(எம்.மனோசித்ரா)

நாட்டில் விசேட தேவையுடைய 22,000 சிறுவர்களுக்கும், 7 இலட்சத்திற்கும் அதிகமான 16 - 19 வயதுக்கு இடைப்பட்ட மாணவர்களுக்கும் முதற்கட்ட தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கான இரண்டாம் கட்ட தடுப்பூசி வழங்கல் தொடர்பில் நிபுணர்களின் 3 மாத கால மதிப்பீட்டு அறிக்கையின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும். 

அதன் பின்னரே 12 - 15 வயதுக்கு இடைப்பட்ட மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்குவது தொடர்பில் அவதானம் செலுத்தப்படும் என்று இலங்கை சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர்கள் அமைப்பின் தலைவர் விசேட வைத்திய நிபுணர்  ஷாமன் ரஜேந்திரஜித் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள இலங்கை மருத்துவ சங்க தலைமையகத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

நாட்டில் விசேட தேவையுடைய 22,000 சிறுவர்களுக்கு முதற்கட்ட தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. இவர்களில் எவருக்கும் எவ்வித பக்க விளைவுகளும் இதுவரையிலும் ஏற்படவில்லை. 

கடந்த வாரம் இவர்களுக்கான இரண்டாம் கட்ட தடுப்பூசி வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. அதற்கமைய இதுவரையில் சுமார் 3,000 விசேட தேவையுடைய சிறுவர்களுக்கு இரண்டாம் கட்ட தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

நாட்டில் 30,000 விசேட தேவையுடைய தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக எம்மால் கணிப்பிடப்பட்டது. எனினும் இதுவரையில் 22,000 பேருக்கு மாத்திரமே தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. 

எனவே இதுவரையிலும் விசேட தேவையுடைய பிள்ளைகளுக்கு தடுப்பூசி வழங்கப்படாமல் இருந்தால் பெற்றோர் உடனடியாக அவர்களை வைத்தியசாலைகளுக்கு அழைத்து வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம்.

16 - 19 வயதுக்கு இடைப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கும் தடுப்பூசி வழங்கும் பணிகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதற்கமைய கடந்த வாரம் வரை 7 இலட்சத்து 26,000 மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. 

இவர்களிலும் எவருக்கும் பக்க விளைவுகள் பதிவாகவில்லை. இவ்வாறு 1.2 மில்லியன் மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இம்மாத இறுதிக்குள் எஞ்சிய மாணவர்களுக்கும் தடுப்பூசியை வழங்கி நிறைவு செய்ய எதிர்பார்க்கப்படுகிறது.

இவர்களுக்கான இரண்டாம் கட்ட தடுப்பூசி வழங்கல் தொடர்பில் விசேட வைத்திய நிபுணர்களின் 3 மாத கால மதிப்பீட்டு அறிக்கையின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும். அதன் பின்னரே 12 - 15 வயதுக்கு இடைப்பட்ட மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்குவதற்காக சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர்களின் ஆலோசனை கோரப்பட்டுள்ளது. 

இது குறித்த ஆலோசனை கிடைக்கப் பெற்ற பின்னரே குறித்த வயது பிரிவினருக்கு எவ்வாறு தடுப்பூசி வழங்கும் பணிகளை முன்னெடுப்பது என்பது தீர்மானிக்கப்படும் என்றார்.