ம.ரூபன்
ஒரே நாடு,ஒரே சட்டம் என்ற செயலணியின் தலைவராக பொதுபல சேனாவின் செயலாளர் அத்தே ஞானசார தேரரை ஜனாதிபதி நியமித்ததை பலரும் கண்டித்துள்ளனர்.
அவர் சட்டத்தை மதித்து எப்படி நடந்துகொண்டார் என்பதை சகலரும் அறிவர். தேர்தல்களில் பிக்குமாருக்கு வாக்களிக்காதீர்கள் எனவும், ஆட்சியாளர்களுக்கு பிக்குமார் தர்ம உபதேசம் செய்யலாம் எனவும் மிகிந்தலை விகாராதிபதி கலாநிதி வ.தர்மரத்தின தேரர் கூறியிருந்தார்.
அத்துரலிய தேரர் தனது எம்.பி.பதவியை ராஜினாமா செய்ய மறுக்கிறார். பிக்குமார் பௌத்த மத விடயங்களில் மட்டுமே தமது கவனத்தை செலுத்தவேண்டும். அரசியல் தலைவர்களுக்கும்,மக்களுக்கும் பௌத்த தர்மங்களை கூறி நல்வழிப்படுத்த வேண்டுமே தவிர ஆட்சியில் மூக்கை நுழைத்தால் நாட்டுக்கும் ஆட்சிக்கும் ஆபத்து என்று 60 ஆண்டுகளுக்கு முன்பே பிரதமர் சேர் ஜோன் கொத்தலாவலை எச்சரித்ததை பின்னரான காலத்தில் காணமுடிகிறது.
1954 இல் யாழ். கொக்குவில் இந்துக்கல்லூரி வரவேற்பில், இது (ஒரே நாடு) தமிழ்,சிங்கள, முஸ்லிம்கள் (ஒரே நாட்டு) பிரஜைகள் எனவே சிங்களத்துக்கும், தமிழுக்கும் சம அந்தஸ்து வழங்கப்படும் என்று அவர் கூறியிருந்தார்.
தனது தொடங்கஸ்லந்த தொகுதிக்கு சென்றபோது பிக்குமார் அவருக்கு எதிராக கோஷங்களை எழுப்பி, பௌத்த சிங்கள நாடு (ஒரே நாடு). தமிழுக்கு சம அந்தஸ்தா?. சிங்கள மொழி எமது மொழி (ஒரே சட்டம்) என விமர்சித்து துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தபோது, துணிந்த பிரதமர் கொத்தலாவல இராணுவ மிடுக்கோடு,வீதியில் வைத்தே பிக்குமாரை கண்டித்தார்.
பௌத்த விவகாரங்களை மட்டும் பார்ப்பதே உங்கள் பணி. அரசியல் விவகாரங்களில் வீணாக தலையிடாதீர்கள்! அது நாட்டுக்கே ஆபத்து என்றார்.பண்டாரநாயக்கா கொலையில் அதனை காணமுடிந்ததாக பின்னர் கூறினார்.
குறிப்பிட்ட 1959 செப்டம்பர் 25 பிரதமர் பண்டாரநாயக்கா சுடப்பட்டு மருத்துவமனையில் இருந்தபோது கொத்தலாவலை பார்வையிட்டு,ஒரு நாயை கட்டியே வளர்க்கவேண்டும். பண்டாரநாயக்கா அவிழ்த்துவிட்டார்,கடித்துவிட்டது என்று புத்தரகித்த தேரர்,சோமராம தேரர் குறித்து கூறியிருந்தார்.களனி விகாரையின் பிரதம குருவான புத்தரகித்த தேரர் 1956 தேர்தலில் பண்டாராநாயக்காவின் வெற்றிக்காக பல லட்ச ரூபாவை செலவிட்டவர்.
இத்தேர்தலில் யக்கடுவ பரஞானராம தேரர்,வல்பொல ராகுல தேரர்,பத்தேகம விமல வன்ச தேரர், ஹெப்பிட்டிகெதர ஞானசிக தேரர்,மப்பிட்டிகம புத்தரகித்த தேரர் ஆகியோர் தலைமையிலான எக்சத் பிக்கு பெரமுன ( ஐக்கிய பிக்கு முன்னணி)என்ற பிக்குமார் அமைப்பு தெற்கில் வீடு வீடாக பிரசாரம் செய்து அவரின் வெற்றிக்காக பாடுபட்டனர்.பண்டாரநாயக்கா பதவிக்கு வந்ததும்,சீனி இறக்குமதி ஒப்பந்தத்தை தருமாறு புத்தரகித்த தேரர் கேட்டார்.
பிரதமர்அதனை நிராகரித்து வர்த்தக அமைச்சரின் கீழ் உள்ளதை தனியாருக்கு வழங்கமுடியாது என்றார்.பிரதமரின் படுகொலைக்கு புத்தரகித்த தேரர் சதி செய்ய இதுவே காரணம்.
