இலங்கை கடந்த மூன்று தசாப்த காலங்களாக யுத்தத்தினை எதிர்கொண்டதொரு நாடு. குறிப்பாக சிறுபான்மை இனத்தமிழர்களது உரிமைகள் நசுக்கப்பட்ட போது அவர்களால் ஆயுதம் ஏந்தப்பட்டது.

இத்தகையதொரு உள்நாட்டுப் போர் காலகட்டத்தில் நசுக்கப்பட்டவர்களதும் விளிம்புநிலையினரதும் உரிமைகள் குறித்தும் அரசின் நசுக்கல்கள் மற்றும் போரின் பாதிப்புக்கள் குறித்தும் பல்வேறுப்பட்ட ஊடகங்களும் செய்திகளையும் கட்டுரைகளையும் வெளியிட்டன. 

இதன் நீட்சியாக பல ஊடகவியலாளர்கள் காணாமலாக்கப்பட்டனர், சித்திரவதைக்குள்ளாகினர், கொல்லப்பட்டனர், இன்னும் சிலர் அகதிகளாக புலம்பெயர்ந்து தம்முடையதும் தம்முடைய அன்பானவர்களதும் உயிர்களையும் காப்பாற்றிக்கொண்டனர். அபிவிருத்தி, வன்முறையற்ற தேர்தல், படிப்பறிவு என்பதெல்லாம் எப்படி ஓர் அரசின் வளாச்சியின் சுட்டியோ அவ்வாறே அரசின் நான்காவது தூணான ஊடகம் எதிர்கொள்கின்ற நேர்- மறை விடயங்களும் ஜனநாயகத்தின் சுட்டியே. 

அந்த வகையில் 1980- 2010 வரை தமது எழுத்திற்காக அழுத்தங்களை எதிர்கொண்டு புலம்பெயர்ந்த ஊடகவியலாளர்களும் ஜனநாயகத்தின் நேர்மையை கேள்விக்குள்ளாக்கின்றவர்களே.

இக்கட்டுரை அவ்வாறு புலம்பெயர்ந்த ஊடகவியலாளர்கள் எதிர்கொண்ட போர்க்கால அழுத்தங்கள் பற்றி விபரிக்கின்றது.

No description available.

ஊடகவியலாளர் நடராசா சரவணன்

ஊடகப் பணிக்குள் நுழைந்து இவ்வாண்டுடன் முப்பது ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. முதன் முதலில் விடிவு என்கிற சஞ்சிகையில் ஆசிரியர் குழுவில் ஒருவனாக பணியாற்றத் தொடங்கியது 1991 இல். 

ஆனால் அதற்கு முன்னரே 1990 இல் எனது Abbreviation 1000 என்கிற நூல் கொழும்பில் வெளியாகிவிட்டது. 1992 இல் இருந்து சரிநிகர் பத்திரிகையில் ஆசிரியர்களில் ஒருவனாக பணியாற்றத் தொடங்கினேன். 

2019 ஆம் ஆண்டு நான் நடத்தும் நமது மலையகம் என்கிற இணையத்தளத்துக்காக கனாதிபதி விருதை இலங்கையில் பெற்றுக்கொண்டேன். அது போல அதற்கு முந்திய வருடம் எனது கண்டி கலவரம் நூலுக்காக சாகித்திய விருதையும் பெற்றுக்கொண்டேன். 2021 ஆம் ஆண்டுக்கான சாகித்திய விழாவில் எனது “கள்ளத்தோணி” என்கிற நூல் இரண்டாவது பரிசைப் பெற்றுக்கொண்டது.

ஊடகத்துறையில் இன்று சர்வதேச அளவில் பல கருத்தரங்குகளிலும் ஆன்லைன் வகுப்புகளில் ஒரு வளவாளனாகவும் பங்களித்துவருகிறேன்.

