள குறைபாடுகளைமிகக்கடுமையாக விமர்சித்தன. அவற்றில் முக்கியமானது மோதலின் போது நிகழ்த்தப்பட்ட பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்பிலான விசாரணைக்கு எதிரான நிறுவனமயப்படுத்த சார்புநிலை காணப்படுகின்றது என்பதாகும்.

2019, பெப்ரவரி 9 இல் முடிவுறுத்தும் வகையில் அமைக்கபட்ட இந்த இரு நிலைமாற்று நீதிபொறிமுறைகள் ஐந்து வருடங்கள் கடந்தும் உருப்படியான ஒரு விசாரணையைக்கூட முழுமையாக மேற்கொண்டு நீதியை நிலைநாட்ட முடியாமல் போனது. சர்வதேச அழுத்தங்களுக்கு அடிபணிந்து, தற்போதைய அரசு, இன் நிறுவனங்களின் ஆயுட்காலத்தை மேலும் ஒரு வருடத்திற்கு நீடித்துள்ளது.

நேபாள சிவில் சமூகத்தினாலும் பாதிக்கப்பட்ட மக்களாலும் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகிய நிறுவனங்கள் தொடர்பில் 2015 இல் வழங்கப்பட்ட ஓர் தீர்ப்பான மனித உரிமை மீறல் சம்பவங்களில் குற்றமிழைத்தவர்களுக்கு அரச போது மன்னிப்பு வழங்குவதற்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட தடையை மீளாய்வு செய்வதற்கு நேபாள அரசு முயற்சித்தபோது அந்நாட்டின்  உயர் நீதிமன்றம் அதனை தள்ளுபடி செய்தது. 

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் தொடர்பான உயர் ஸ்தானிகர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை வரவேற்றுள்ளார். போரால் பாதிக்கப்பட்ட நேபாள மக்களும் ஆண்டுகள் கடந்த பின்னரும் காணாமலாக்கப்பட்டவர்களை தேடும் உறவுகளும் இந்த பொறிமுறைகள் மீது நம்பிக்கையிழந்து நிற்கின்றனர். உலகிலேயே ஈராக்கிற்கு அடுத்தபடியாக குறைந்தது 60,0000 பேர் பலவந்தமாக காணாமல் போனவர்களின் எண்ணிக்கையில் இலங்கை இரண்டாவது இடத்தில் உள்ளது.

பல அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் கடந்த இரண்டு வருடங்களிற்கு மேலாக வீதியோரத்தில் கூடாரம் அமைத்து போராடிவரும் வட-கிழக்கில் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள், போர் முடிவிற்கு வந்து 11 வருடங்கள் கடந்தும் நீதியையும் உண்மையையும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். 2017 மார்ச்சில் தொடங்கபட்டதிலிருந்து, இதுவரை சுமார் 70க்கும் மேற்பட்ட வயது முதிர்ந்த பெற்றோர், தங்கள் பிள்ளைகளுக்கு என்ன நடந்ததென்பதை அறியாமலே காலமாகியுள்ளனர்.

கடந்த வாரம் (ஒக்டோபர் 28), முல்லைத்தீவில் 1696 நாட்களை கடந்து செல்லும் போராட்டத்தின் பகுதியாக காணமலாக்கப்பட்ட உறவுகள் ஓர் வீதியோர பேரணியொன்றை நடத்தினர். பெண் தலைமைத்துவக்குடும்பங்களினாலும் தாய்மார்களினாலும் நடத்தப்படும் இப்போராட்டத்தில் அவர்கள் கேட்டுகொண்டது என்னவென்றால் தங்கள் அன்புக்குரியவர்களுக்கு என்ன நடந்தது என்ற உண்மையை வெளிப்படுத்தி நீதியை பெற்றுத்தர வேண்டும் என்பதாகும்.