பௌத்த நாடு என்பதால் மரண தண்டனை நீக்கப்பட்டிருந்தது. பிரதமரின் படுகொலையை தொடர்ந்து மீண்டும் தூக்கு தண்டனை அமுலுக்கு வந்தது.
விசாரணையில் இரு பிக்குமாருக்கும் மரண தண்டனை தீர்ப்பு.பிக்குகள் என்பதால் ஆயுள் தண்டனையாக்குமாறு பலரும் அரசிடம் கேட்டனர்.ஆனால் பிரதமர் தகநாயக்கா ஒரே நாடு,ஒரே சட்டம், கொலைக்குற்றவாளி யார் என்றாலும் தூக்குத்தண்டனையே அதனை மாற்றமுடியாது என்றார்.சோமராம தேரருக்கு தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டது.இலங்கை வரலாற்றில் ஒரு பௌத்த பிக்கு தூக்கிலிடப்பட்டது இதுவே முதல் தடவை.
1958 ஏப்ரல் 9 பண்டா- செல்வா ஒப்பந்தத்தை கிழித்து எறியுமாறு இருநூறுக்கும் மேற்பட்ட பிக்குமார் றோஸ் மீட் பிளேஸ் இல்லம் முன்பாக சத்தியாக்கிரகம் இருந்தபோது புத்த ரகித்த தேரரும் முக்கியமானவர்.(ஒரே நாடு,ஒரே சட்டம்).இவ்வொப்பந்தம் நாட்டை பிரிக்கும் என்று கோசமிட்டனர்.பிரதமர் ஒப்பந்தத்தை எடுத்து வந்து அவர்களின் முன்பாகவே கிழித்து எறிந்தார். அதனை உறுதிப்படுத்திய கடிதத்தை தரும்படியும் அடம்பிடித்தனர்.
1958 ஜூன் தமிழர்களுக்கு எதிராக கட்டவிழத்து விடப்பட்ட வன்முறைகளிலும் பௌத்த பிக்குகளே முக்கிய பங்கு வகித்தனர்.வாகனங்களில் மஞ்சள் அங்கி அணிந்து சென்று,வன்முறையின்போது அங்கியை கழற்றி வைத்து விட்டு சென்றனர் என சிங்கள பத்திரிகையாளர் தார்சி வித்தாச்சி தனது Emergency '58 என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.கைதான பிக்குமார் மேலிடத்தின் உத்தரவால் விடுவிக்கப்பட்டனர்.
1961 பிரதமர் சிறிமாவோ ஆட்சியில் அரச நன்கொடை பெறும் கத்தோலிக்க,கிறிஸ்தவ பாடசாலைகளை அரசு சுவீகரிக்கவேண்டும் , வெளிநாட்டு கிறிஸ்தவ துறவிகளை நாட்டை விட்டு வெளியேற்றுமாறும்,அரச மருத்துவ மனைகளில் பணிபுரியும் அருட்.சகோதரிகளை நீக்குமாறும் பௌத்த காங்கிரஸ் உட்பட சில பௌத்த பிக்குகளும் வலியுறுத்தியதால் அவர் அவற்றை செயற்படுத்தினார்.இன்று கல்வித்துறை பாதிக்கப்பட்டுள்ளது.
1965 இல் ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியில் சனி,ஞாயிறு தினங்களை வேலை நாட்களாக மாற்றி போயா,பிறி போயா தினங்களை விடுமுறை தினங்களாக்குமாறும பல பௌத்த பிக்குகள் விடுத்த கோரிக்கையை பிரதமர் டட்லி சேனாநாயக்கா நடைமுறைப்படுத்தினார்.இதனால் வெளிநாட்டு வர்த்தக நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து மீண்டும் சனி,ஞாயிறு விடுமுறை தினங்களாக மாற்றப்பட்டன.
1966 ஐக்கிய தேசிய கட்சி ஆட்சிக்கு எதிரான சதிப்புரட்சி முயற்சி தொடர்பில் இராணுவத்தளபதி ரிச்சார்ட் உடுகமவுடன் இரத்தினபுரி சிறி சுமன பிரிவினாவின் ஹென்பிட்டகெதர ஞானசிநாயக்க தேரரும் கைதானார்.வழக்கு விசாரணையின் பின் விடுதலையானார்.இவரது கைது படங்கள் பத்திரிகைகளில் முன்பக்கம் வெளிவந்தன.
1968 ஜனவரி 8 தமிழ் மொழி விசேட மசோதா கொண்டுவரப்பட்டதை எதிர்த்து கம்யூனிஸ்ட்,சம சமாஜ சுதந்திரக் கட்சிகள் கொழும்பில் நடாத்திய ஆர்ப்பாட்ட ஊர்வலத்தை கொள்ளுப்பிட்டி சந்தியில் கலைப்பதற்கு பொலிசார் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் தம்பரராவ தேரர் பலியானார். கொழும்பு பொலிஸ் அத்தியட்சகர் ஐவர் வாண்டுவெஸ்ற் என்ற பறங்கியர் ஊர்வலத்தில் பிக்குமார் என்றும் பார்க்காது ( ஒரே நாடு,ஒரே சட்டம்) சுடுமாறு உத்தரவிட்டார்.