நான் இலங்கையில் முழுநேர கள நிலைப் பத்திரிகையாளனாக எட்டு ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறேன். அது போர்க்காலம். போர் நடக்கும் இடங்களுக்கு இரகசியமாக சென்று செய்தி சேகரித்திருக்கிறேன். தொண்ணூறுகளின் மத்தியில் மட்டுக்களப்பு விடுதலைப் புலிகளின் பகுதிகளில் இரகசியமாகச் சென்று பல நாட்கள் அவர்களுடன் தங்கியிருந்து பல உண்மைகளை வெளிக்கொணர்ந்திருக்கிறேன். 

கொழும்பில் மத்திய வங்கி குண்டுவெடிப்பு, தொட்டலங்க குண்டுவெடிப்பு, மருதானை குண்டுவெடிப்பு, தொட்டலங்க எண்ணெய்த்தாங்கி வெடிப்புகள் உள்ளிட்ட பல முக்கிய என்பவை நடந்து சில மணித்தியாலங்களில் சென்று கண்டிருக்கிறேன். அந்த காட்சிகளை பற்றி நேரடியாக எழுதியிருக்கிறேன். பல கொலைகள், துன்புறுத்தல்கள், கைதுகள், சிறைச்சாலை அவலங்கள், போராட்டங்கள், இனவாத நிகழ்வுகள் என்பவற்றை தொடர்ந்து பதிவு செய்திருக்கிறேன். அப்போது தமிழ் தினசரிகள் உண்மைகளை எழுதும் வலிமையைக் கொண்டிருக்கவில்லை. அதுபோல அரசியல் விமர்சனங்கள், திறனாய்வு என்பவை இல்லாத – வளராத காலத்தில் எங்கள் சரிநிகர் ஒன்றே இருந்தது என்பதை இங்கே குறிப்பிட வேண்டும். 

அப்பத்திரிகையில் சிங்களமும் அறிந்த எங்கும் திரிந்து செய்தி சேகரித்து பதிவு செய்யும் ஒரே ஆளாக நானாக இருந்தேன் என்பதை இங்கு நினைவு கூர விரும்புகிறேன்.

அது மட்டுமன்றிஇலங்கையில் வரலாற்றில் 90 களில் தான் ஊடகங்கள் அதிகம் தணிக்கையை எதிர்கொண்ட காலம். எனவே நாங்கள் அத்தநிக்கையை எப்படி எதிர்கொண்டோம் என்பதை தனி நூலாகவே எழுதமுடியும். யுத்தகாலத்தில் தலைநகரில் இருந்து கொண்டு ஒரு தமிழ் பத்திரிகையாக, தமிழ் பத்திரிகையாளனாக எப்படி இயங்கினோம் என்பதற்கு நான் ஒரு நேரடி அனுபவ சாட்சியாக இருக்கிறேன்.

யுத்த காலத்தில் சுதந்திரமாக பத்திரிகையாளர்கள் இயங்குவதற்கான சுதந்திரம் நிலவவில்லை. சுதந்திரமாக சுத்தித் திரியக் கூட முடியவில்லை. எனவே இலங்கையின் தேசியப் பிரச்சினையை எழுதும் பத்திரிகையாளர்கள் பலர் சொந்தப் பெயர்களில் எழுதவில்லை. நான் கூட 13 பெயர்களைப்பயன்படுத்தியிருக்கிறேன். அதுமட்டுமன்றி அலுவலகத்தில் கூட எனது பெயர் என்.எஸ்.குமரன் என்றே அழைக்கப்பட்டேன். அப்படி புனை பெயர்களில் அழைக்கப்பட்டவர்கள் எங்கள் பத்திரிகையில் இன்னும் சிலரும் இருந்தார்கள். ஊடகம் மட்டுமன்றி நான் தலைமறைவு அரசியல் பணிகளிலும் ஈடுபட்டேன். 90 களின் இறுதியில் எனது பெயர்கள் பற்றிய இரகசியங்கள் அத்தனையும் புலனாய்வுத் துறைக்கு கிடைத்திருந்ததை எமது தோழர்கள் உறுதிபடுத்தினார்கள். நான் நாட்டுக்குள் இருப்பது என் உயிருக்கு ஆபத்து என்பதை எச்சரித்து என்னை நாட்டை விட்டு தற்காலிகமாகத் தான் அனுப்பி வைத்தார்கள். அப்படித்தான் புலம்பெயர நேரிட்டது.

சில ஆண்டுகளின் பின்னர் நோர்வே நாட்டில் எனக்கு எனது ஊடக – அரசியல் அச்சுறுத்தல்களின் பின்னணியின் காரணமாக அரசியல் தஞ்சம் பெற்றேன். யுத்தம் முடிந்தாலும் அராஜக அரசின் ஆட்சி முடிவுக்கு வரவில்லை. அது மட்டுமன்றி அன்று விடுதலைப் புலிகளை கட்டுப்படுத்தவும் அழிக்கவும் உருவாக்கப்பட்ட புலனாய்வு, இராணுவ, கட்டமைப்பு கலைக்கப்படவில்லை. அக்கட்டமைப்பு இன்றும் அரசாங்கத்தின் அரசியல் எதிரிகளை நசுக்குவதற்கும் ஒடுக்குவதற்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

பத்தாண்டுகளாக இலங்கை செல்லாமல் யுத்தம் முடிந்து மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர்  2012 ஆம் ஆண்டு முதன் முறை இலங்கை திரும்பினேன் ஆனால் நான் இலங்கை வந்திருப்பதாகவும் என்னைப் போன்றோர் இலங்கை வந்திருப்பதை எப்படி புலனாய்வுப் பிரிவு கண்டுகொள்ளாமல் இருக்கிறது என்று சிங்கள யுத்தப் பத்தி எழுத்தாளர் கீர்த்தி வர்ணகுலசூரிய என்பவர் திவயின பத்திரிகையில் எழுதினார். யுத்தத்துக்குப் பின்னரும் ஊடகவியலாளர்கள் காணாமல் ஆக்கப்பட்டார்கள். கொல்லப்பட்டார்கள், கடத்தப்பட்டார்கள், சித்திரவதை அனுபவித்திருக்கிறார்கள். யுத்தத்தின் பின்னர் தமிழ் பத்திரிகையாளர்களை விட சிங்கள ஊடகவியலாளர்கள் தான் அதிகம் புலம்பெயர்ந்தார்கள் என்பதையும் இங்கே நினைவுபடுத்த வேண்டும்.

அடுத்தது, யுத்தக் காலத்தில் தற்காலிகமாகவென புலம்பெயர்ந்த பல ஊடகவியலாளர்கள் காலப்போக்கில் அந்தந்த நாடுகளில் நிலைபெற்று விட்டார்கள். அவர்களின் பிள்ளைகள் பிறந்து வளருகின்ற நாடாக அவர்கள் குடியேறிய நாடுகள் ஆகிவிட்டன. அவர்களின் பிள்ளைகளுக்கு தமது பெற்றோரின் நாடு என்பது அந்நிய நாடே என்பதை இங்கே உணர வேண்டியிருக்கிறது. தமது பண்பாட்டு – அரசியல் அபிலாசைகளை பிள்ளைகளுக்கு திணிப்பதை தவிர்க்க வேண்டிய நிலைக்கு ஆளானார்கள். பிள்ளைகளின் சுயத்துக்காகவும் விருப்பங்களுக்காகவும் நலன்களுக்காகவும் வந்தேறிய நாடுகளிலேயே தங்கிவிடும் யதார்த்த நிலைக்கு தள்ளப்பட்டார்கள். இதுவே அவர்கள் நாட்டுக்கு நிரந்தரமாக திரும்ப முடியாமல் போனமைக்கு முக்கிய காரணம் எனலாம். 

இதைத் தவிர புலம்பெயர்ந்த பலர் அரசியல் அகதிகள் மட்டுமல்ல மேற்கத்தேய விமர்சனங்களின்படி இவர்கள் பொருளாதார அகதிகளும் கூட. அப்படித்தான் பல இடங்களில் வரவிலக்கனப்படுத்தி வைத்திருக்கிறார்கள். எனவே போருக்குப் பிந்திய இலங்கையில் ஜனநாயகம் மட்டுமன்றி, பொருளாதாரமும் ஸ்திரத்தன்மை இல்லாததால் அவர்கள் வந்தேறிய நாடுகளில் தங்கிவிடுவதே பாதுகாப்பானது என்று உணரத் தலைப்பட்டதும் கூட அவர்களின் நிரந்த நாடு திரும்பல் நிகழாமல் போனமைக்கான காரணம் எனலாம்.

இலங்கையில் சுதந்திரம், ஜனநாயகம், சமத்துவம், நீதி எல்லாமே தொடர்ந்தும் இல்லாது போயுள்ள நிலையில் பல ஊடகவியலாளர்கள் குடியேறிய புலம் பெயர் நாடுகளில் பாதுகாப்பாக இருந்தபடி இயங்கத் தொடங்கினார்கள் என்பதையும் காணலாம்.

No description available.

ஊடகவியலாளர் ரமணன் சந்திரசேகரமூர்த்தி (கனடா)

1995 ஆம் ஆண்டு முதல் ஊடகத்துறையில் பணியாற்ற ஆரம்பித்தேன். 2001 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இயங்கிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் என்ற தமிழ் வானொலியில் பணியாற்றினேன்.

2006ம் ஆண்டு இலங்கை திரும்பிய பின்னர் அமெரிக்காவைத் தளமாக கொண்டியங்கும் இன்ரர் நியூஸ் நிறுவனத்தில் இணைந்து கொண்டேன்.

அதன் செய்திப் பணிப்பாளராக 2010ம் ஆண்டு வரை செயல்பட்டேன். இறுதி யுத்தம் நடைபெற்ற போது மனிதாபிமான செய்திகளை தாங்கிய மீண்டும் வாழ்வோம் என்ற வாராந்த செய்திப் பத்திரிக்கை வீரகேசரியின் துணையோடு வெளியிடப்பட்டது அதன் பின்னர் மகராஜா நிறுவனத்தின் நியூஸ் பெஸ்ட்டின் நவீன ஊடகப் பிரிவின் முகாமையாளராக கடமையாற்றினேன். 

தற்போது நான் புலம்பெயர்ந்து கனடாவில் வாழந்து வருகின்றேன். இங்குள்ள ஈஸ்ட் எப்.எம் வானொலியின் காலை நேர நிகழ்ச்சித் தொகுப்பாளராக இயங்கிக் கொண்டிருக்கின்றேன். யுத்த காலம் என்பது எல்லோருக்கும் சாவால் மிக்கது. ஆனால் ஊடகவியலாளர்களுக்கு அதிகம் என்பதை பல்வேறு அனுபவங்கள் மூலமான நான் உணர்ந்திருக்கின்றேன். 90 களின் பிற்பகுதி கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்திற்கு சவாலானதாக அமைந்திருந்தது.

உண்மைகளை உள்ளபடி கூற முடியாத ஒரு சூழலில் அதனை மாற்று வழிகளின் ஊடக மக்களிடம் கொண்டு சேர்க்கும் வித்தைகளை பயன்படுத்தினோம் அதுவும் கூட அச்சுறுத்தல்களை கொண்டு வந்தது. இறுதி யுத்த காலத்தில் இன்ரர் நியூஸ் மூலமன மனிதாபிமான செய்தி அறிக்கையிடலில் ஈடுபட்டிருந்த போதிலும் அமெரிக்க பிரஜையான சக பணியாளர் ஒருவர் நாடு கடத்தப்பட்ட நிலையும் அதனை தொடரந்து எமது நிறுவனத்தின் ஒவ்வொரு நடவடிக்கையும் கண்காணிக்கப்பட்டு நெருக்கடிக்குள்ளாக்கப்பட்டமையும் மறக்க முடியாத அனுபவங்கள்.

ஊடகவியலாளர்கள் பக்கச்சார்பின்றி இயங்கும் போது பல்வேறு தரப்பினாலும் அழுதங்களை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும். அவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தப்படும் போது ஒருவரை ஒருவர் மாறி மாறி குற்றம் சுமத்தி விட்டு கடந்து செல்லும் நிலையே இருக்கின்றது.

இப்போதும் அந்த நிலை தான் தொடர்கின்றது. அழுத்தங்கள் காரணமாக நான் புலம்பெயரவில்லை. நான் ஊடகத் துறையில் தொடர்ந்து இயங்கினாலும் நான் தகவல் தொழில் நுட்பத் துறை பட்டதாரி மற்றும் ஜெயவர்த்தன பல்கலைக்கழக்தின் முகாமைத்துவ முதுமாணி பட்டம் பெற்றவன்.

எனது குடும்பத்தினதும் முன்னேற்றம் கருதியே கனடாவிற்கு புலம்பெயரும் தீர்மானத்தை எடுத்தேன். நான் எனது துறைசார் அறிவனை பயன்படுத்துவதற்கும் அதன் மூலமாக வளமான வாழ்வினை உருவாக்கும் நோக்கமே என்னை புலம்பெயரச் செய்தது.

இலங்கையில் இல்லாமல் அங்குள்ள சூழல் குறித்து கருத்துச் சொல்வது பொருத்தமற்றது என்றே நம்புகின்றேன். ஆனாலும் ஊடக அடக்குமுறை என்பது எல்லா இடங்களிலும் இருக்கின்றது என்பது மறுக்க முடியாத உண்மை. உலகிற்கு ஜனநாயகம் ஊடக சுதந்திரம் குறித்து பாடம் நடத்தும் பல நாடுகளிலும் ஊடக அடக்குமுறை என்பது ஏதோ ஒரு வடிவத்தில் இருந்து கொண்டே தான் இருக்கின்றது.

அந்த பின்னணியில் இலங்கையிலும் ஊடக அடக்குமுறை என்பது இன்றும் தொடர்கின்றது என்பதை அனைவரும் உணர்வார்கள் அதனை நானும் உணர்கின்றேன்.

No description available.

ஊடகவியலாளர் அமிர்தநாயகம் நிக்ஸன் (இலங்கை)

1998 ஆம் ஆண்டு முதல் வீரகேசரி பத்திரிகையில் ஆரம்பித்த எனது ஊடகப்பணி இன்று வரை தொடர்கின்றது. அத்துடன் வளவாளராகவும் பணியாற்றுகின்றேன். குறிப்பாக அரசியல் பத்திகளை எழுதி வந்துள்ளேன்.

போர்கால செய்தியிடல் தான் முக்கியமானதாக இருந்தது. புலம்பெயர் ஊடக தளங்களிலும் பணியாற்றிய காலமது. போர்க்காலம் என்பதால் நாங்கள் எழுதும் செய்திகள் சுயதணிக்கைக்கு உட்பட்டே எழுதப்படும். ஆன்று அரச தணிக்கை குழுவும் செயற்பட்டதால் நாங்கள் எழுதும் செய்திகள் இக்குழுவிற்கும் அனுப்பி வைக்கப்படும். இதனால் பல செய்திகள் பிரசுரிக்கப்படாமல் போன சந்தர்ப்பங்கள் பலவுண்டு. யுத்த காலத்தில் பணியாற்றிய வேளை பல அனுபவங்கள் எனக்குண்டு. ஆனால் அவற்றுள் பலவற்றினை வெளிப்படையாகச் சொல்ல முடியாது. ஆனால் ஒரு அனுபவத்தினை இங்கு பகிர நினைக்கின்றேன். 2009 இல் உதயன் - சுடரொளி பத்திரிகையின் தலைமையாசிரியர் கடத்தப்பட்ட வேளை நான் பல மணிநேர விசாரனைக்குட்படுத்தப்பட்டேன்.

2000 ஆம் ஆண்டு முதல் என்னுடன் இணைந்து ஊடக சுதந்திரத்திற்கான போராடிய ஊடகவியலாளர்களான சுனந்த தேசப்பிரிய, சனத் பாலசூரிய, போத்தல ஜயந்த, அத்துல விதானகே, பாசன விதானகே, மஞ்சுள வெடிவர்த்தன ஆகியோர் புலம்பெயர்ந்து ஐரோப்பியநாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். 

இவர்களைப் போன்று அழுத்தங்களால் புலம்பெயர்ந்த ஊடகவியலாளர்கள் மீண்டும் தாயகம் திரும்புவதற்கு ஏற்ற சூழல் இதுவரை இல்லை என்று தான் கூறவேண்டும். இன்றும் ஊடகவியலாளர்கள் தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இது குறித்து புலம்பெயர் நாடகளில் வாழும் சிங்கள, தமிழ் ஊடகவியலாளர்கள் சர்வதேச அமைப்புக்கள் சிலவற்றோடு தொடர்ச்சியாக உரையாடிக்கொண்டும் இருக்கின்றனர்.

No description available.

கலாநிதி. சந்திரிகா சுப்ரமணியம் - ஊடகவியலாளர் / சட்டத்தரணி (அவுஸ்திரேலியா)

பலநாடுகளில் அங்கு நிலவும் அசாதாரண அரசியல் ஊழல் குற்றங்கள், போர் வன்முறைகள் காரணமாக ஊடகவியலாளர்கள் தமது ஊடகப்பணியினை மேற்கொள்ளமுடியாமல் அழுத்தங்கள் மற்றும் அச்சுறுத்தல்களால் உயிர் பயம் ஏற்படுகின்றது. தம்மை காப்பாற்றிக்கொள்ள ஊடகத்துறையை விட்டு தாம்  வாழ்ந்த இடத்தை விட்டு விலகி புதிய இடங்களில் தஞ்சமடைகின்ற சூழ்நிலை ஏற்படுகின்றது.

நிலைமை சரியாகினாலும் மீள வருவது பொதுவாக நிகழ்வதில்லை. இதற்கு முக்கிய காரணம் நிலைமை சுமூகமாகிவிட்டாலும் அரசியல்வாதிகளோ அதிகாரிகளோ தமது அதிகாரங்களையும் பதவிநிலைகளையும் பிரயோகம் செய்து பழைய பகைகளை மனதில் இருத்தி தொடர்ந்தும் ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல்களை தொடர்ந்தும் மேற்கொள்கின்றனர். அத்துடன் புலம்பெயர் நாடுகளில் இருந்து கொண்டு அரசு குறித்தும் அதன் நடவடிக்கைகள் குறித்தும் அநீதிகளின் பின்னணியில் உள்ளவர்கள் குறித்தும் விமர்சித்திருக்கலாம். அதற்கு ஏற்றாற்போல் சமூக ஊடகங்களின் பாவனை அதிகரிப்பின் காரணமாக இலகுவாக அடையாளங்காணப்படுகின்றார்கள். இவை கூட இப்பலம்பெயர் ஊடகவியலாளர்கள் மீண்டும் தாயகம் திரும்புவதற்கு அச்சுறுத்தலாக அமைகின்றது. ஓர் நாட்டின் ஜனநாயக ரீதியான செயற்பாடுகள் குறைபாடுடன் காணப்படுமிடத்து, இது குறித்து கேள்வியெழுப்புகின்ற அல்லது விமர்சிக்கின்ற ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தல்களுக்கு தொடர்ந்தும் இலக்காகின்றனர் என்பதே உண்மை

தொகுப்பு - கேஷாயினி எட்மண்ட்