“எங்களுக்கு அரசாங்கத்தின் விசேட சலுகைகளோ அல்லது வாழ்வாதார உதவிகளோ முக்கியமில்லை. எமது ஒரே கோரிக்கை எங்கள் உறவுகளுக்கு என்ன நடந்தது என்ற உண்மையை கூறி நீதியை பெற்றுத் தருவதே ஆகும்.

இலங்கை அரசு எமக்கு நீதியை பெற்றுத்தரும் என்று நாம் கனவிலும் நம்பவில்லை. சர்வதேசத்தின் ஈடுபாட்டுடன் இடம்பெறும் ஓர் சர்வதேச விசாரணையே எமக்கான விடைகளை பெற்றுத்தரும் என்று நாம் உறுதியாக நம்புகிறோம்,” என்று 19 வயதில் போரின் இறுதிகட்டத்தில் அரச இராணுவ படைகளிடம் தனது மகனை ஒப்படைத்த ஓர் தாய் கூறியிருந்தார்.

வயோதிப காலத்தில் ஆரம்பத்தில் இருக்கும் அவர் தனது இறுதி ஆசை என்று கூறியதெல்லாம் தான் இறப்பதற்கு முன்னர் தனது கரங்களால் ஒப்படைத்த தனது மகனுக்கு என்ன நடந்தது என்பதை தெரிந்துகொள்வதுதான்.

இவ்வாறு பல தாய் தந்தையர் மற்றும் உறவுகள் தங்கள் அன்புக்குரியவர்களுக்கு என்ன நடந்தது தொடர்பில் பல கேள்விகளுக்கு பதில் தெரியாது தமது நாளாந்த வாழ்க்கை சீவியத்தினை பாரிய பொருளாதார, மன நெருக்கடிகளுக்கு மத்தியில் கொண்டு செல்கின்றனர்.

கடற்படை ஒட்டுக் குழுவினால் கடத்தப்பட்ட 11 தமிழ் மாணவர்கள் விவகாரம்

 2008 இல் கொழும்பின் பல்வேறு பகுதிகளில் இலங்கை கடற்படையை சார்ந்த ஓர் ஒட்டுக்குழுவினால் கப்பம் கோரும் நோக்கில் காணாமலாக்கப்பட்ட 11 தமிழ் மாணவர்கள் தொடர்பான வழக்கில் அண்மையில் நிகழ்ந்த மாற்றமானது, இலங்கையின் சட்டதிட்டங்களுக்கு அமைவாக பாதிக்கப்பட்டோர் நீதியை பெற்றுக்கொள்வது சாத்தியமில்லை என்பதை கட்டியம் கூறுவதாக அமைகின்றது.

இக்கடத்தல்கள் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் கடற்படை தளபது அட்மிரல் வசந்த கரன்னாகொடவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் எதுவும் முன்வைக்கப்பட மாட்டாது என ஒக்டோபர் 13ஆம் திகதி சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினம் கொழும்பு நிரந்தர உயர் நீதிமன்ற விசாரணை மன்றத்திற்கு அறிவித்திருந்தார்.

மேலும் ஓர் இரகசிய அறிக்கையின் அடிப்படையில் அட்மிரல் கரன்னாகொடவுக்கு எதிரான குற்றச்சாட்டை கைவிட தீர்மானித்துள்ளதாக நவம்பர் முதலாம் ஆம் திகதி சட்டமா அதிபர் திணைக்களம் மேன்முறையீட்டு நீதிமன்றில் தெரிவித்தது. இந்த அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் சட்டமா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக, காணமலாக்கப்பட்ட மாணவர்களின் உறவுகள் உயர் நீதிமன்ற வளாகத்தொகுதிக்கு முன்பாக கடந்தவாரம் ஓர் ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருந்தனர்.

காணாமலாக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களில் ஒருவரான திருமதி சரோஜினி நாகநாதன், தனது 21 வயது மகன் மருத்துவம் படிக்க வெளிநாடு செல்வதற்கு தயாராக இருந்த நிலையில் கடத்தப்பட்டதாகவும் இவ்வாறு கடற்படை ஒட்டுக்குழுவினால் நடாத்தப்பட்ட கடத்தல்கள் தொடர்பில் அப்போதைய கடற்படை தளபதி கரன்னகொடவுக்கு தெரிந்திருக்கையில் அவர் வழக்கிலிருந்து விடுவிக்கப்படுவது என்னவிதத்தில் நியாயம் என்று கேள்வி எழுப்பினார்.

தனது மகன் கடத்தப்பட்டு திருகோணமலைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர், மகனை விடுவிக்க ரூபா பத்து லட்சம் கப்பமாக கேட்கப்பட்டதாகவும் ஒரே ஒரு முறை தனது மகனுடன் தொலைபேசி மூலம் பேசியபோது அப்பணத்தை கொடுக்க வேண்டாம் என்று மகன் கூறியதையும் அவர் கண்ணீருடன் நினைவு கூர்ந்தார். 

இதுவரை காலமும் நீதிமன்றத்தில் நடைபெற்ற குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் விசாரணைகளின் பிரகாரம் தன மகன், கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று நம்பும் அவர், தன் மகனின் கொலைக்கு காரணமானோர் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு நீதி வழங்கப்படவேண்டுமென்று கூறுகிறார்.

காணாமல் போனோர் அலுவலகம் (OMP) அலுவலகத்தின் மீதான நம்பிக்கையின்மை 

2016 இல் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தினை நிராகரிப்பதாக காணமலாக்கப்பட்டோரின் உறவுகள் உறுதியாக தெரிவித்து வந்திருந்தனர். அதற்கு அவர்கள் முன்வைத்த காரணமானது, இந்நிறுவனம் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் தங்களின் பரிந்துரைகளை பெற அரசு முயலவில்லை என்பதுடன், அது சுதந்திரமான விசாரனைகளை நட்டத்துவதற்கு போதுமான சட்ட வலுவின்றி காணப்படுவது என்பதாகும்.

சர்வதேச அழுத்தங்களிற்கு முகம் கொடுக்கும் வகையில் ஓர் ‘வெள்ளையடிக்கும் முயற்சியாகவே’ அவர்கள் இந்நிறுவனத்தை கருதுவதாகவும் தெரிவித்தனர். கடந்த அரசின் ஆட்சிக்காலத்தில் காணமாலக்கப்பட்டோரின் உறவுகளுக்கு மாதாந்த உதவித்தொகையாக ரூபா ஆறாயிரம் வழங்கப்படுவதாக குறிப்பிட்டுள்ள போதும் உறவுகளின் கடுமையான எதிர்ப்பின் பின் அத்திட்டம் கைவிடப்பட்டது. இது தொடர்பில் காணமாலக்கப்பட்டோரின் உறவுகள் அழுத்தம், திருத்தமாக பதிவு செய்தது என்னவெனில் தமது பிரதான கோரிக்கை என்பது நீதியே தவிர உதவித்தொகையோ அல்லது வாழ்வாதார உதவிகளோ அல்லது என்பதாகும்.

இதுவரை OMP யானது எந்தவொரு காணமலாக்கப்படோர் தொடர்பான கோவையை முழுமையாக விசாரணைக்குட்படுத்தி நீதியையோ அல்லது என்ன நடந்தது என்ற உண்மையையோ கொண்டுவர முடியவில்லை என்பது இதன் தோல்வியை எடுத்துக்காட்டுகின்றது.

புதிய அரசு 2019 இல் பொறுப்பேற்றதன் பின்னர் நியமிக்கப்பட்ட நீதிபதி உபாலி அபேரத்ன தலைமையிலான நிறுவனம் குறிப்பிடத்தக்களவு எதனையும் இதுவரை செய்யவில்லை என்பது, இந்நிறுவனம் காணமாலக்கப்பட்டோர் தொடர்பில் எவ்வளவு கரிசனையுடன் இயங்குகிறது என்பதை குறிக்கின்றது.

- ச.ரூபதீசன்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right