கொள்ளுப்பிட்டி சந்தியில் (அமெரிக்க தூதரகம் அருகில்) அவரது நினைவு தூபி உள்ளது.பிக்குவின் மரணத்தால் ( S.P) வான்டுவெஸ்ற் பணி நீக்கப்பட்டார்.பிக்குவின் மரணத்துக்கு காரணமானவர்,என்று குற்றம் சாட்டிய சுதந்திரக்கட்சி 1970 இல் பதவிக்கு வந்ததும் அவருக்கு பிரதி பொலிஸ் மா அதிபர் பதவி உயர்வும் வழங்கியது.நேர்மையான அதிகாரி என்று புகழ்ந்தனர்.
1965 ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியில் திருகோணமலை பிரட்ரிக் கோட்டை கோணேஸ்வரர் ஆலயத்தை புனித நகராக மாற்ற நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவை தயசாகர மகாநாயக்க தேரர் உட்பட பல பிக்குமார் பிரதமர் டட்லி சேனாநாயக்காவிடம் விடுத்த கோரிக்கையால் கலைத்தார்.
சுமேதங்கரநாயக்க தேரர் 29.06.1968 இல் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், திருமலையை ஆண்ட ராஜசிங்க மன்னனின் பிரதேசத்தில் இருந்த கோகண மகா விகாரை பகுதியே ஒல்லாந்தரால் பிரெட்ரிக் கோட்டை என பெயரிடப்பட்டது.
இதனை பௌத்தர்கள் அல்லாத பிறிதொரு சாரரிடம் ஒப்படைக்கவேண்டாம் எனக்கோரியிருந்தார்.1968 ஜனவரி 15 பிரதி உள்ளூராட்சி அமைச்சர் ஆர் பிரேமதாச சேருவாவில பௌத்த விகாரைக்கு வந்தபோது கோணேஸ்வரர் ஆலய புனித நகர் திட்டத்தை பிக்குமார் எதிர்த்தனர்.பிக்குமாரின் எதிர்ப்பால் அத்திட்டம் கைவிடப்பட்டது.
2017 ஒக்டோபர் 2 இல் அகதிகளாக வந்து தெகிவளையில் ( UNHCR) அகதிகளுக்கான ஐ.நா.உயர்ஸ்தானிகராலய பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்த 31 மியன்மார் றோகிங்யா முஸ்லிம்களை அக்மீமன தயாரட்ன தேரர் தலைமையில் சில குண்டர்கள் தாக்கினர்.இப்பிக்கு கல்கிசை நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.இதனை அமைச்சர் மங்கள சமரவீர கண்டித்தார். 2016 நவம்பர் 28 பிடியாணையில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்ட ராஜகிரிய பிக்குவின் மேன் முறையீட்டு விசாரணையில் சில பிக்குமார் பிரதம நீதியரசரும் இரு நீதியரசர்களும் வரும்போது எழுந்து நிற்கவில்லை.
நீதிமன்ற சம்பிரதாயங்களை மதித்து நடக்கவேண்டும் என பிரதம நீதியரசர் கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்துக்கு வெளியே ஆர்ப்பாட்டம் செய்தனர்.இச்சம்பவத்தை பிக்குமாரின் ஒரு பிரிவினரும்,ஜாதிக ஹெல உறுமய,சில அரசியல் கட்சிகளும் மகா சங்கத்தினரை அரசு அவமதிப்பும் வகையில் செயற்படுவதாக குற்றம் சுமத்தினர்.பிரதம நீதியரசருக்கு எதிராக விசாரணை நடத்தப்படவேண்டும் எனவும்,அவரது தீர்ப்புகளையும் விமர்சித் தனர்.
ஹோமக நீதிமன்றத்தில் ஞானசார தேரரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டதும் ராவண பலய அமைப்பின் சத்ததிஸ்ஸ தேரர்.
சிஹல ராவய அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரத்தின தேரர் உட்பட நான்கு பிக்குமார் நீதிமன்றத்தில் குழப்பம் செய்தனர்.பின்னர் கைதானார்கள்.
இதேபோல மட்டக்களப்பில் சுமண தேரர் பொலிசார் முன்பாக தமிழ் அரச அதிகாரிகளை மிரட்டுகிறார்.2016 இல் ருகுணு பல்கலைக்கழகத்தில் புதிய பிக்கு மாணவனை பாலியல் ரீதியாக பகிடிவதை செய்ததாக 16 சிரேஷ்ட பிக்கு மாணவர்கள் கைதானார்கள்.இதேபோல பிக்குமார் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு கைதாகும் சம்பவங்கள் இடம்பெறுகின்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM